சூர்யாவுக்கு மாஸ் இருக்கு தெரியும், சூர்யாவோட மாஸ் படம் தெரியுமா நாகார்ஜுனாண்ணே?

தெலுங்கு ஹீரோக்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போதுதான் அவர்கள் எவ்வளவு எளிமையானவர்கள் என்றே புரிகிறது. ஆந்திராவில் அவர்கள் காரை விட்டு இறங்கினால், “பாதத்தை என் தலையில் வைங்க தலைவா…” என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். ஆனால் இங்கே வரும் அவர்கள், “நான் இங்கதான் படிச்சேன்… பாண்டிபஜார் தெரியாதா? மெரீனா பீச் தெரியாதா?” என்றெல்லாம் பேசும்போது, எல்லா அரச மரத்துக்கும் வேர் இங்கேதான் போலிருக்கிறது என்ற சந்தோஷமே வந்துவிடுகிறது. அப்படிதான் சென்னையில் நடந்த தோழா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த நாகார்ஜுனாவை பார்த்த போதும் வந்தது!

சூர்யாவையும் கார்த்தியையும் புகழ்ந்து தள்ளிவிட்டார் அவர்.

“நான் சென்னையில் பிறந்தவன். எனவே நானும் சென்னைக்காரன் தான் என்றுதான் தனது பேச்சையை ஆரம்பித்தார் நாகார்ஜுனா. இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம். கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம் . படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள். அப்போது எனக்கும் எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும்.

இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. சூர்யாவின் படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள். அவ்வளவு பெரிய மாஸ் அவர். அவரது அடுத்த படமான 24 க்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார். (சூர்யாவுக்கு மாஸ் இருக்கு தெரியும், சூர்யாவோட மாஸ் படம் தெரியுமா நாகார்ஜுனாண்ணே?)

பாடல்களை வெளியிட்டுப் பேசினார் சூர்யா.

“எனது 24 படம் பற்றி நிறையப் பேர் அரங்கில் குரல் கொடுக்கிறீர்கள். இன்னும் இரண்டு வாரத்தில் படத்தின் டீசர் வருகிறது. அதுவரை பொறுமை இப்போது தோழா பற்றிப் பேசுவோம் . எல்லோருக்கும் எனது வாழ்த்துகள். நாங்கள் படித்த பள்ளியில் நட்பின் பெருமை சொல்லும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பற்றி அடிக்கடி கார்த்தி வியந்து சொல்வார். கதை, திரைக்கதை, பாடல்கள், படம் எடுக்கப்பட்ட விதம் அனைததையும் பற்றிப் பாராட்டிப் பேசிக் கொண்டே இருப்பார் அயன் படத்தில் கூட நடித்தது முதலே பார்த்து வருகிறேன். தமன்னா சிறந்த உழைப்பாளி மற்றும் திறமைசாலி. அவரது முயற்சியும் உழைப்பும் தான் அவரை உயர்த்தி இருக்கிறது . கோபி சுந்தரின் பாடல்கள் எல்லாமே மிக சிறப்பாக இருக்கிறது. விரைவில் ஒரு படத்தில் அவரோடு சேர்வேன். நாகர்ஜூனா சார் மிகச்சிறந்த மனிதர். ”வாழ்க்கை என்றால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை சந்தோஷமாக எதிர் கொண்டால் பிரச்னை ஓடி விடும்’ என்பார். சொல்கிறபடியே வாழ்பவர். அதனால் தான் இன்னும் இவ்வளவு இளமையாக அழகாக இருக்கிறார். வாழ்க்கையைப் பற்றிய அவரது இந்த அற்புதமான பார்வை, அதைத்தான் நான் அவரிடம் கற்றுக்கொண்டு, பின்பற்ற விரும்பும் விஷயம்” என்றார் .

Read previous post:
ஆறாது சினம்- விமர்சனம்

‘பாக்குறீயா... பாக்குறீயா...?’ என்று கழுத்து நரம்பை புடைத்துக் கொண்டு ஹீரோ கத்த, ‘அடங்குறீயா... அடங்குறீயா...?’ என்று வில்லன் திருப்பி கத்த, நாம் பார்த்து பழகிய போலீஸ் கதைக்கெல்லாம்...

Close