ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கிறான் மிஸ்டர் இறைவன்!

தமிழ்சினிமாவில் தங்கர்பச்சான்களுக்கு பஞ்சமேயில்லை. பேசுவார்கள்… பேசுவார்கள்… மேலும் பேசுவார்கள்! அடுத்தவன் பாக்கெட்டில் வெற்றிலை பாக்கு சமாச்சாரத்தை துப்பி வைக்குமளவுக்கு பேசுவார்கள். அதில் நல்லதும் இருக்கும். ஊசிப்போனதும் இருக்கும். தங்கராவது பரவாயில்லை. பேச்சில்தான் பிரச்சனை. மிஷ்கினின் பாடி லாங்குவேஜே பிரச்சனைதான். அவரது அமெரிக்கா ஸ்டைல் நாகரீகத்தை அமிஞ்சிக்கரையில் அப்ளை பண்ணினால் என்னாகுமோ? அதுதான் இப்போதும்!

பிரச்சனை என்னய்யா..? அதை சொல்லு முதல்ல…

‘தரணி’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் கலைஞர் தொலைக்காட்சி அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மூத்த இயக்குனர், வாழ்நாள் சாதனையாளர், சிறந்த திரைக்கதை கிங் என்றெல்லாம் பாராட்டப்படும் கே.பாக்யராஜ் வந்திருந்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் பலமுறை பாராட்டுகள் பெற்ற மூத்த கவிஞர் முத்துலிங்கம் வந்திருந்தார். அங்குதான் மிஷ்கினும் வந்திருந்தார். பிரபுசாலமனும் அங்கிருந்தார். மேடையில் நாற்காலி போடப்பட்டது. காலக்கிரகம் அங்குதான் கை கொட்டி சிரித்தது. மிஷ்கினை கொண்டு வந்து பாக்யராஜ் பக்கத்தில் அமர வைத்துவிட்டார்கள்.

வந்த வேகத்தில் பொசுக்கென தன் காலை உயர்த்தி இன்னொரு கால் மீது போட்டுக் கொண்ட மிஷ்கின் அதை ஆட்டிக் கொண்டேயிருந்தது கூட பிரச்சனையில்லை. அவர் கால். ஆட்டலாம். ஆனால், அது பக்கத்திலிருந்த பாக்யராஜின் தொடையில் தட்டி, மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தது. முடிந்தளவுக்கு நாகரீகமாக ஒடுங்கி ஒடுங்கி உட்கார்ந்தார் பாக்யராஜ். மிஷ்கின் விட்டால்தானே? பார்த்தவர்கள் அதிர்ச்சியாக அதைவிட பேரதிர்ச்சிக்கு ஆளானார் அவர். இருந்தாலும் மெல்லிய சிரிப்போடு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்.

‘இங்க முத்துலிங்கம் பேசும்போது சொன்னாரு. பாக்யராஜ் கூட சொன்னாரு’ என்று தனது உரையில் அவர்களின் பெயருக்கு பின்னால் ஒரு ‘சார்’ கூட போடாமல் ஒருமையில் விளித்து கரும்புள்ளி பூசிக் கொண்டார் மிஷ்கின். ஆரம்பகால கே.பாக்யராஜை போல தொடர்நது ஏழெட்டு ஹிட்டுகள் கொடுக்கக் கூடிய நிலையில் மிஷ்கின் இருந்தால், அவரது கால் பக்கத்திலிருப்பவரின் மூக்கை உரசியிருக்குமோ என்னவோ?

ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கிறான் மிஸ்டர் இறைவன்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வந்ததுக்கு வயிறார சாப்பிட்டுட்டு கௌம்புங்க… விஜய் சேதுபதி பதிலால் கவலை!

படம் ஓடக்கூட வேண்டாம். அறிமுகமானால் போதும்... அண்ணன், மாமன், சித்தப்பா, பெரியப்பா, கொள்ளு தாத்தா சகிதம் ரசிகர் மன்ற பலகை அடித்துவிடும் இளம் ஆ..கோ நடிகர்களுக்கு மத்தியில்...

Close