நாச்சியார் விமர்சனம்

சேது, நந்தா, பிதாமகனுக்கு அப்புறம் பாலாவின் மிடுக்கு, நமுத்துப்போன முறுக்காகிப் போனதில் நமக்கெல்லாம் வருத்தம்தான். ‘பாவம், அவரே கன்பீஸ் ஆயிட்டாரு…’ ரேஞ்சில்தான் இருந்தன அத்தனையும். அதிலும் கடைசியாக வந்த அவரது ‘தாரை தப்பட்டை’, சவட்டு மொக்கைட்டையான பின்பு பாலா என்றாலே ஒருவித அச்சத்தோடுதான் தியேட்டர் பக்கம் ஒதுங்குவான் ரசிகன்.

இந்த கொடூரமான கெட்ட நேரத்தில்தான் மீண்டும் ஒரு பாலா படம். ஆச்சர்யம், ஆனால் உண்மை. இது பாலா படத்தை பார்த்து எடுத்த யாரோ ஒருவரின் படமாக வந்திருக்கிறது. படம் முழுக்க பாலாவை தேடியவர்களுக்கு, ‘போங்கடா நீங்களும் உங்க தேடலும்’ என்கிறார் பாலா.

முதல் காட்சியிலேயே ஒரு கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் செல்கிறது ஒரு கார். அவள் கடத்தப்படுவதாக நினைத்து துரத்துகிறார் அசிஸ்டென்ட் கமிஷனர் ஜோதிகா. இவர்தான் டைட்டில் நாயகி நாச்சியார். விர் விர் விரட்டலுக்குப்பின் மீட்கப்படும் பெண்ணின் கதையை கேட்டால், ‘அட இதுக்கா இம்புட்டு வெரட்டலு?’ என்கிற எண்ணம் வராமலிருக்காது. அதற்கப்புறம் மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய ஜி.வி.பிரகாஷை கைது செய்து மைனர் சிறையில் தள்ளுகிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான அந்தப்பெண், நாச்சியாரின் அன்புக் கஸ்டடியில்.

இன்டர்வெல் சமயத்தில் பிறக்கிற குழந்தைக்கு அப்பன் யார் என்ற கேள்வி முளைக்கிறது. அதை தொடர்ந்த விசாரணைகளில் நாச்சியார் கண்டு பிடிக்கிற அந்த பெரிய மனுஷனுக்கு சட்டம் தரப்போகிற தண்டனையை முந்திக் கொண்டு நாச்சியார் கொடுக்கிற தண்டனை என்ன? இந்த ஒரு இடத்தில் மட்டும் பாலாவின் ரத்தத் தெறிப்போடு படம் முடிய…. ‘இப்பல்லாம் அழுக்குத் துணிய அலசி உடுத்த ஆரம்பிச்சுட்டாரு பாலா’ என்கிற சந்தோஷத்தோடு வெளியே வர முடிகிறது.

நான் நினைக்கறதுதான் எல்லாம். நீதியோ, நேர்மையோ, மனிதாபிமானமோ அதில் மருந்துக்கும் இல்லை என்கிற கேரக்டர் ஜோதிகாவுக்கு. ஒண்டியாளா நின்னு அடிக்கிறார் மனுஷி. ‘முதல்ல அடி… அப்புறம்தான் விசாரணை’ என்கிற அவரது ஸ்டைல் நமக்கும் பிடித்தே போகிறது. அதற்காக ஐந்து நட்சத்திர விடுதியில் ஆஹா… என்று இருக்கும் ஒருவரை ஜட்டியோடு புரட்டிக் கொண்டு போவது பயங்கரம். தப்பு பண்றவன் எவனா இருந்தாலும் அரபு நாட்டு ஸ்டைல்ல தண்டனை இருக்கணும். அப்பதான் திருந்துவானுங்க என்கிற ஜனங்களின் தவிப்பை, திரையில் காட்டுகிற போது கைதட்டவே தோன்றுகிறது.

ஜோதிகாவுக்கு இனி காக்கி யூனிபார்ம் கதைகள் குவியக்கூடும். பதற்றமில்லாமல் தேர்ந்தெடுத்தால் இன்னும் பத்து வருஷத்துக்கு ஜோதிகா கொடிதான். (எதுக்கும் சூர்யாவை விட்டு ஜோதிகாவுக்கு மாறலாமான்னு யோசிங்க ஹரி)

ஜி.வி.பிரகாஷ், அச்சு அசலாக பாலா பிராண்ட் நாயகனாகவே மாறியிருக்கிறார். ஆனால் ‘நாட்ல அம்புட்டு பேரும் நாகரீகமாக இருக்கையில் ஏன் பாலா பட ஹீரோக்கள் மட்டும் கடிச்சுத் துப்புன வெற்றிலை மாதிரியே இருக்காங்க?’ என்கிற கேள்வி எழுகிறது. பட்… தனக்கான கேரக்டரை அக்கறையோடு தாங்கிப் பிடித்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

அறிமுக நாயகி இவானாவுக்கு அப்படியொரு அழகு முகம். நடிப்பும் அட்சர சுத்தமாக வாய்த்திருக்கிறது. (இல்லேன்னா பாலா விட்ருவாரா?)

‘பாலா எதையும் துணிச்சலா பேசுற ஆளுப்பா’ என்கிற வதந்தியை நிரூபிக்க படாத பாடு பட்டிருக்கிறார். முஸ்லீம் பாடல் குறித்த நக்கலும் அவ்விதமே. ஆனால் அதே முஸ்லீம் நபரைக் கொண்டு அதை சொல்ல வைத்திருப்பதன் மூலம், அந்த எண்ணமும் அவுட். ஜோதிகாவை பணியிடை மாற்றம் செய்யும் போலீஸ் கமிஷனர், ‘ஆணவக்கொலை பண்றானுங்கள்ல… உன்னை அந்த ஏரியாவுக்கு அனுப்பணும்’ என்று கூறுகிறபோது சற்றே ஆறுதல்.

சம்பந்தப்பட்ட இளம் ஜோடிக்கே எந்த சந்தேகமும் வராதபோது, ‘உன் குழந்தைக்கு அப்பன் இவன் இல்ல’ என்று சொல்லி எதை சாதிக்கப் போகிறார்கள்? நடு ராத்திரியில் ஜோதிகாவை பார்த்தால் கூட, ‘அந்த குழந்தைக்கு இவன் அப்பன் இல்லேங்கறத சொல்லிட்டியா?’ என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார் அந்த மைதா மாவு! கொடுமை…

அழுத்தமான காட்சிகள் இல்லாத முதல் பாதி, முன்னணி டி.வி சீரியல்களை ஞாபகப்படுத்தினாலும், பின் பாதியில் சுதாரித்துக் கொண்டிருக்கிறார் பாலா. இளையராஜாவின் இசையில் ஒப்புக்கு ஒரு பாடல். பின்னணி இசையில் கூட, போதும்யா இந்தப்படத்துக்கு இவ்வளவு என்றே நிறைவு கொள்கிறார் இசைஞானி.

நச்சென்று வந்திருக்க வேண்டியவள்தான் நாச்சியார்! பட்…?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காட்டேரியை நம்பும் இசையமைப்பாளர்

Close