மேகா- விமர்சனம்

தமிழ்சினிமா, கத்தி முனையில் ரத்தம் பூசிக் கொள்கிற கேடு காலம் இது. நல்லவேளையாக கவலை போக்கும் நகைச்சுவை ட்ரென்ட் படங்களும் நடுநடுவே நுழைந்திருப்பது ரசிகனின் பூர்வஜென்ம புண்ணியம்! இந்த களேபரங்களுக்கு இடையில், மழையில் நனைந்த ஈர வானம் போல எய்ட்டீஸ் டைப் காதல் கதை வந்தால் எப்படியிருக்கும் என்கிற ஏக்கத்தை போக்கியிருக்கிறது மேகா. ஆனால் அந்தளவுக்கு பழசாக அல்ல, அசர வைக்கும் புதுசாக!

படம் நெடுகிலும் மழையும், அந்த மழையில் நனைத்தெடுக்கப்பட்ட வசனங்களுமாக ஒரு அழகான காதல் ஜோடியை காண்பிக்கிறார் இயக்குனர் கார்த்திக் ரிஷி. நிஜமாகவே அவங்க லவ் பண்றாங்களோ… என்று எண்ண வைக்கிறது அவர்களுக்குள் பூக்கும் கெமிஸ்ட்ரி! தமிழ்சினிமாவில் ஏதோ ஒப்புக்கு சொல்லப்படும் இந்த கெமிஸ்ட்ரியை இருவரும் சேர்ந்து ஹிஸ்ட்ரி ஆக்கியிருக்கிறார்கள். இவர்களை இணைத்து கிசுகிசு வந்தால் முதலில் சந்தோஷப்படுவது இந்த படத்தை பார்த்த ரசிகர்களாகதான் இருக்கும்!

தடய அறிவியல் துறையில் வேலை கிடைக்கிறது ஹீரோவுக்கு. இன்டர்வியூக்கு போகிற நேரத்தில் ஒருத்தியை பஸ் ஸ்டாண்டில் பார்க்கிறான். மெல்லிய சாரலாக மழையும், அந்த மழைக்கே ஜலதோஷம் பிடிக்க வைக்கிற அழகுடன் ஒருத்தியும் வெள்ளை குடையுடன் நிற்க, ‘எக்ஸ்யூஸ் மீ. ப்ளீஸ்’ என்று அந்த குடைக்குள் தஞ்சமாகிறான் அவன். அதற்கப்புறம் அந்த குடையும் மழையும் கூட படத்தில் ஒரு கேரக்டர்களாக தன்னை இணைத்துக் கொண்டு பயணிக்க ஆரம்பிக்கிறது. காதல், மழை, குடை, தயக்கம், வெட்கம், எல்லாவற்றையும் இணைக்கிற ரசவாத சக்தியாக இளையராஜாவின் பின்னணி இசை. போதாதா? ரசிகனை ஒரு மயக்க நிலைக்கு தள்ளுகிறது அத்தனையும். படத்தின் துவக்கத்திலேயே காதலி ஐசியூவில். காதலன் ரத்தம் சொட்ட சொட்ட… என்றொரு முடிச்சை போட்டுவிடுகிறார் இயக்குனர். அதைநோக்கி பிளாஷ்பேக்குள் விரிய விரிய… காதல் இயக்குனர் கவுதம் மேனனையும் ஆக்ஷன் இயக்குனர் ஹரியையும் இணைத்து செய்ததை போல அதிவேக இயக்கம் காட்டுகிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் ரிஷி.

ஹீரோ அஸ்வின் முகத்தில் லேசாக எட்டிப்பார்க்கும் குறும்பும், அவர் அவிழ்த்துவிடும் வசனங்களில் வந்து விழும் வம்பு தும்புகளும் இவருக்கும் ஹீரோயின் சிருஷ்டிக்குமான லவ்வை இன்னும் இன்னும் என்று மெருகேற்றுகிறது. பொசுக்கென்று ஹீரோயினிடம், ‘தம்மடிக்கிறியா…? என்று கேட்டுவிட்டு, ஸாரி எங்கிட்ட ஒண்ணுதான் இருக்கு’ என்று சீண்டுவதில் துவங்கி, அவர் பேசும் காதல் வசனங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கவிதை தொகுப்பை வாசித்த நிறைவு. வசனம் எழுதிய விரல்கள் இதற்கு முன் எத்தனை காதல் கடிதங்கள் எழுதி எத்தனை பேரை சாய்த்திருக்குமோ? ஒருத்தி மெல்ல மெல்ல காதலில் விழுவதை இந்த படத்தில் கூறியதை போல வேறெந்த படத்திலும் கூறியதாக நினைவில்லை.

அவ்வளவு நேசிக்கப்பட்ட ஒருத்தி திடீரென காணாமல் போனால் எப்படியிருக்கும்? அவளை தேடி அங்கும் இங்கும் அலைபாயும் அஸ்வினை பார்க்கவே பதறுகிறது. கடத்தல் காரன் இவனா, அவனா, ஏன் இந்த கடத்தல் என்பதையெல்லாம் மெல்ல மெல்ல அவிழ்க்கிறார் இயக்குனர். கடைசியில்? பதற வைக்கும் கிளைமாக்சோடு படம் முடிகிறது.

தப்பு யார் செஞ்சாலும் தப்புதான். அதிகாரத்தில் பெரிய இடத்திலிருந்தாலும் விட மாட்டேன் என்று கமிஷனர் கொலையை துப்பறியும் போதே புரிந்து விடுகிறது, அஸ்வினுக்கு நேரம் சரியில்லை என்று. ஆனால் அவர்கள் இவரது காதலில்தான் கை வைக்க போகிறார்கள் என்பதை அறிந்ததும் மனசு துணுக்கென்று கலவரப்படுகிறது. அதிகம் பதறாமல் நிறுத்தி நிதானமாக நடித்திருக்கிறார் அஸ்வினும்.

கன்னத்தில் விழுகிற இரு குழிகளில் ரசிகர்களை போட்டு புதைக்கிறார் அறிமுக நாயகி சிருஷ்டி. இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் யாரோ? அவ்வளவு அழகு அதில்!

முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் ஜெயப்ரகாஷ்தான் வில்லனாக இருப்பாரோ என்று யோசிக்க வைத்து, திசை மாற்றுகிறார் இயக்குனர். கிரேட்! ஒரு கொலையை கண்ணிமைக்கிற நேரத்தில் செய்துவிட முடியும் என்பதையும் க்ளைமாக்ஸ் நேரத்தில் அசால்ட்டாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். எல்லாம் காதல் தரும் வேகம்!

‘புத்தம் புது காலை’ என்ற இசைஞானியின் எய்ட்டீஸ் பாடல் ஒன்றை இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அவ்வளவு சுகம்… முகிலோ.. மேகமோ… கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா… என்று மேலும் சில பாடல்கள் ராஜாவின் வயசையும் இளமையாக்கியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் உழைப்பில் ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போல பிரகாசிக்கிறது. சமீபத்தில் இவ்வளவு அழகான ஒளிப்பதிவோடு வந்திருக்கும் படம் வேறெதுவும் இல்லை. பாராட்டுகள் குருதேவ்.

காதல் ஆக்ஷன் சென்ட்மென்ட் பாடல்கள் என்று தமிழ்சினிமாவுக்கு தேவைப்படுகிற எல்லாமும் இருக்கிறது மேகாவில்! அள்ளி ருசிக்க வேண்டியது அவரவர் சாய்ஸ்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராகவா லாரன்ஸ் – டாப்ஸி நித்யாமேனன் நடிக்கும் முனி – 3 கங்கா – டிசம்பர் வெளியீடு

காஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவாலாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் முனி -  3 கங்கா படத்தின்  பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக...

Close