பாட்டிகள் மேக்கப் தாங்க முடியல… மிஷ்கின் பேச்சால் சலசலப்பு!
மாவு மில்லை ஓடவிட்டால் எப்படி படபடவென இரைச்சல் வருமோ? மிஷ்கினின் மேடை பேச்சும் அப்படிதான் இருக்கும். ‘என் அப்பாவ பார்த்தே எட்டு வருஷத்துக்கு மேலாச்சு. ஆனால் இசைஞானி இளையராஜாங்கிற என் இசை தகப்பனை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது’ என்றெல்லாம் அவ்வப்போது குடும்பத்தையும் சேர்த்து அடகு வைத்துவிடுவார். அந்தளவுக்கு உணர்ச்சி குவியலான அவரது மேடை பேச்சு ஒவ்வொரு முறையும் ஏதாவது ஏழரையை கூட்டிக் கொண்டேயிருக்கும்.
நாம் இப்போது சொல்லப் போவது மதுரை சம்பவம்.
சமீபத்தில் அங்கு நடந்த புத்தக திருவிழாவுக்கு போயிருந்தார் இயக்குனர் மிஷ்கின். போன இடத்தில் வழக்கம் போல வாய் பந்தல் போட்டிருக்கிறார். ‘எங்க பாட்டி எனக்கு இருபத்தைந்தாயிரம் கதைகள் சொல்லியிருக்காங்க. அதை நான் ஒவ்வொன்னா படம் எடுத்தாலே ஆயுள் முழுக்க படம் எடுக்கலாம். ஆனால் இப்ப வர்ற பாட்டிங்க எல்லாம் கதையா சொல்றாங்க? அவங்களுக்கு மேக்கப் போடவே நேரம் சரியாயிருக்கு. எல்லா பாட்டியும் தன்னை ஆன்ட்டின்னு கூப்பிடணும்னுதான் ஆசைப்படுறாங்க’ என்று ஏடாகூடமாக பேச, பெண்கள் பகுதியிலிருந்து பலத்த சலசலப்பாம்.
ஒருவர் எழுந்து, ‘மிஷ்கின்… முதல்ல உங்க கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க. அப்பதான் எல்லாரும் மேகப்போட இருக்காங்களா, இல்ல சாதாரணமா இருக்காங்களான்னு தெரியும்’ என்று கூக்குரலிட, ஒரே கசமுசா.
எப்படியோ ஓவர் பேச்சு உலகநாதனை அடக்கி ரயிலேற்றிவிட்டார்களாம்.