சிலந்தியை தொடர்ந்து அழகி மோனிகாவின் அடுத்த குளியல்! ரசிகர்கள் பரவசம்…
கடந்த சில தினங்களுக்கு முன்…. (டெரராக ஒரு பேக்ரவுண்ட் மியூசிக் கொடுத்துக் கொள்வது அவரவர் இஷ்டம்)
விண்வெளிக்கு ராக்கெட் விட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்ள, ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் புருவ மத்தியில் ‘அடடே..’வாகிப்போனது. அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும், ரம்ஜானுக்கும் ரங்கசாமிக்கும், கிறிஸ்துமஸ்சுக்கும் கிடா பூசாரிக்கும் என்ன சம்பந்தம்? வேறொன்றுமில்லை, இந்த படத்தின் இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஒரு அதிமுக பிரமுகர். அதுமட்டுமல்ல, இலக்கியங்களை தேடி தேடி படிக்கிற ரகம் என்றார்கள். சமீபகாலமாக விஞ்ஞான நாவல்களை அதிகம் படிக்கிறாரோ என்னவோ? மயில்சாமியை கொத்திக் கொண்டு வந்துவிட்டார்.
கோட் சூட் சகிதம் கம்பீரமாக வந்து நின்ற விஞ்ஞானிக்கு சினிமாக்காரர்களின் கூத்து எப்படியிருக்கும் என்பதை அந்த நிமிஷத்தில் புரிய வைத்தார்கள். லைவ் ஷோ டான்ஸ்! மூன்று பாடல்களுக்கு இளம் பெண்கள் குலுங்கி குலுங்கி ஆட, சந்திராயன் விஞ்ஞானி சற்றே மிரண்டுதான் போயிருப்பார். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு படத்தின் பாடல்களையும் கலைக்கும் விஞ்ஞானத்திற்குமான தொடர்பையும் பற்றி அழகாக பேசிவிட்டு போனார்.
படத்தின் பெயர் ‘நதிகள் நனைவதில்லை’. ஆனால் திரையிடப்பட்ட பாடல்களில் எல்லாம் யாராவது ஒரு பெண் நனைந்து கொண்டிருந்தார் மழையில்… அருவியில்… குளத்தில்…! இளமை பொங்கும் திருவிழாவாக இருக்கப் போகிற படம் என்பதை அந்த குளியல் பாடல் காட்சிகளே சொல்லியது. குளித்தது யார், குளிர குளிர நனைந்தது யார் என்றா கேட்கிறீர்கள்? அழகி மோனிகாதான்! சிலந்தி படத்திற்கு அப்புறம், மோனிகா பார்ப்பவர்களுக்கு ஜலதோஷம் பிடிக்கிற அளவுக்கு குளித்திருப்பதும் இந்த படத்தில்தான்.
வந்தால் தும்ம வேண்டியிருக்குமே என்று நினைத்தாரோ, என்னவோ? விழாவுக்கு வரவேயில்லை மோனிகா. அதனாலென்ன? அவரது அழகை பருகிய ரசிகர் கூட்டம் திருப்தியாக கலைந்தது. ஆமாம்… படம் எப்பங்க ரிலீஸ்?