கமல் சார் உதவியோட 8 ம் நூற்றாண்டுக்கு போயிட்டேன்! இசையமைப்பாளர் ஜிப்ரான் மகிழ்ச்சி
உத்தமவில்லன் படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜிப்ரான். இந்த படம் மட்டுமல்ல, கமலின் மூன்று படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்க அவர் அழைக்கப்பட்டபோதுதான் ஒட்டுமொத்த திரையுலகமும், பார்றா… அதிர்ஷ்டத்தை என்றது. ஏன்? கமலுடன் புத்திசாலிகள் மட்டுமே வேலை பார்க்க முடியும். அரைகுறைகளுக்கு அங்கு வேலையே இல்லை. இந்த ஒரு அபிப்ராயமே ஜிப்ரானுக்கு கிடைத்த தேசிய விருது என்று கொள்ளலாம். நாளை அதாவது மே 1 ந் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகும் உத்தமவில்லன் படத்தில் பணியாற்றியது குறித்து ஜிப்ரான் கூறுவது என்ன?
“கமல் சாரிடமிருந்து ஒரு ஏகலைவன் மாதிரிதான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்தக் குறுகிய கால திரையுலக வாழ்க்கையை கமல்ஹாசனுக்கு முன் கமல்ஹாசனுக்குப் பின் என தாராளமாகப் பிரிக்கலாம். அவர் கூட இருக்கும் போது ஒரு ஆசிரியர் கிட்ட மாணவன் நல்ல பேர் வாங்க என்னலாம் பண்ணணும்னு நினைப்பானோ அப்படித்தான் நான் இருந்தேன். இந்தப் படத்துக்காக பாலியில இருந்து பல இசைக் கருவிகளை வரவைச்சி பயன்படுத்தினோம். அது எல்லாமே நல்லா வந்திருக்கு.
இரணியன் நாடகம் என்னுடைய அபிமான பாடல். இந்தப் பாடலுக்கு நிச்சயம் திரையரங்குல அற்புதமான வரவேற்பு கிடைக்கும். பாடல்கள்ல கமல் சாரோட நடனமும் நடிப்பும் அவ்வளவு பிரமிப்பா வந்திருக்கு. இந்தப் படத்துக்கு கம்போசிங் ஆரம்பிக்கும் போதே வழக்கமான இசைக் கருவிகள் இல்லாம, புதுசா டிரை பண்ணலாம்னு நிறைய பண்ணியிருக்கோம். 8வது நூற்றாண்டுல வர்ற சம்பவங்களுக்கு ரொம்பவே சுதந்திரமா இசையமைச்சேன். ஏன்னா, அப்ப என்ன மாதிரி இசைக் கருவிகள் இருந்ததுன்னு யாருக்குமே தெரியாது.
இந்தப் படத்துக்காக ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டோம். அந்த உழைப்பு படத்துல கண்டிப்பா தெரியும்,”
இவரை கமல் எந்தளவுக்கு கசிக்கிப் பிழிந்திருப்பார் என்பதை படத்தை பார்க்காமலே, பாடல்களை கேட்காமலே கூட உணர்ந்து கொள்ள முடியும். இருந்தாலும், எந்த சேனலை திருப்பினாலும், எந்த வானொலியை திருப்பினாலும் ஜிப்ரான், கமல் கூட்டணிதான் காதுகளை அள்ளுகிறதே…