நாய்கள் ஜாக்கிரதை- விமர்சனம்

பாம்பு டைப் அடிக்கிறதையே பார்த்தாச்சு! நாய் சைட் அடிக்கிறதையும் ரசிச்சுருவோமே என்று உட்கார்ந்தாலொழிய நாயின் அற்புதங்கள் எதுவும் நம்மை உசுப்பேற்றவில்லை என்பதை இந்த படத்தின் முதல் தகவல் அறிக்கையாக சமர்ப்பிக்கிறோம் யுவர் ஆனர்…! போயும் போயும் நாயா என்று நினைக்கிற அளவுக்கு இல்லை நாய் வளர்ப்பு சீசன். அதற்கு சீப்பு என்ன? சோப்பு என்ன? கட்டிங் என்ன? பெட்டிங் என்ன? இப்படியான சிட்டி வாழ்க்கையின் செலவுகளை, கிராமத்து ‘முத்து, ராமு, ஜிம்மி வளர்ப்போர் சங்கம்’ ஏக்கத்தோடு கவனிக்கும்! இந்த படத்தில் ஹீரோ சிபிராஜ் நேசிப்பது நாயையா? கட்டிய பொண்டாட்டியையா? இதை நோக்கிதான் படம் ஓடுகிறது என்று நாம் எடுத்துக் கொண்டாலும் அதில் ரசனை பிழையோ, கருத்துப்பிழையோ இருப்பதாக படவில்லை. ஏனென்றால் மனைவி சவப்பெட்டியில் உயிரோடு மூச்சு முட்டிக் கொண்டிருக்க, சிபிராஜுக்கும் நாய்க்கும் செம மான்டேஜ் போடுகிறார் டைரக்டர் ஷக்தி. (ஒருவேளை அந்த மான்ட்டேஜை இவரு போட்ருப்பாரோ என்னவோ?)

சரி போகட்டும்… கதை என்ன?

போலீஸ் அதிகாரி சிபிராஜ், அதிரடியாக ஒரு இருட்டு ஏரியாவில் புகுந்து என்கவுன்ட்டர் செய்கிறார் சிலரை. கட்…! வீட்டில் கால் கட்டு போட்டுக் கொண்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அவர் தலையில், தன் மிலிட்டரி நாயை கட்டிவிட்டுவிட்டு ‘மர்கயா’ ஆகிவிடுகிறார் பக்கத்து வீட்டு மிலிட்டிரிக்காரர். அந்த நாயை வைத்துக் கொண்டு நாயா பேயா அவஸ்தைப்படும் சிபிராஜ், அதன் அருமை பெருமைகளை அப்புறம்தான் உணர்கிறார். அது ஏராளமான மோப்ப சக்தி கொண்ட விசேஷ டாக்! (இந்த நாய்க்கு லடாக் பகுதியில் ஒரு ஃபிளாஷ்பேக் வைத்திருக்கிறார் டைரக்டர். அற்புதம்)

‘நீ எப்போ போலீஸ் வேலையை விடுறியோ, அன்னைக்குதான் நான் உன்னோடு வாழ்வேன்’ என்று கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய் விடும் மனைவி அருந்ததி, வில்லன் கோஷ்டியால் கடத்தப்படுகிறார். அதோடு போச்சா? அவரை உயிரோடு ஒரு சவப்பெட்டியில் அடைத்து அதற்குள் ஒரு கேமிராவையும் பொருத்துகிறது வில்லன் கோஷ்டி. போலீஸ் அதிகாரி சிபிராஜின் பார்வைக்கு அதை அனுப்பி வைக்கும் அவர்கள், ‘இன்னும் ஆறு மணி நேரம்தான் அவ உயிரோட இருப்பா. முடிஞ்சா காப்பாத்திக்க’ என்று கெடு விதிக்க, சவப்பெட்டி இருக்கும் இடம் தெரியாமல் தவிக்கிறார் சிபி. ஒரு க்ளூ கிடைத்து ஊட்டிக்கு பறக்கும் போலீஸ் கோஷ்டியும், விசேஷ நாயும் அருந்ததியை கண்டுபிடித்தார்களா, காப்பாற்றினார்களா என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். ஊட்டியில்தான் அருந்ததி புதைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்த அடுத்த வினாடியே ஊட்டி ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொல்லி தேடும் பணியை முடுக்கி விடாமல், கும்பலாக கிளம்பி எத்தனை மணி நேரமோ ஊட்டிக்கு டிராவல் பண்ணுகிறார் சிபி. அங்கும் காட்டுக்குள் தனியாக சிக்கிக் கொள்ளும் அவர் கையில் துப்பாக்கியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. கூட்டமாக போனவர், ஏன் தனியாக சிக்கினார் என்பதும் புரியவில்லை. மனைவி இப்படி கிடக்கிறாளே என்று மருந்துக்கும் துக்கம் வரவில்லை அந்த இறுகிய முகத்தில். அந்த வில்லன்கள் மட்டுமென்னவாம்? டொப்பு டொப்பு என்று எதையெல்லாமோ சுட்டுத்தள்ளும் அவர்கள், சுட வேண்டிய நேரத்தில் ‘துப்பாக்கிய ரூம்ல வச்சுட்டு வந்துட்டேன். போய் எடுத்துட்டு வர்றீயா’ என்று காமெடி பண்ணுகிறார்கள். அதைவிட கொடுமை, அந்த பெண்களை ஏன் கடத்துகிறார்கள்? பெண்ணாசைக்கா? பணத்திற்காகவா? புரியல சாமீய்…

ஆசை மனைவி சவப்பெட்டிக்குள் உயிரோடு. கணவன் போலீஸ் அதிகாரி. இந்த இரண்டு விஷயத்தையும் வைத்துக் கொண்டு விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கலாம். முழுக்க முழுக்க நாய் மீதே கவனம் வைத்திருக்கிறார்களே ஓழிய, அப்படியே ஒரு ‘கவளம்’ சுவாரஸ்யத்தை திரைக்கதையிலும் வைத்திருக்கலாம் அல்லவா?

ஆங்காங்கே சிரிப்பு மூட்டுவதற்காக மனோபாலா, மயில்சாமிகள் இருக்கிறார்கள். தியேட்டரிலும் சிரிப்பு அலை வீசுகிறது. ஹீரோயின் அருந்ததிக்கு பெரிய வேலையில்லை. சவப்பெட்டிக்குள் மூச்சடக்கி, நமக்கு மூச்சு முட்ட வைக்கிறார். அவருக்கு உடனடி தேவை நல்ல கதையென்பதெல்லாம் அப்புறம். முதல் தேவை டயட்! ஒளிப்பதிவு, சண்டைக்காட்சி, பின்னணி இசை எல்லாமே சிறப்பு.

சிபிராஜ் ரீ என்ட்ரி என்றார்கள். முதலில் அவரை என்ட்ரி ஆகச் சொல்லுங்கப்பா!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீண்டும் ரிஸ்க் எடுக்கிறார் விஜய் சேதுபதி?

சொந்தப்பட ரிஸ்க்கை சந்தித்து மீண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தனது நண்பரை இயக்குனராக்க வேண்டும் என்பதற்காக ‘சங்குதேவன்’ என்ற படத்தை ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். ஒரு...

Close