அதிக தியேட்டர்கள் வளைப்பு? மிரட்ட வருகிறார் மிருதன் ரவி!
மிரு+தன்=மிருதன்! அதாவது மிருகத்தில் பாதியும், மனிதன் என்பதில் பாதியும் கலந்தால் மிருதன்! இந்த தலைப்பை டைரக்டருக்கு சொன்னதே இப்படத்தில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கிதானாம். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோ. அவருக்கு ஜோடி லட்சுமிமேனன். டிராபிக் போலீஸ்காரராக ஜெயம் ரவியும், டாக்டராக லட்சுமிமேனனும் நடித்திருக்கிறார்கள். இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி முடிச்சுப் போட்டு டூயட் வரைக்கும் போனாரோ டைரக்டர் சக்தி சவுந்தர்ராஜன்? அவருக்கே வெளிச்சம்.
“இதுவரைக்கும் தமிழில் இப்படியொரு படம் வந்ததில்ல. கதை அவ்வளவு புதுசு” என்றார் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். ஜெயம்ரவியின் ஹாட்ரிக் வெற்றிக்குப்பின் வரப்போகும் படமல்லவா? அந்த டென்ஷன் எதுவுமேயில்லை யார் முகத்திலும். அந்தளவுக்கு நம்பிக்கையோடு இந்த படத்தை திரைக்கு கொண்டு வரப்போகிறார்கள். அதுவும் ஜெயம் ரவியின் முந்தைய படங்களை விட அதிக தியேட்டர்களில்…
“வைரஸ் பரவுதல் சம்பந்தமான கதை என்பது மட்டுமல்ல, பொல்யூஷன் பற்றி ஜனங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற படமாகவும் இது இருக்கும். ஒவ்வொரு நாளும் காலை நாலு மணிக்கு மேக்கப் போட ஆரம்பிச்சு மதியம் 12 மணிக்குதான் ஷாட்டுக்கே வருவோம். நியாயமா இந்த படத்திற்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட்டிலிருந்து மேக்கப் மேன்களை வரவழைச்சுருக்கணும். ஆனால் உள்ளூர்லேயே அவ்வளவு வொர்த்தான கலைஞர்கள் இருக்கும் போது எதுக்கு அங்கிருந்து கூட்டிட்டு வரணும்? இங்கயிருக்கிறவங்களையே மேக்கப் போட வச்சோம். நான் மட்டுமல்ல, படத்தில் சுமார் 400 ஜுனியர் ஆர்ட்டிஸ்களுக்கும் மேக்கப் போட வேண்டியிருந்தது. அந்தளவுக்கு கெட்டப் விஷயத்தில் நிறைய மெனக்கெட்டிருக்கோம் என்றார் ஹீரோ ஜெயம் ரவி.
“நோக்கமெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால் எங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நாங்க எதையாவது செய்யணும்ல” என்று இப்படத்திற்கு ஏ. சர்டிபிகேட் கொடுத்துவிட்டதாம் சென்சார்.
நாட்டு மக்களுக்கு நல்ல மெசெஜ் சொல்லியிருக்கிறார்கள். படத்தில் மருந்துக்கு கூட ஆபாசம் இல்லை. அப்புறம் ஏன் இப்படி படுத்தி எடுக்கிறார்களாம்? அதுதான் புரியவேயில்லை படக்குழுவுக்கும். மறு தணிக்கைக்கு போக முடிவெடுத்திருக்கிறார்கள். அங்கு என்ன நடக்குமோ?