ரொம்ப நாள் கழிச்சு தனுஷ் சார்ட்ட பேசுறேன்! சிவகார்த்திகேயன் உருக்கம்!

‘சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை’. காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த இந்த தத்துவத்தை ஹார்ப்பிக் போட்டு கழுவி வைத்தார்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மூவரும்! கோடம்பாக்கத்தில் இம்மூவருக்கும் நடுவில் ஒரு மிகப்பெரிய யுத்தம் ஒன்று நடப்பதாக மீடியாக்கள் சொல்லி வந்த நிலையில், மூவரும் ஒரே மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்தது ஒரு அழகென்றால், அவர்களின் மேடைப்பேச்சு அதைவிட அழகு!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கி விரைவில் திரைக்கு வரவிருக்கும் முடிஞ்சா இவனை புடி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படியொரு சுவாரஸ்யம்.

இந்த மேடையை பார்க்கும்போது ‘எனக்கு வால்ட்டர் வெற்றிவேல்’ படத்தின் வெற்றி விழா ஞாபகத்துக்கு வருது. அந்த விழாவில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் மூவரும் ஒரே மேடையில் இருந்தாங்க. இந்த விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மூவரும் ஒரே மேடையில் இருப்பது ஆரோக்கியமான விஷயம் என்றார் டைரக்டர் பி.வாசு.

கே.எஸ்.ரவிகுமார் பற்றியும் படத்தின் ஹீரோ சுதீப் பற்றியும் நிறைய பேசிய சிவகார்த்திகேயன், “என்னை விட மூத்தவர் விஜய் சேதுபதி” என்று குறிப்பிட ஒரே கைதட்டல்! அதோடு விட்டாரா? “எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த விஜய் சேதுபதி என்னைய பார்த்து, செம பிகர்யா நீ” என்று சொன்னதாக சிவகார்த்திகயேன் சொல்ல, செம கலகலப்பானது மேடை! “இந்த விழாவுக்கு எங்களை கூப்பிட்ட கே.எஸ்.ரவிகுமாருக்குதான் நாங்க நன்றி சொல்லணும். நாங்க சந்தித்து பேசறதுக்கு நடுவில் வாய்ப்பே இல்ல. தனுஷ் சார்ட்ட நான் பேசி பல மாதங்கள் ஆச்சு. இப்பதான் பேசினேன்” என்றார் சிவகார்த்திகேயன்.

“சந்தடி சாக்குல என்னை வயசுல பெரியவன்னு சொல்லிட்டேல்ல?” என்று செல்லக் கோபம் காட்டினார் விஜய் சேதுபதி.

“நான் சிவா கூட நடிச்சுட்டேன். விஜய் சேதுபதி கூடதான் இன்னும் நடிக்கல. நடிக்கணும்னு பல முறை நினைச்சிருக்கேன். அது இனிமேதான் நிறைவேறப் போகுது” என்றார் தனுஷ்.

முன்னதாக பேசிய கே.எஸ்.ரவிகுமார், “நான் இந்த மூன்று பேர் ஹீரோவாக நடிக்கும் படத்திலேயும் இப்ப நடிச்சுட்டு இருக்கேன். அதுக்காக மட்டும் அவங்களை இங்கே வரவழைக்கல. நான் வெறும் நடிகன் மட்டுமில்ல. இப்பவும் படங்கள் இயக்கிகிட்டுதான் இருக்கேன்னு சொல்றதுக்குதான். புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்” என்று சொல்லி முடிக்க, புரிந்து கொண்டு சிரித்தார்கள் மூவரும்.

மார்க்கெட்டில் முதலிடத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடினால், மனசுக்குள்ள மழை பொழிஞ்ச மாதிரிதான் இருக்கு. அடிக்கடி கூடுங்க சார்ஸ்…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Namadhu – Movie Stills Gallery

Close