மிஷ்கின் இயக்கும் படத்தின் பெயர் ‘ பிசாசு ’
ஊரிலிருப்பவர்கள் எல்லாம் சுலபமாக ஆடு மேய்க்க கிளம்பினால், யானை மேய்க்க கிளம்புவார் மிஷ்கின். அவரது சுழி அப்படி. தனது படைப்புகள் வழக்கமானதாக இருந்துவிடக் கூடாது என்பதில் ஏகப்பட்ட உறுதியுண்டு அவரிடத்தில். சமயங்களில் ஹாலிவுட் கொரியன் படங்களை காப்பியடிக்கிற அளவுக்கு கூட போகிறது இந்த கொள்கை வெறி. இருந்தாலும், நாம் பார்க்காத சிந்திக்காத விஷயங்களை திருடியாவது கொண்டு வருகிறாரே என்கிற திருப்தியோடு அவரது படங்களை செரித்துவிட்டு போவார்கள் ரசிகர்கள்.
இப்படியொரு கெட்டப் பெயர் நமக்கு வந்துவிட்டதே என்பதை அறிந்த மிஷ்கின், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் அதை நேர் செய்துவிட்டார். இது எந்த படத்தின் காப்பியுமல்ல என்று அறிவார்ந்த ரசிகர்களே சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். படம் ஓடுச்சா? (அதுபற்றி மிஷ்கினே கவலைப்படுவதில்லை, நமக்கெதுக்கு?)
ஓநாய்க்கு பிறகு ஒண்டியாகவே தனிமைபட்டு நின்ற மிஷ்கின், அந்த கேப்பில் ஒரு கதையை உருவாக்கி அதை பாலாவிடம் சொல்ல, ‘நம்ம கம்பெனியே இதை தயாரிக்கும்’ என்று கூறியிருந்தார் அவர். சொன்னது சொன்னபடி அந்த படத்தை பற்றிய தகவலை முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பு ‘பிசாசு’ (ஹீரோயின் பிபாஷாபாசுங்களா?) யார் யார் நடிகர் நடிகைகள் என்பதை பின்னர் அறிவிப்பார்களாம். படத்திற்கு இளையராஜாதான் இசை.
ஹாரர் படம் எடுக்க கிளம்பிய பின்பு இளையராஜாவை விட்டு விட்டு வேறெங்கே போவார் மிஷ்கின். இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது நமக்கு கிடைத்திருக்கும் ரகசிய தகவல். எப்படியாவது அதை நிறைவேற்றிடுங்க மிஷ்கின்.