விஜய்சேதுபதியுடன் சந்திப்பு! ஆபிசுக்கு திரும்பிய மிஷ்கின் ஒரே காச்மூச்?
பிசாசு படத்தின் தொடர் வசூல், மிஷ்கின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களுக்கு பிறகு அவரது படங்கள் வசூலில் நலிவுற்ற காரணத்தால், மிஷ்கின் என்றாலே சற்றே நடுநடுங்கியது கோடம்பாக்கம். இப்போது அவர் கதை சொன்னால் படம் எடுக்கலாம் என்கிற எண்ணத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் புதுமுகங்களை நடிக்க வைத்து அல்லல் படுவதைவிட, தேர்ந்த நடிகர்கள் அல்லது மார்க்கெட்டில் ஸ்டிராங்காக கால் ஊன்றிய நடிகர்களை வைத்து எடுக்கலாமே என்று நினைத்தாராம் மிஷ்கின்.
விஜய் சேதுபதிகிட்ட பேசலாம் என்று கிளம்பி போயிருக்கிறார். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து ஆபிசுக்கு திரும்பி வந்தவர் ஒரே காச்மூச் என்கிறார்கள். ஏன்? விஜய் சேதுபதி சொன்ன பதில் அப்படியாம்.
‘சார்… நீங்க நல்ல டைரக்டர்தான். திறமையானவர்தான். இல்லேங்கல. ஆனால் உங்க படங்கள் யதார்த்தத்தை விட்டு விலகியிருக்கிற மாதிரி எனக்கு தோணும். நான் அப்படிப்பட்ட கதைகளில் நடிக்க விரும்பல’ என்று கூறி அனுப்பிவிட்டாராம் விஜய் சேதுபதி. ஏன் இப்படியொரு பதிலை சொன்னார் அவர்? நிஜமாகவே அவர் சொன்ன காரணம் உண்மைதானா? என்றெல்லாம் ஆராய்ந்தால், ‘காக்கா முட்ட… காக்க்க்க்கா முட்ட்ட்ட்ட’தான் பதிலாக இருக்கும்.
நிஜத்தில் பெரிய ஹீரோக்கள் மத்தியில் மிஷ்கினின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் பாடி லாங்குவேஜூம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. உரலுக்குள்ள தலைய விடுவானேன்? உள்ளங்கால் வரைக்கும் வலி சுமப்பானேன்? பேசாம ஒதுங்கியிருப்பதே மேல் என்று நினைக்கிறார்களாம் அவர்கள். அதன் விளைவுதான் விஜய் சேதுபதியின் பதிலாக வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
என்னமோ போடா மாதவா?