யாரும் கொடுக்காத ஹிட்டை எங்க அண்ணன் கொடுப்பாருடா!

‘மிருகம்’ படத்தில் அறிமுகம் என்றாலும், ‘ஈரம்’தான் ஆதியின் முதல் ஹிட்! அதற்கப்புறம் ‘அரவான்’ மாதிரி பட்ஜெட் விழுங்கிய படங்களில் நடித்தாலும் அவரை ஒரு பொருட்டாகவே வைத்திருக்கவில்லை தமிழ்சினிமா ரசிகர்கள். இருந்தாலும், தெலுங்கில் முக்கியமான குடும்பத்தை சேர்ந்த ஆதிக்கு தமிழ்சினிமா மீதுதான் தீராக்காதல். ‘யாரும் கொடுக்காத ஹிட்டை எங்க அண்ணன் கொடுப்பாருடா’ என்ற நம்பிக்கையில் ‘யாகாவராயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். யெஸ்… இந்த படத்தின் இயக்குனர் சத்யா பிரபாஸ் ஆதியின் அண்ணன்தான். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய தொகுப்பாளினி அஞ்சனா ‘யா…க்க்க்க்…காவராயினும் நா…க்க்க்க்க்….காக்க’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார். க்-கன்னா மேல அக்காவுக்கு அப்படியொரு ஆசை. இருந்தாலும் அஞ்சனாவின் அழகுக்காகவே வள்ளுவர் மன்னிப்பாராக!

ஆதியின் அப்பா ரவிராஜா பினிசெட்டி, தெலுங்கில் சுமார் ஐம்பது படங்களுக்கு மேல் இயக்கிய முக்கியமான இயக்குனர். பாரம்பரியமான சினிமா குடும்பமாம் அவர்களுக்கு. இந்த சத்யா பிரபாஸ் உலகின் தலைசிறந்த பிலிம் இஸ்ட்டியூட்டான அமெரிக்கன் பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தவர் என்றார்கள். அதை இத்துனூண்டு ட்ரெய்லரிலேயே நிரூபித்திருந்தார் அவரும். செம விறுவிறுப்பான ட்ரெய்லர் அது. அதற்கப்புறம் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும், அதன் ட்யூனும் ரிதமும் மனசை கொள்ளையடித்தது. நடன அமைப்பாளர் தினேஷ் கைதட்டல் பெறுகிற அளவுக்கு ஸ்டெப் அமைத்திருந்ததையும் குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு படம் சட்டென்று மனசுக்குள் உட்கார்ந்து கொள்வதற்கு என்னெல்லாம் தேவையோ? அத்தனையும் இருந்தது அந்த துளியூண்டு ட்ரெய்லருக்குள். மெயின் பிக்சர் பார்க்க எல்லாருமே தவிக்கிற நேரத்தில்தான் அந்த சிறப்பான செய்தியையும் மேடையில் அவிழ்த்தார்கள். பிரபல இந்தி நடிகர் மிதுன்சக்கரவர்த்தி இதில் மும்பை முதலியார் என்கிற முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இதுவரை மூன்று முறை தேசிய விருது வாங்கிய நடிகர் அவர். அதுமட்டுமா? இதுவரை எத்தனையோ தமிழ் படங்களில் நடிக்க அழைத்தபோதெல்லாம் மறுத்து வந்த மிதுன் சக்கரவர்த்தி, இந்த படத்தின் கதையை கேட்டதும், சட்டென ஒப்புக் கொண்டாராம்.

மிருதங்க சக்கரவர்த்தியையெல்லாம் துணிச்சலாக பார்த்த நாம், இந்த மிதுன் சக்கரவர்த்தியை பார்ப்பதற்காக ஒருமுறை தியேட்டருக்குள் நுழைந்துவிட வேண்டியதுதான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அசோக்கை ஸ்கெட்ச் போட்டு தூக்குறாங்களாம்…

"ஸ்கெட்ச்"  இந்த "ஸ்கெட்ச்" சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து "ஸ்கெட்ச்" போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள்.  ஏன், எதற்காக ஹீரோவை தூக்க...

Close