மனசை கொள்ளையடிக்கும் டிராவல் கதையில் நம்ம மொட்டை ராஜேந்திரன்!

நாள்தோறும் திரைப்பட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் அதில் ஏதோவொன்றுதான் புத்திக்குள் நுழைந்து அகர் பத்தியை கொளுத்தி வைக்கும். அந்த நறுமணத்தின் நுகர்விலேயே அந்த நாள் கரையும். அந்த இனிய நிகழ்வை செய்துவிட்டு போன நிகழ்ச்சி ‘ஜிப்பா ஜிமிக்கி’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. திரையிடப்பட்ட ட்ரெய்லரும், பாடல்களும், ஒளிப்பதிவும், பாடல் வரிகளும் அப்படியே ஆளையே கபளீகரம் செய்துவிட்டு போனது. படத்தின் இயக்குனர் ராஜசேகர் என்ற புதியவர்.

இவ்வளவு அழகா ஒரு படம்! அதென்னா ஜிப்பா ஜிமிக்கி என்று நாலாந்திரமான ஒரு டைட்டில்? அவரிடமே கேட்டுவிட்டோம். “இல்ல சார்… ஜிப்பா என்பது ஆணின் குறியீடு, ஜிமிக்கி என்பது பெண்ணின் குறீயீடு. அதைதான் அப்படி வச்சுருக்கேன். பெற்றோர்கள் நண்பர்கள் என்பதால் பிள்ளைகளும் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் பெற்றோர். அதை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த டீன் ஏஜ் பையனும் பெண்ணும், ஒரு லாங் டிராவல் போகலாம்… அந்த பயணத்தில் ஒரு வேளை நாம் காதலிக்க ஆரம்பித்தால் கல்யாணம் செய்து கொள்ளலாம். அல்லது பிரிந்துவிடலாம் என்று கிளம்புகிறார்கள். இறுதியில் என்ன முடிவெடுத்தார்கள் என்பதுதான் கதை” என்றார். ஹீரோவாக க்ரிஷ்ஷிக் திவாகர் என்ற புதியவரும், குஷ்பு பிரசாத் என்ற அழகியும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

சென்னையில் கிளம்பி, கர்நாடக மாநிலம் கூர்க் வரைக்கும் செல்கிறார்களாம். அந்த கூர்க் பகுதியை அவ்வளவு அழகாக திரையில் வடித்திருந்தார் ஒளிப்பதிவாளர் சரவண நடராஜன். நமது எண்ணத்தை உறுதிபடுத்தியது டைரக்டரின் பேச்சு. சார்… இந்த படம் எப்படி வந்திருக்கோ? ஆனால் முழு படத்தையும் நீங்க கண் இமைக்காமல் ரசிக்க முடியும். அவ்வளவு அழகா ஷுட் பண்ணியிருக்கார் சரவண நடராஜன் என்றார்.

படத்தின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ள வைத்தால், தன் பங்குக்கு இனிமையான இசையால் கலக்கிவிட்டார் இசையமைப்பாளர் ரனிப். இவர் பிரபல இசையமைப்பாளர் தினாவின் தம்பியாம். அதுமட்டுமல்ல, இளையராஜாவிடம் 250 படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யம் ஒன்று… நம்ம மொட்டை ராஜேந்திரன் விவசாயியாக நடித்திருக்கிறார். அவர் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டே பாடுவது போல ஒரு பாடல் காட்சி இருக்கிறது. அதை ரசிக்க கண் கோடி வேண்டும்…

படத்தை சீக்கிரம் காட்டுங்க ராஜசேகர். அந்த சின்ன தியேட்டர்ல பார்த்து ரசித்த அத்தனை பேரும் வெயிட்டிங்…வெயிட்டிங்….!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அட்வான்ஸ் அம்போ! அர்ஜுனிடம் கமிட் ஆன ஒரு அப்பாவியின் ஸ்டோரி?

சுயநலம் என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு திரையில் வெடிக்கும் நட்சத்திரங்கள் நிஜ வாழ்வில் எப்படியிருக்கிறார்கள் பாருங்கள்? சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல போயிருந்தார்...

Close