மனசாட்சி இல்லாமல் நடந்த ஆடியோ விழா

சந்தானம்தான் ஸ்ரீகாந்தின் மனசாட்சி என்றால், ‘மனசாட்சி இல்லாமல்’ நடந்த நிகழ்ச்சிதான் அது! சந்தானம் பாதி ஸ்ரீகாந்த் மீதியுமாக நடித்திருக்கும் படம்தான் நம்பியார். சற்றே வித்தியாசமான கதை இது. ஸ்ரீகாந்தின் மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து படம் முழுக்க ஸ்ரீகாந்தையும் அந்த மனசாட்சியையும் ஒன்றாகவே நடமாட விட்டிருக்கிறார் டைரக்டர் கணேஷா. அந்த மனசாட்சி கேரக்டரில்தான் நடித்திருக்கிறார் சந்தானம். வழக்கம் போலவே இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் சந்தானம் ஆப்சென்ட். ஆனாலும், சந்தானம் இல்லாத குறையை போக்கினார் பவர்ஸ்டார் சீனிவாசன். (‘மேடையிலிருக்கிற அண்ணன்களுக்கெல்லாம் என்னோட வணக்கம்’ என்று அவர் சொல்ல, சூர்யாவும் ஜீவாவும் காதோடு காதாக ஏதோ சொல்லி சிரித்தார்கள்)

நல்ல வழியில் போக நினைக்கும் ஸ்ரீகாந்த்தை, அப்படியே நம்பியார் வேலை செய்து கெட்ட பாதைக்கு தள்ளுவதுதான் சந்தானம் என்கிற மனசாட்சியின் வேலை. எப்படியோ அந்த நெகட்டிவ் குணத்தை அழித்து மெல்ல மெல்ல அந்த நம்பியாரின் பிடியிலிருந்து ஸ்ரீகாந்த் விடுபடுவதுதான் க்ளைமாக்ஸ். கணேஷா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா தயாரித்திருக்கிறார்.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பார்த்திபன், சூர்யா, ஆர்யா, ஜீவா, ஷாம், என்று ஒரு பெரிய ஹீரோக்கள் கூட்டமே வந்திருந்தது நிகழ்ச்சிக்கு. அதிலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறாராம் ஆர்யா. ‘நானும் ஆர்யாவும் டென்த்லேர்ந்து கிளாஸ்மெட்ஸ். அவங்க நல்லா படிக்கிற குரூப். நானெல்லாம் நல்லா படிக்காத குரூப். அன்னைக்கு ஆரம்பிச்ச பிரண்ட்ஷிப் இன்னைக்கு வரைக்கும் அப்படியே போகுது. இந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருக்கு. நடிக்கணும்னு கூப்பிட்டப்போ, சம்பளத்தை பற்றி கூட பேசாம வந்து நடிச்சு கொடுத்தார். அவருக்கு என்னோட நன்றி’ என்று ஆர்யாவை புகழ்ந்தார் ஸ்ரீகாந்த்.

‘எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் அதிக பழக்கம் இல்ல. இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு நான் வரணும்னு கேட்டப்ப உடனே வரணும்னு தோணுச்சு. 2002 ல் அவர் பத்திரிகையில் கொடுத்த பேட்டி ஒன்றின் சில வரிகளை நான் மனசுக்குள்ளே குறிச்சு வைச்சுருக்கேன். அந்த பேட்டியில் அவங்க அப்பா சொன்னதா ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார் அவர். எந்த தொழில் செஞ்சாலும் அதில் தீவிரமா இருக்கணும். செருப்பு தைக்கிற வேலை செய்தாலும் அதில் நாம்தான் நம்பர் ஒன்னா இருக்கணும் என்று கூறியிருந்தார். அதைதான் நான் மனசுல அப்படியே வச்சுருக்கேன்’ என்றார் சூர்யா.

படத்தில் சந்தானம் சொந்த குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ‘ஆற அமர…’ என்று தொடங்குகிற அந்த பாடல், டாஸ்மாக் ஏரியாவின் தேசிய கீதமாக இருக்கப் போவது மட்டும் நிச்சயம். பாடிய சந்தானம், எழுதிய விவேகா, இசையமைத்த விஜய் ஆன்ட்டனி, ஆடிய ஸ்ரீகாந்த் என அத்தனை பேருக்கும் ‘ஸ்பெஷல் குடி மகன்கள்’ என்ற பட்டமே தரலாம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏன் வரவில்லை யுவன்? சிறுபடங்கள் என்றால் அலட்சியமா?

இன்று சென்னையில் நடந்த ‘திருடன் போலீஸ்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா. பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா, அப்படத்தின் இசையமைப்பாளர் இல்லாமல் நடந்ததே இல்லை. அந்த...

Close