ரஜினி- மோடி சந்தித்த வேளை…. எரிச்சல் ப்ளஸ் அதிர்ச்சியில் நிருபர்கள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் ரஜினியும் பிரதமர் வேட்பாளர் மோடியும் சந்தித்துக் கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் தன்னை சந்திக்க எவர் வந்தாலும், ‘வாங்க’ என்று வாயார அழைத்து தோளோடு தோள் உரசி போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்தான் ரஜினி. மு.க.அழகிரியும் காங்கிரஸ் பிரமுகர்களும் கூட அவரை சந்தித்தார்கள். மு.க.ஸ்டாலின் வந்த போது கூட‘வாங்க.. ’ என்று அழைத்து விருந்தோம்பல் செய்தார் ரஜினி. அப்படியிருந்தும் இந்த சந்திப்பை பெரும் அரசியல் திருப்பமாக கருத ஆரம்பித்திருக்கிறார்கள் மோடியின் கட்சிக்காரர்கள்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘நான் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, நரேந்திர மோடி நேரில் வந்து என்னை பார்த்தார். அதன்பிறகு வாரா வாரம் என் உடல்நிலை பற்றி போனில் விசாரித்தார். இப்போது அவரும், நானும் சந்தித்ததில் அரசியல் இல்லை. நரேந்திர மோடி உறுதியான தலைவர். சிறந்த நிர்வாகி. அவர் நினைப்பது வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று கூறியிருக்கிறார். ‘மோடி சென்னைக்கு வரும்போது, என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி, அவர் இன்று என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட்டார். ரொம்ப சந்தோஷம். எல்லோருக்குமே தெரியும். மோடி, உறுதியான தலைவர். தகுதியான நிர்வாகி. வருங்காலத்தில் அவர் என்ன நினைக்கிறாரோ, அது வெற்றி பெற என் வாழ்த்துகள். என்றும் கூறியிருக்கிறார் ரஜினி.

முன்னதாக அங்கு திரண்ட பத்திரிகையாளர்கள் அத்தனை பேரையும் ஒரு கார் பார்க்கிங்கில் தள்ளி கேட்டை மூடிவிட்டது போலீஸ். வெளியே வரும்போது புகைப்படம் எடுக்கலாம் என்று வெளியே திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் காத்திருக்க, மோடி ரஜினி வீட்டிற்குள் போன ஐந்தாவது நிமிடத்தில் பேஸ்புக் ட்விட்டரில் இருவரும் வீட்டிற்குள் நிற்பது போன்ற படங்கள் வெளி வந்துவிட்டன. இதனால் வெளியே நின்றிருந்த அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சி.

எப்படி வந்தது அந்த போட்டோக்கள்? வேறென்ன… மோடியுடன் உள்ளே சென்ற பாஜக வின் செய்தி தொடர்பு குழுவின் மின்னல் வேக அவசரம்தான் அது.

மோடியின் தலைமையிலான குஜராத் அரசு, தொழில் நுட்பத்தில் முன்னேறியிருப்பதாக எல்லாரும் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு சின்ன போட்டோ விவகாரத்தில் அவரது தொழில் நுட்ப பிரிவு செயல்பட்ட விதம் பாராட்டுகளுக்கு பதில் எரிச்சலையே தந்தது நிருபர்களுக்கு.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பொண்ணு பார்க்க போன இடத்தில் பிரகாஷ்ராஜ் செய்த வேலை!

தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாமல் படமெடுக்கிற வழக்கம் பிரகாஷ்ராஜுக்கு இல்லவே இல்லை. மொழி, பயணம், கவுரவம், அபியும் நானும் என்று இதற்கு அடையாளங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது...

Close