நாசர் சார்… சல்யூட்! மருத்துவமனையில் மகன் படப்பிடிப்புக்கு வந்த நாசர்

நாசர் சார்… சல்யூட்!

ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் எழுந்து நின்று இந்த வார்த்தைகளை சொல்லியே ஆக வேண்டும். அந்த கொடூரமான சம்பவம் இனி ஒரு குடும்பத்தையும் தாக்கவே கூடாது என்று எல்லாரையும் பிரார்த்திக்க வைத்தது சில தினங்களுக்கு முன் நடந்த சாலை விபத்து. குருதியும் சதையுமாக நாசரின் மகனை அள்ளிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். இன்னும் அவர் கண்விழிக்கவில்லை. சிகிச்சை தொடர்கிறது.

மஹாபலிபுரத்தின் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, தான் ஓட்டி வந்த கார் மோதி படு காயமுற்றார் நாசரின் மகன் பைசல். இவருடன் காரில் பயணித்த மூன்று நண்பர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட, இவரையும் மற்றொருவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். சேரன், மிஷ்கின், அருண்விஜய் உள்ளிட்ட திரையுலக சொந்தங்கள் அத்தனையும் நாசர் குடும்பத்திற்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் மருத்துவமனை வாசலிலேயே தவம் கிடந்தார்கள். இன்னும் இன்னும் என்று திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்று வந்த வண்ணம் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.

மிகவும் சிக்கலான நிலையில்தான் இருக்கிறாராம் ஃபைசல். அவர் கண் விழிக்கும் நாளுக்காக காத்திருக்கிறார்கள் நாசரும், அவரது மனைவி கமீலா நாசரும், பைசலுடன் பிறந்த சகோதரர்களும். இந்த நிலையில்தான் இன்று சென்னையில் நடந்த உத்தம வில்லன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் நாசர். தனது கால்ஷீட் காலதாமதமானால் அதனால் யாருக்கெல்லாம் சங்கடம் வரும் என்பதை நன்கு உணர்ந்தவர் ஆயிற்றே? அவ்வளவு சோகத்திலும் படப்பிடிப்பில் இறுதி வரை இருந்து முடித்துக் கொடுத்துவிட்டுதான் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

திரையுலகம் நாசரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்த கண்ணியமான தகப்பனை கவலையிலிருந்து மீட்க வேண்டும் ஃபைசல். எல்லாரும் பிரார்த்திப்போம். அதைவிட சிறந்த மருந்து ஏது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆர்யா கொடுக்கும் ஆஃபர்?

‘படித்துறை’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் வைத்தவர் ஆர்யாவின் தம்பி சத்யா. ஆனால் ‘படித்துறை’ வழுக்கி விடவும் இல்லை. வளர்த்தெடுக்கவும் இல்லை. மாறாக படமே பெட்டிக்குள்...

Close