விஜயகாந்த், அர்ஜுன்களுக்கு விட்டாச்சு லீவ்! வேறு டைப்பில் ஒரு மிலிட்டரி படம்!
பாகிஸ்தான் தீவிரவாதிகளையெல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டு ‘போதும்டா சாமி’ என்று அரசியல் பக்கம் ஒதுங்கிவிட்டார் கேப்டன் விஜயகாந்த்! மிச்சசொச்ச அர்ஜுன்களுக்கு தீவிரவாதம் மேல் இன்னும் கொஞ்சம் கொஞ்சம் எரிச்சல் இருப்பதால் கோடம்பாக்கத்தில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ‘மூன்றாம் உலகப் போர்’ என்றொரு படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த், அர்ஜுன் பார்முலா படமாக இது இருக்காது என்ற நம்பிக்கையை படத்தின் டீசரும் பாடல்களும் ஏற்படுத்தியிருக்க, அந்த ஆச்சர்யத்தை மேலும் அகலமாக்குகிறது படத்தின் நாட்!
மூன்றாம் உலகப் போரை நோக்கிதான் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு போர் வரும்போது உலகம் எப்படியிருக்கும் என்பதை திருமணம் ஆகி ஆறே மாதம் ஆன ஒரு இராணுவ வீரனின் வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சுகன் கார்த்தி. முக்கியமாக இந்த படத்தில் இடம் பெறப் போகும் வில்லன்கள், பாகிஸ்தானியர்கள் அல்ல. சீனர்கள்! எதிர்காலத்தில் இந்தியா சந்திக்கப் போகும் பேராபத்து சீனாவிடமிருந்துதான் என்கிறது படம். 2015 ல் நடைபெறும் அந்த போரின் போது சீனாவிடம் சிக்கிக் கொள்ளும் அந்த ராணுவவீரன் என்னவாகிறான். அவன் குடும்பம் என்னவாகிறது என்பதெல்லாம் ஒரு பகுதியாக வந்தாலும், மூன்றாம் உலகப்போரின் தீவிரத்தை சொல்லப் போகிற படமாக இது உருவாகியிருக்கிறது.
இப்படியொரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன், டைரக்டர் செய்த முதல் வேலையே பக்கம் பக்கமாக ராணுவம் தொடர்பான விஷயங்களை சேகரித்ததுதான். அது மட்டுமல்ல, இந்திய ராணுவ அதிகாரிகள் சிலரது ஆலோசனைகளையும் கேட்டு கதையை நகர்த்தியிருக்கிறார். அந்த ராணுவ வீரன் கேரக்டரில் நடிப்பதற்கு மக்களுக்கு நன்கு அறிமுகம் இல்லாத ஒருவர் இருந்தால் எவ்வித இமேஜுக்குள்ளும் சிக்காமல் அந்த கேரக்டர் மனதில் குவியும் என்று நினைத்த இயக்குனர், அதற்காக தேர்ந்தெடுத்த இளைஞர்தான் சுனில்குமார். உயரமும் உறுதியுமாக இவர் இருப்பதை பார்த்தால், இவரும் ஒரு நிஜ ராணுவ வீரராக இருப்பாரோ என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது. இவருக்கு ஜோடியாக ஆறடி உயர அகிலா கிஷோர் நடித்திருக்கிறார்.
என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது டைப்பான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலை இந்த படத்திற்காக நாட்டுப்பற்றுடன் அமைந்த வரிகளை எழுதி அசர வைத்திருக்கிறார். தேசிய விருதே கிடைக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தில் அரை மணி நேர ரொமான்ஸ் ஜில்லென்று இருந்தாலும், மற்றதெல்லாம் தெறிக்கும் தீ என்கிறார்கள்! வாங்க… கொளுத்துங்க!