முண்டாசுப்பட்டி – விமர்சனம்

ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக!

போட்டோ எடுத்தால் போதும், ஆளே காலி என்று நம்புகிற ஒரு கிராமம். இந்த கிராமத்திற்குள் ஒரு பிணத்தை போட்டோ எடுக்கப் போகும் ஹீரோவும் அவரது தோழனும் என்ன பாடு பாடுகிறார்கள் என்பதுதான் மு.ப. ஒரு செங்கல்லை வைத்துக் கொண்டு காம்ப்ளக்ஸ் தியேட்டரே கட்டுகிற அளவுக்கு பிரமாதமான இயக்குனராக பளிச்சிடுகிறார் அறிமுக இயக்குனர் ராம். தமிழ் படவுலகத்தின் ‘க்ளிக்’குகள் இவர் மீது தொடர்ந்து விழும்!

பல வருடங்களுக்கு முன் அந்த கிராமத்து மனிதர்களை போட்டோ எடுக்கிறார் ஒரு வெள்ளைக்காரர். அதற்கப்புறம் கொள்ளை நோய் வந்து அத்தனை பேரும் காலி. எஞ்சியிருப்பவர்களுக்கு அந்த போட்டோ கருவியால்தான் அத்தனை பேரும் போய் சேர்ந்ததாக எண்ணம் வருகிறது. இந்த எண்ணம் அப்படியே தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. நடுவில் அந்த கிராமத்திலிருக்கும் சாமி சிலையை திருட வரும் திருட்டு கூட்டத்தில் ஒரு விண்கல் வந்து விழ, அவர்களும் இறக்கிறார்கள். அதற்கப்புறம் அந்த விண் கல்லையே தெய்வமாக வழிபடுகிறது ஊர். ஏராளமான கணிம வளங்களை உள்ளடக்கி வைத்திருக்கிற அந்த கல்லை திருட வேறொரு கும்பல் திட்டமிட, ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கல்லும் திருடு போகிறது. போட்டோ எடுக்க ஊருக்குள் போகும் இந்த இளைஞர்கள் கல்லையும் மீட்டு, காதலித்த பெண்ணையும் லபக்கிக் கொண்டு வருவதுதான் க்ளைமாக்ஸ்.

விஷ்ணு விஷால், காளி, இருவருடனும் புதுசாக ஒருவரை கோர்த்துவிட்டிருக்கிறார் இயக்குனர். பெயர் ராமதாசாம். (அண்ணே…இவ்வளவு நாள் எங்கயிருந்தீங்க?) மனுஷன் கொட்டாவி விட்டால் கூட குஷியாகிறார்கள் ரசிகர்கள். அந்தளவுக்கு மிரட்டுகிறது அவரது பாடி லாங்குவேஜ். முனிஸ்காந்த் என்று பெயரை மாற்றிக் கொண்டு சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்று துடிக்கிற கேரக்டர் இவருக்கு. ஊர் தலைவர் இறந்த பின்பு அவரை போட்டோ எடுக்கும் விஷ்ணுவுக்கும் காளிக்கும் பெருத்த அதிர்ச்சி. நெகட்டிவ்வில் பிணத்தின் உருவம் அவுட் ஆஃப் போகசில் இருக்கிறது. தெரிஞ்சா கைய முறிச்சுருவானங்களே… என்று அதிர்கிறார்கள். அந்த நேரம் பார்த்து முனிஸ்காந்த் ஸ்டுடியோவுக்கு வர, அவரை புதுப்படத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கிறோம் என்று ஏமாற்றி, அந்த ஊர் தலைவரின் டெட் பாடி போல போஸ் கொடுக்க வைக்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்டோ கைமாற, ‘தம்பி… தலைவர பிரமாதமா எடுத்திருக்கீங்க. விருந்து சாப்டுட்டுதான் போகணும்’ என்கிறார்கள் ஊர் பெருசுகள். விருந்து சாப்பிடுகிற நேரத்தில் முனிஸ் என்ட்ரி. ‘ஐயய்யோ…சித்தப்பா’ என்று தன் போட்டோவுக்கு முன்பே அவர் கதறி அழ… திடுக்கிடுகிற நேரம் கூட வைக்கவில்லை. முனிசுக்கு உண்மை தெரியவருகிறது. அப்புறமென்ன? ஊரே சேர்ந்து இருவருக்கும் தண்டனை கொடுக்கிறது. என்ன தண்டனை? நடுவில் தான் காதலித்த ஊர் தலைவரின் பேத்தி நந்திதாவுடன் காதல் வளர்ந்ததா? இப்படி விறுவிறுப்பாக போகிறது படம்.

விஷ்ணுவுக்கு வெண்ணிலா கபடிக்குழுவுக்கு பிறகு பெயர் சொல்லிக் கொள்கிற மாதிரியான கேரக்டர் இதில். அந்த பெல்டும், பெல்பாட்டமும், எய்ட்டீஸ் இளைஞனாக நச்சென்று பொருந்திக் கொள்கிறார். அவ்வளவு கடுமையான சூழலிலும் நந்திதாவை பிரிய மனசில்லாமல் எல்லா கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளும்போது பரிதாபம் வர வேண்டுமல்லவா? ஆனால் நெக்ஸ்ட் என்னப்பா…. என்கிற சுவாரஸ்யம்தான் வருகிறது. இவரது துணைக்கு காளி. விறுவிறுவென வளர்ந்து வரும் குணச்சித்திர நடிகர். இந்த படத்தில் அவர் பேசும் வசனங்களுக்கும் மைண்ட் வாய்ஸ்களுக்கும் பிரமாதமான ரீயாக்ஷ்ன் கொடுக்கிறது தியேட்டர். சாமியாரையும் மீசைக்காரரையும் வைத்து இவர் அடிக்கும் காமென்ட்டுகள், யோசித்து அதிர வைக்கிற ‘A’ க்ளாஸ் ரகம்!

அப்புறம் நந்திதா. சிம்பிளான அழகு! அதைவிட சிம்பிளான சிரிப்பு. ஆனால் ஆளையே சாய்த்துவிடுகிற ஏதோ ஒன்று. அதிகம் நடிக்கவோ, டயலாக் பேசவோ வாய்ப்பில்லை என்றாலும், கண்களால் பேசியே காட்சிகளை நிரப்புகிறார்.

குறிப்பிட்ட நால்வருக்கு மட்டுமல்ல, படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்களுக்கு கூட ஒரு ‘டெப்த்’ கொடுக்கிறார் இயக்குனர். அதுவும் படத்தில் வரும் ஒரு சாமியார் கேரக்டர் பாய்ந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. ஒரு மீசைக்காரரின் பெண்டாட்டிக்கும் அந்த ஊரிலிருக்கும் முக்கால் டசன் ஆசாமிகளுக்கும் கள்ளக்காதல் இருப்பதை கதற கதற சிரிக்கவிட்டு சொல்கிறார் டைரக்டர் ராம். ‘கோயில்ல வைச்ச பிறகுதான் சாமி. அதுவரைக்கும் அது கல்லுதான்’ என்று போகிற போக்கில் எழுதப்பட்டிருக்கிற வசனத்தின் வீரியத்திற்கு இணையேது?

ஷீன் ரோல்டன் இசை. பாடல்களில் இருக்கிற வசீகரத்தை விட பின்னணி இசை பொருத்தமாக அசத்தலாக இருக்கிறது. பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும் படத்தில் அவர் கொடுத்திருக்கும் டோர்ன்-ம் அழகு. பீரியட் பிலிம்களுக்கேயுரிய உழைப்பை சின்சியராக கொட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் கோபி ஆனந்த்.

பல்லை கடித்துக் கொண்டு இறுக்கிக் கட்டுகிற ஆக்ஷன் முண்டாசுகளையே பார்த்த நமக்கு, இந்த முண்டாசு…. கலகலப்பான காமெடி டப்பாசு!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Rafeek says

    Neegalum Sun tv mathiriya review pantriga. intha padam sema mokka.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விலகிய கையோடு வெளிநாடு பயணம் குஷ்புவின் ராஜினாமா முடிவை ஏற்குமா திமுக?

கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே திமுக விலிருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார் குஷ்பு. அரசல் புரசலாக மீடியாக்கள் இதை செய்தியாக்கிய போதும் கூட கற்பனையான செய்திகளுக்கு பதிலளிக்க...

Close