நானும் ரவுடிதான் – விமர்சனம்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு தயாரிப்பாளர் ‘பெக்கர்’ ஆக்கப்படுகிறார் என்கிற கோடம்பாக்கத்தின் கலெக்ஷ்ன் கோட்பாட்டை, தான் வளர்த்த ரவுடியை கொண்டு புரட்டியெடுக்க வந்திருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். இத…இத… இததான் எதிர்பார்த்தேன் என்று காத்திருந்தது மாதிரி விஜய் சேதுபதியும், நயன்தாராவும், பார்த்திபனும், ஆர்.ஜே.பாலாஜியும் நடித்திருப்பதால், “ரவுடி கையால் நமக்கும் ஒரு குத்து ப்ளீஸ்” என்று வரிசைகட்டி நிற்கிறார்கள் ரசிகர்கள். எவ்வளவு நாளாச்சு இப்படியொரு படம் பார்த்து!
தன் மகன் விஜய் சேதுபதியை போலீஸ் ஆக்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் போலீஸ் அம்மா ராதிகா. அவரோ, போலீசை விட ரவுடி இமேஜ்தான் பெரிசு என்கிற கோணத்திலேயே வளர்கிறார். தன் போலீஸ் அப்பாவை அவமானப்படுத்தி, தன் அம்மாவை கொன்று, தன் காதை செவிடாக்கிய ரவுடியை போட்டுத் தள்ளுவதே லட்சியம் எனத் திரிகிறார் நயன்தாரா. இவரும் விஜய் சேதுபதியும் சந்திக்கிற நேரத்தில் சேதுபதி மனசில் லவ் வர, “உனக்கு நான் வேணும்னா அவனை போட்டுத்தள்ளூ” என்று நயன் காட்டுகிற ரவுடி யார் தெரியுமா? பலே பலே பார்த்திபன். நினைத்தது நடந்ததா? பரபர முடிவு. பக் பக் சிரிப்பு என்று விசேஷமான திரைக்கதையால் அசரடிக்கிறார் விக்னேஷ்சிவன். (எல்லா வகையிலும் நயன்தாராவின் செலக்ஷன் நன்று)
‘மொழி’ ஜோதிகாவுக்கு இணையான ஒரு நடிகை இருந்தா காட்டுங்களேன் என்று இனி யாரும் சவால் விட முடியாது. நயன்தாரா வந்துவிட்டார் அந்த பிளேசுக்கு! அந்த காது கேளாதவர் கேரக்டரை அவ்வளவு அழகாக பிரசன்ட் செய்திருக்கிறார். முதல் காட்சியில் துவங்கி கடைசி காட்சி வரைக்கும், இம்மியளவும் பிசகாமல் செவிட்டு மொழி தொற்றிக் கொள்கிறது அவரை! லேசாக கழுத்தை நீட்டி நீட்டி பேசும் அந்த நுணுக்கமும், கண்களில் படிந்திருக்கும் சோகமும், வெடித்துச் சிதறும் அழுகையும், அவ்வளவு பெரிய பார்த்திபனிடம் கத்தி நீட்டும் துணிச்சலுமாக… வாவ், ஒரு பார்பி பெண்ணை, ஆர்மி பெண்ணாகவும் மாற்றி அழகு கூட்டுகிறார் விக்னேஷ்சிவன்.
தெரிந்தோ தெரியாமலோ டைரக்டர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்திருக்கிறார் நயன்தாராவும். இல்லேன்னா, ‘நான் உன்னை போடணும்’ என்கிற அந்த டயலாக்குக்கு செவி சாய்திருக்குமா நயன்தாராவின் செவிட்டு காது?
இல்லாத தைரியத்தை இருப்பதாக காட்டும் விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’ இமேஜ், நினைத்து நினைத்து ரசிக்கிற ரகம். ஒரே நேரத்தில் அம்மாவையும் காதலியையும் சமாளிக்கிற விதத்தை விடுங்கள். அப்பா இறந்த விஷயத்தையே நயன்தாராவிடம் மறைத்துவிட்டு அவரை சிரிக்க வைக்கிற காட்சியில், ஆனந்தத் துளியும் அழுகைத் துளியுமாய் எட்டிப் பார்க்கிறது கண்ணீர்.
ஒரு நல்ல ரவுடி வேண்டும் என்று தன்னிடமே கேட்கும் நயன்தாராவிடம், நான்தான் அவன் என்று சொல்லி புரிய வைக்க விஜய் சேதுபதி பிரயத்தன படுகிறபோது தியேட்டர் கொலீர் ஆகிறது. இப்படி படம் நிறைய வெடிகளை பற்ற வைத்துக் கொண்டேயிருக்கிறது விஜய் சேதுபதியின் அப்பாவி முகம்.
தன் அகலமான சோல்டர்களில் அசால்டாக தாங்குகிறார் பார்த்திபன். எல்லாம் அந்த கொடூர வில்லன் இமேஜைதான். ஆனால் அவ்வளவு கொடூரமானவரையும் வெறுப்பில்லாமல் ரசிக்க வைக்கிறது அவரது நடிப்பும், அவரே உருவாக்கிக் கொண்ட சில ஜிமிக்ஸ் வசனங்களும். (பார்வதி பூஜையில ஏண்டா கரடிய நுழைக்கிறீங்க? ஒரு சாம்பிள்) பிள்ளை பாசம் பொங்க பொங்க இன்ஸ்பெக்டர் ராதிகா. விஜய்சேதுபதி மேல் அவர் வைத்திருக்கும் அபார நம்பிக்கையும், போட்டுக் கொடுக்கும் கான்ஸ்டபுளிடம் பொறுக்க மாட்டாமல் குமுறுவதுமாக செம்ம… ‘என் புள்ள கொத்தமல்லி கொழுந்துடி’ என்கிற அவரது கொஞ்சலை இன்னொரு முறையும் ரசிக்கலாம்.
பார்த்திபன் மட்டுமல்ல, இரிட்டேட்டிங் இமேஜை வாழ்நாள் சாதனையாக்கிக் கொண்ட ஆனந்தராஜ், மன்சூரலிகான்களை கூட ரசிக்க முடிகிறது. அதுக்காகவே கும்புடுறோம் விக்னேஷ்.
ஆர்யாவுக்கும் சந்தானத்திற்குமான கெமிஸ்ட்ரியை போலவே அமைந்திருக்கிறது விஜய் சேதுபதிக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்குமான காம்பினேஷன். இருவரும் சேர்ந்து ரவுடித் தொழில் வேறு செய்கிறார்கள். நடக்கிற சம்பவங்கள் எல்லாம் யுகேஜி ரகம். சந்தானம் போலவே நிகழ்கால அவஸ்தைகளை வசனங்களில் சேர்த்து கலகலப்பூட்டுகிறார் பாலாஜி. இதே ரூட்ல போங்க ப்ரோ.
இந்த படத்தின் ஆகப்பெரிய அட்டகாசமாக அமைந்திருக்கிறது அனிருத்தின் இசை. வெறும் உருட்டல்கள் மட்டுமல்ல, அற்புதமான மெலடிகளும் தன்னால் முடியும் என்கிறது அவரது ட்யூன்கள். குறிப்பாக ‘தங்கமே…’ பாடல். நடுநடுவே வருகிற பேத்தாஸ் பிட்ஸ்…. அழகு! ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மாதிரி ஒளிப்பதிவாளர்கள் அமைந்தால், இன்னும் பத்து வருஷம் கழிந்த பின்பும் கூட, நயன்தாராவை அடித்துக் கொள்ள அழகிகள் வரப்போவதில்லை.
முதல் படமான போடா போடியில் தடுக்கி விழுந்தாலும், ரவுடி மடியில் விழுந்து பிழைத்துவிட்டார் விக்னேஷ் சிவன்! இந்த காதல் ரவுடிக்கு ஒரு போலீஸ் சல்யூட்!
-ஆர்.எஸ்.அந்தணன்
நானும் ரவுடி தான் படம் அருமையாக உள்ளது. நேரம் போவதே தெரியவில்லை. வசூலிலும் நானும் ரவுடி தான் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது
நல்ல விமர்சனம். ஆனால் சில சமயம் உங்கள் மொழிநடையில் நீங்களே ரொம்ப மயங்கி overa peel பண்ணிட்றீங்க போல! மொழி jothika-nayanthara comparison கூட ok! ஆனால் சந்தானம்-RJ comparison laam too much! goundamani-yodu sathish-ஐ ஒப்பிடுவது போல்! And முன்ன பின்ன அனிருத் melody-ஏ போட்டதில்லை போல் சொல்றிங்க! Po nee po, velichapoove-laam கேட்டதில்லையா நீங்க?!
சந்தானம் காமெடியை அபத்தம்னு கூறும் சிலர், சும்மா மேலோட்டமா ரசிக்கும் சிலர், ஒரு ஒரு கேரக்டர்கும் அவர் மெனக்கெடுவதை பார்ப்பதில்லை! நடை உடை பாவனை என சிறு சிறு விஷயங்களில் கூட வித்தியாசம் காட்டுவார்! ஆர்யா ஜீவா போன்ற நடிகர்களுடன் அவர் கொண்டு வரும் கெமிஸ்ட்ரி அந்தந்த படங்களில் ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட சூப்பரா இருக்கும். அதை இப்படீ லொடலொட காமெடியோடெல்லாம் ஒப்பிடக்கூடாது பாஸு!