முத்துன கத்திரிக்கா விமர்சனம்
“சாமியப் பார்க்க பூவோட போ! சண்டியரை பார்க்க ‘பொருளோடு’ போ!!” இந்த நடைமுறை யதார்த்தத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வேங்கடராகவன். சுந்தர்சிக்கு ஏற்ற கதையோடுதான் அவரை அணுகியிருக்கிறார். நாற்பது வயசை தாண்டியும் பொண்ணு கிடைக்காமல் சுற்றி வரும் அரசியல்வாதியான அவருக்கு, திடீரென தென்படும் பூனம் பாஜ்வா மீது லவ். லவ்வரின் பின்னணியை அறிய பின் தொடர்ந்து போனால், இவர் பள்ளிக்கூட நாளில் டாவடித்தாரே…. அந்த கிரணின் மகள்தான் இந்த பூனம்! கிரணை சைட் அடித்தான் என்பதற்காகவே தன்னால் வெளுக்கப்பட்ட ரவிமரியாதான் பூனத்தின் அப்பா. போதாதா முடிச்சு?
மாமனாரின் மறியலை சமாளித்து, நடுவே எட்டிப்பார்க்கும் சட்டமன்ற தேர்தலில் வென்று, “ஒரு கவுன்சிலருக்கு கூட லாயக்கில்லை” என்று வருங்கால மாமனாரால் அலட்சியப்படுத்தப்பட்டவர் மந்திரியாகவே மாறி, பூனத்தை கை பிடிப்பதுதான் ‘முத்தின கத்திரிக்கா!’ (மலையாளத்தில் வெளிவந்த வெள்ளி மூங்கா படத்தின் தழுவல்தானாம் இது)
மற்ற கேரக்டர்கள் தன்னை எந்தளவுக்கு பிரித்து மேய்ந்தாலும் பிரச்சனையில்லை. படம் ஜெயித்தாக வேண்டும் என்று குனிந்து முதுகை காட்டியிருக்கிறார் சுந்தர்சி. ஆளாளுக்கு பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். “இந்த பிரஷ் ஏன் இவ்ளோ கருப்பாயிருக்குன்னு பார்க்குறீயா, மீச தாடிக்கெல்லாம் அவன் ஹேர் டை அடிக்க யூஸ் பண்ணுறதும்மா இது” என்று வருங்கால மருமகளிடம், மாமியாரே சொல்கிற அளவுக்கு தரைமட்டம் தட்டுகிறார்கள் சுந்தர்சி கேரக்டரை. வளர்ந்து ஒசந்த சுந்தர்சியும், தன் கக்கத்தில் ஒரு பிரீப்கேசுடன் அலைகிறார். உள்ளே திறந்தால் பவுடர் சீப்பு சோப்பு சமாச்சாரங்கள்தான்!
பொதுவாக ஹீரோயின்களுக்கு மட்டுமே யூஸ் பண்ணுகிற கேமிரா பில்டர்களை சுந்தர்சிக்கும் யூஸ் பண்ணியிருக்கிறார் கேமிராமேன். தொழில் உபயத்தால் வழ வழவென இருக்கிறது அவரது முகமும்! “பசுவையும் கன்னுக்குட்டியையும் ஒரே கயித்துல கட்றியேப்பா” என்று படத்திலேயே டயலாக் வைக்கிற அளவுக்கு லாஜிக் பார்க்காமல் புகுந்து விளையாடுகிறார் அவரும். மாமியார் கிரண் தடுக்கி விழ, அவரை மருமகன் சுந்தர்சி தாங்கிப்பிடிக்க, “என்ன நடக்குது இங்கே” என்று அம்மாவையே சதாய்க்கும் மகள்! (ஹ்ம்… இதெல்லாம் சு.சி படத்திற்கே உரிய பார்டர் மீறல். இந்த கலாச்சார கருவாட்டை ‘பரவால்ல பரவால்ல’ என்று ஸ்மெல் பிடிக்கிறது தியேட்டர்)
படத்தில் ஹீரோ ஹீரோயின்கள் கூட முக்கியமில்லை. அந்த வசனங்கள்தான்…! “பரமசிவனுக்கும் பாம்புக்கும் ஒரே வயசுதான். ஆனால் ஜனங்க ஏன் பாம்பை கும்பிடாம பரமசிவனை மட்டும் கும்பிடுறாங்க? அதனால் வயசெல்லாம் ஒரு பிரச்சனையேயில்ல” -அடேயப்பா. வாழ்க்கை தத்துவத்தை இதைவிட வேறெப்படி சுலபமாக சொல்ல முடியும்? வெல்டன் வேங்கடர்.
சுந்தர்சிதான் முத்துன கத்திரிக்கா என்கிறார்கள். நூறு சதவீதம் ஓ.கே. ஆனால் பூனத்தை பார்த்தால் ஏறத்தாழ சுந்தர்சிக்கு பக்கத்தில் வந்து நிற்கிறதே அவரது ஏஜ். இன்னும் கொஞ்சம் வயசு குன்றியவராக இருந்திருந்தால் லாஜிக் முற்று பெற்றிருக்குமே ஐயா? அதற்காக ஒன்றும் வொர்ரி வேண்டாம் மக்கழே… பூனம் பாஜ்வாவை எண்ணெயில் விழுந்த பஜ்ஜிபோல நனைய நனைய விழுங்கலாம். அப்படியொரு ஷேப். அப்படியொரு டாப்!
வடிவேலு, சந்தானம், சூரி இருக்க வேண்டிய இடத்தில் சதீஷ். (எதுக்கு ரெண்டு வரியை வேஸ்ட் பண்ணிகிட்டு. நெக்ஸ்ட்?)
அரசியல் கதைகள் எவ்வளவோ வந்திருந்தாலும், இந்த படத்தில் வருகிற எலக்ஷனும், தேர்தல் தில்லுமுல்லுவும் சற்றே நீளமாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது. தோக்கணும் தோக்கணும் என்று கூறிக்கொண்டே வெற்றியை கைப்பற்றும் சுந்தர்சியின் தந்திரம் அறியாமல் ஸ்ரீமன் அள்ளி அள்ளி செலவு செய்வது ரசனை நம்பர் ஒன்.
விடிவி கணேஷ், சிங்கம்புலி இருவரையும் ஜப்தி ரேட்டில் பிடித்திருப்பார்கள் போல. சற்றே படத்தை கீழிறக்கினாலும், சமாளித்து மேலெழும்புகிறார்கள்.
சுந்தர்சியின் இளமைக் காட்சியில் வரும் அந்த பக்கத்து வீட்டு பெண் அடிக்கடி ஐந்து விரலை காட்டுவது டாட்டா என்று நினைத்தால்… அடப்பாவி, இப்படியொரு விளக்கமா அதற்கு? அங்கு ஆரம்பிக்கிற சிரிப்பு, படம் முழுக்க விரவி பரவியிருப்பது பலமய்யா பலம்!
சற்றே நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர் என்று நம்பப்பட்ட சித்தார்த் விபின், இந்த படத்தில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் காலியாகியிருக்கிறார்! (பேசாம நடிக்கப் போங்க பாஸ்)
கத்திரிக்கா சொத்தைதான். ஆனால் கைப்பக்குவம் காப்பாத்திருச்சே!
-ஆர்.எஸ்.அந்தணன்