நமீதாவிடம் ஆண்கள் தவறாக நடக்க முயன்றால்? இதுதான் கதியாம்…!
தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் பெராக், டத்தோ ஏ.பரமசிவம், டாக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க் ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம். நான் மாடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு. ஏன்மா இந்த ஃபீல்டுக்குள்ளலாம் வர்றே?’ என்ற ரீதியில் கேள்விகள் வந்தன. அவர்களுக்கு நான் சொன்ன பதில் ‘நமீதா என்பது என்னுடைய பெயர். அந்த பெயர் தெரிவதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும். என்னதான் அப்பாவாக இருந்தாலும் அவர் வேறு நான் வேறு தான்’. இப்படி விட்டுக்கொடுக்காமல் போராடியதால் தான் மிஸ்.யுனிவர்ஸில் மூன்றாவது இடம் அளவுக்கு முன்னேற முடிந்தது. இதுபோல இன்றைய பெண்கள் தங்கள் பெயர் தனித்து தெரிய வேண்டும் என்று தங்களுக்கு பிடித்த துறையில் சாதிக்க முயல வேண்டும். என்னுடைய சிறு வயதில் பேருந்துகளில் பயணிக்கும்போது என்னிடம் கூட சில ஆண்கள் தவறாக நடக்க முயற்சிப்பார்கள். அவர்களை விரட்ட நான் பயன்படுத்திய ஆயுதம் சேஃப்டி பின். அது எப்போதுமே என்னுடன் இருக்கும். கொஞ்சம் வளர்ந்த உடன் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்த ஆரம்பித்தேன். சேஃப்டி பின், பெப்பர் ஸ்ப்ரே இரண்டுமே பெண்கள் அவசியம் கையில் வைத்துக்கொள்ள வேண்டியவை. நமக்கான தற்காப்பு ஆயுதங்கள் அவை.
மலேசியாவைச் சேர்ந்த தொழிபதிபர்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். எங்கள் தமிழ்நாட்டில் நிறைய திறமையான இளைஞர்கள் நல்ல நல்ல படங்களை எடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் தரும் சின்னச் சின்ன படங்கள் வெளிவரத் துவங்கி தமிழ் சினிமாவுக்கே ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கிறது. ஒரு சின்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு தயாரிப்பாளரிடம் ஒருவர் கேட்டார்.. நீங்கள் ஏன் படம் எடுக்கிறீர்கள்? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், எத்தனை பணம் இருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒரு படம் எடுத்து அதன் டைட்டிலில் ஒரு ஓரமாக என் பெயர் வந்தால் கூட இந்த சினிமா இருக்கும்வரை என் பெயர் நீடித்து இருக்கும். இதற்காக எவ்வளவு இழந்தாலும் பரவாயில்லை என்றிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கை எங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து படங்கள் தயாரியுங்கள். திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். காலத்தால் அழியாப் புகழடையுங்கள். இந்த படத்தை மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் செல்வமுத்து, கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுநாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். மலேசிய தமிழ் மக்களின் முகவரியான ஆஸ்ட்ரோ தனது சக நிறுவனமான TGV நிறுவனங்கள் மூலம் முதன்முறையாக 40 திரையரங்குகளில் தற்காப்பு திரைப்படத்தை வெளியிடுகிறது. தாங்கள் வைத்திருக்கும் 240 திரையரங்குகளில் இதுவரை ஆங்கில, ஹிந்தி படங்களை தான் அதிகம் திரையிட்டு வந்தார்கள். தமிழ் படம் அதிக அளவில் திரையிடுவதால் மலேசியாவில் தமிழ் சினிமாவிற்கான மார்க்கெட் பெரிய அளவில் உருவாகி உள்ளது. இதற்கு காரணமான ஆஸ்ட்ரோ திரு.ராஜாமணி அவர்களுக்கும் TGV நிறுவனத்திற்கும் எனது நன்றிகள்!
இந்த படத்தின் நாயகன் சக்திவேல் வாசுவிற்கு தனித்து தெரியும் குரல் அமைந்திருக்கிறது. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என வெற்றி பெற்ற ஹீரோக்களின் குரலைப் போல!. அவர்களைப் போல முக்கிய இடத்தை பிடிப்பார் சக்திவேல் வாசு. இப்படத்தின் இயக்குனர் ஆர்.பி.ரவியை ’பம்பரக் கண்ணாலே’ படத்தில் இருந்த தெரியும். அந்த படத்தில் அவர் உதவி இயக்குனராக இருந்தார். இந்த தற்காப்பு படத்தின் ட்ரைலரை பார்க் கும்போது படம் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாக தெரிகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’’
இவ்வாறு நமீதா பேசினார்.