படம் எடுக்கறது ஒரு துன்பம்னா இவங்களால வேற துன்பம்! அலறும் படக்குழு!
அடுப்புல விழுந்த பல்லியின் நிலைமைதான் அநேக படங்களுக்கு! முடிஞ்ச வரைக்கும் வாட்டி வதைக்காம விட மாட்டோம் என்று திரையுலகத்தை சார்ந்த அமைப்புகளே திட்டமிட்டு செயல்பட்டால், ஐயோ… சினிமாவின் எதிர்காலம் என்னாவது? இப்படியொரு அச்சத்தை நிமிஷத்துக்கு நிமிஷம் வழங்கி திகில் படம் எடுக்கும் சினிமாக்காரர்களுக்கே திகில் சூப் கொடுக்கிறார்கள் இங்கே. முதலில் சென்சார். அப்புறம் வரிவிலக்குக்காக ஒரு குழுவிடம் போராட்டம். அதையும் தாண்டினால் தியேட்டர் மாஃபியாவின் அட்ராசிடி. அதற்கப்புறம் வசூலாகிற தொகையை தியேட்டரிலிருந்து வாங்குவதற்கு ஒரு போராட்டம்.
இப்படி செத்து சீரழிகிற சினிமா தயாரிப்பாளர்களுக்கு சென்சார் கொடுக்கிற முதல் கட்ட அவஸ்தை இருக்கிறதே, சொல்லி மாளாது. ஒரு படத்தின் துவக்க நிலை அவலம்தான் இது.
பொதுவாகவே சென்சார் அமைப்பின் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. தயாரிப்பாளரோ, இயக்குனரோ பெரிய ஆளாக இருந்தால், பெயருக்கு சில கட்டுகளை கொடுத்துவிட்டு அனுப்புவதும், ஏமாந்த சோனகிரிகள் சிக்கினால், ஏறி மிளகாய் அரைப்பதும் சென்சாரின் வாடிக்கையாக இருக்கிறதாம். மெட்ரோ என்ற திரைப்படமும் அப்படி சிக்கிக் கொண்டதாம். செயின் பறிப்பை பின்னணியாக கொண்ட கதை இது. இதில் சிரிஷ் என்ற இளைஞர் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். பாபிசிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். ஆள் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.
சென்சார் ஏகப்பட்ட கட்டுகளை கொடுக்க, நாங்க ரிவைசிங் கமிட்டியில பார்த்துக்குறோம் என்று அங்கிருந்து ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார்களாம். அங்கு சொல்லப்பட்ட பதில்தான் ஐயோடா.
சில படங்களில் ஒரு சில காட்சிகள், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் இருக்கும்,அதனை நீக்கி அல்லது அதை வேறு மாதிரியாகக் காட்சிப்படுத்திப் பின் சான்றிதழ் பெற்று வெளியிடுவார்கள். ஆனால் இப்படத்தினுடைய மையக்கரு நம் சமுதாயத்தின் தன்மைக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. ஆகவே நாங்கள் படத்தை முழுமையாக தடை செய்கிறோம்’, என்றார்களாம்.
ஆனந்த கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
‘காலங்காலமாக சமூகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களை மையமாக வைத்துத் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. மேலும் இந்தப்படம் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு சென்சார் குழுவினர்,படத்தினை வெளியிட சான்றிதழ் அளிக்க வேண்டும்’ என்கிறார். இறுதியாக ஒரு பெரிய்ய்ய்ய்ய ஏ சர்டிபிகேட் கொடுத்து படத்தை வெளியிட அனுமதித்திருக்கிறார்கள்.
சிராய்ப்பு பலம்தான். இருந்தாலும் தப்பிச்சுட்டோம் என்று பெருமூச்சு விடுகிறது படக்குழு.