நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்- விமர்சனம்

பொற் பந்தல் கிராமத்தில் பொய் பந்தல் போடும் நான்கு போலீஸ் காரர்களும், அவர்களால் அந்த ஊரும் படுகிற பாடுதான் கதை! தெருவுக்கு தெரு காந்தியும் புத்தனுமாக வாழ்கிற ஊரில், எல்லாரையும் களவாணியாக்குகிற கட்டாயம் வருகிறது போலீசுக்கு. ஏன்? ‘ஒரு புகார் கூட வராமல் என்னய்யா ஸ்டேஷன் நடத்துறீங்க? எல்லாரையும் ராமநாத புரத்துக்கு மாத்துறோம். கிளம்புங்க…’ என்கிறது உயரதிகாரிகளின் ஆணை. கலவர பூமியான ராமநாத புரத்துக்கு போய் அல்லல் படுவதைவிட, உள்ளூர்லேயே ஒரு கல்லை தூக்கி போட்டால் என்ன? என்று ஏட்டும் இன்னபிற காக்கிகளும் திட்டம் தீட்டுகிறார்கள். இவர்கள் ஆரம்பித்து வைக்கும் ஒரே ஒரு பிரச்சனையால் ஊரே கந்தல் கோலம் ஆகிறது. நல்லாயிருந்த ஊரை நாசமாக்கிட்டோமே என்று கான்ஸ்டபுள்கள் கவலைப்பட… அவரவர் சட்டையில் காக்கா ஆய் போன வருத்தத்தோடு கிளம்புகிறார்கள் ரசிகர்கள். துணிச்சலான அட்டம்ப்ட்!

அப்படியொரு கிராமம் நிஜத்திலும் இருந்தால் எப்படியிருக்கும் என்கிற ஏக்கமே வந்து விடுகிறது நமக்கு. ஊருக்குள் திருட வரும் திருடனையே கருணையோடு பார்த்து, ‘அவ்வளவு உயரத்திலிருந்து குதிச்சிருக்கீங்க. கை கால் உடைஞ்சுருச்சுன்னா வலிக்காதா தம்பி. இந்தாங்க… இந்த ஜுசை குடிங்க’ என்று அக்கறையோடு கவனிக்கிற மக்களும், சாக்கடை அடைத்திருந்தால் தானே இறங்கி சுத்தம் செய்யும் பஞ்சாயத்து தலைவருமாக தலையை சுற்றி ஒரே அடடேக்களும் ஆச்சர்யங்களுமாக கடக்கிறது காட்சிகள். தெருவில் கிடக்கும் பத்து பவுன் சங்கிலியை கூட, ‘அது பாட்டுக்கு கெடக்கட்டும் தம்பி. தவற விட்டவங்க வந்து எடுத்துட்டு போயிருவாங்க’ என்று அசால்ட்டாக ஒருவர் சொல்லும்போது சிரிப்பை மீறிய ஏக்கமும் கூடவே வருகிறது. எல்லாம் முதல் பாதியில்தான். செகன்ட் ஹாபில் ரணகளமாகிறது ஊர். அது ஏன் ஏன் ஏன்? நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும் என்றுதான் சிம்பிளாக கதையையே சொல்லிட்டாரே அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா?

அந்த நாலு போலீசில் பளிச்சென செயல்படுவது சிங்கம்புலியும், ஹீரோ அருள்நிதியும்தான். தமிழ்சினிமாவில் ஹீரோக்களுக்கென சில லட்சணங்கள், பில்டப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் அந்த ஊர்க்காரர்கள் மாதிரியே பெருந்தன்மையோடு மறந்து இந்த கதைக்குள் ஐக்கியமாகியிருக்கிறார் அருள்நிதி. ஹீரோ இவரா? சிங்கம்புலியா? என்ற பட்டிமன்றம் வைத்தால் முடிவு சொல்வதற்குள் மூச்சு முட்டும். நல்லவேளை… அருள்நிதிக்கு காதல் மற்றும் டூயட்டுகள் இருப்பதால் அவரே ஹீரோ. சிக்கென்று பிட்டிங்காகவும் இருக்கிறார். இவரை காக்கி யூனிபார்மில் பார்ப்பவர்கள் வலுவான ஒரு கதையை தயாரித்துக் கொண்டு வீட்டுக்கதவை தட்டலாம்.

அருள்நிதிக்கு ஜோடி ரம்யா நம்பீசன். முகத்திலிருக்கிற சார்மிங் உடம்பிலும் இல்லாமல் போவதால், இவர் ரம்யா நம்பீசனா, அல்லது ரம்யா கிருஷ்ணனா என்ற தடுமாற்றம் வந்து தொலைக்கிறது. ரம்ஸ்சுக்கு தேவை உடனே… கல்யாணம். இல்லையென்றால் சாப்பாட்டில் கவனம்! இருந்தாலும் இவர்களுக்கு நடுவே பூக்கும் அந்த காதல் முற்றிலும் வித்தியாசம். பாதி நேரம் கனவிலேயே தாலி கட்டி, கனவிலேயே டூயட் பாடுகிறார் அருள்நிதி. சட்டென அந்த வியாதி ரம்யாவையும் ஒட்டிக் கொள்வது அழகு.

பொதுவாகவே சிங்கம்புலிக்கு ஓவர் ஆக்டிங் வியாதியுண்டு. இந்த படத்தில் அவ்வப்போது பொங்க கிளம்பும் அவரை பின்னாலேயே நின்று அடக்கி வாசிக்க விட்டிருக்கிறார் டைரக்டர். நல்லது. ஒரு காமெடி போலீஸ் கண்கலங்குகிற நேரம் நமக்கு சிரிப்பு வரணும் அல்லவா? ஆனால் என்ன நினைத்து அந்த காட்சியை எடுக்க நினைத்தாரோ, அது நிறைவேறியிருக்கிறது. சிங்கம்புலி அந்த ஊரின் நிலை கண்டு கலங்கும் போது, நமக்கும் உள்ளுக்குள் ஒரு ஹக்… (நெஞ்சடைப்பு?)

முதலில் திருடனாக இருந்து பின்பு மனம் மாறி திருந்தி மீண்டும் திருடனாகிவிடும் அந்த நபர் அந்த ஊரையே விரட்டி விரட்டி திருடுவது நகைச்சுவை என்றாலும், நம்ப முடியாத வெட்டி. பல படங்களில் துண்டு துண்டாக வரும் அவருடைய தோளில் இவ்வளவு வெயிட்டான ரோலை ஏற்றி வைத்தமைக்கு பாராட்டுகள்.

களவாணி திருமுருகன், குண்டு ஆர்த்தி இருவரும் மனசில் அச்சடித்துவிட்டு போகிறார்கள். அந்த பெயர் தெரியாத ஜோடி, எவ்வளவு அற்புதமான கிராமம் என்று வேடிக்கை பார்க்க நுழைந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவது நல்ல பினிஷிங். இந்த படத்தை பிறகெப்படி முடிப்பதாம்?

ரெஜின் இசை நம்மை லயிக்க வைக்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் அதிகம் அலட்டல் இல்லை. கதையும் ஒளியுமாக பின்னி பிணைந்திருக்கிறது.

அவ்வப்போது தேங்கி நிற்கும் திரைக்கதையை ‘பட்டி’ பார்த்திருந்தால், இந்த பட்டிக்காட்டு கதை, எல்லாரையும் ஷிப்ட் போட்டு பாராட்ட வைத்திருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தூங்காவனம் தர்றேன்… துயரம் வேண்டாம் லிங்கு! கலகலப்பாக்கிய கமலின் முடிவு?

நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும்...

Close