நண்பேன்டா / விமர்சனம்

சிறைச்சாலையிலிருந்து உதயநிதி தப்பித்து ஓடிவரும் அந்த டெரர் காட்சியோடு துவங்குகிறது படம். ‘ஆஹா… இவரு ரத்தத்திலேயும் ஆக்ஷன் ஓ பாசிட்டிவ்வை ஏத்திட்டாங்களா? இனிமே வௌங்குனாப்ல’தான் என்கிற திகிலோடு உட்கார்ந்திருந்தால், ‘எங்களுக்கு தெரியாத எக்னாமிக்ஸா? ஃபிரண்டு கதையா இருந்தாலும், அதுகுள்ளேயும் ட்ரென்ட்டை நுழைப்போம்ல’ என்று எகிறி சிரிக்கிறார் உதயநிதி. (அதானே பார்த்தோம்…) வழக்கமான காதல் கதையில், வயிறு வலிக்கும் காமெடியை கலந்தால் அதுதான் ‘நண்பேன்டா’. உலகத்திலேயே படத்தின் தலைப்பை வசனத்திற்குள் வம்படியாக நுழைக்காத ஒரே படம் இதுவாகதான் இருக்கும். இருந்துட்டு போவட்டும். அதே நேரத்தில் உதயநிதியின் முதல் படமான ஓ.கே, ஓ.கே… எல்லாருக்கும் ஓகேதான்! ஆனால் அதைவிட்டு நகர மாட்டேன்னா எப்படி?

ஒவ்வொரு ஒண்ணாந்தேதியும் திருச்சியிலிருக்கும் நண்பன் சந்தானத்தை பார்க்க வரும் உதயநிதி, வந்தோமா, தின்னமா, அவருடைய சம்பளத்தை அப்படியே பிடுங்கினோமா? என்று கிளம்பிவிடுவார். இந்த முறை அவர் கண்ணில் நயன்தாரா பட, அப்புறமென்ன? ஹீரோ திருச்சியிலேயே தங்கி, நயன்தாராவின் மனசில் இடம் பிடித்து, அப்படியே அவரை கரம் பிடிப்பது வரை படம் நீள்கிறது. நடுநடுவே அள்ளிப் போடும் ஜோக்குகளின் வலுவில் கதை நகர்கிறது. காதல் என்ற ஒன்று இருந்தால் சண்டை ஒன்றும் இருக்குமே? காதலர்களுக்கு நடுவில் வரும் அந்த மனக்கசப்பு நீங்கி, மறுபடியும் உதயநிதி நயன்தாரா ஒன்று சேர்கையில் படம் என்ட்! படத்தின் ஆகப்பெரிய ரிசல்ட்? நயன்தாரா அக்கவுன்ட்டில் மேலும் சில லட்சம் இளசுகளின் இதயங்கள் டெபாசிட் ஆனதுதான்!

ஒரு ஹீரோயின் மீது ஹீரோவுக்கு காதல் வர மச்சம் சைசுக்கு ஒரு காரணம் இருந்தால் போதுமானது. இங்கு தேங்கிக் கிடக்கும் மழைநீர் அளவுக்கு காரணம் இருக்கிறது. நயன்தாராவின் அந்த அறிமுகக் காட்சி கவித கவித… ஒரு சின்ன திமிரோடு, ஒரு மிடுக்கான நேர்மையோடு, அநீதிக்கு எதிராக அறை விடுகிற அளவுக்கு பொங்கும் கோபத்தோடு வரும் நயன்தாராவை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். நயன்தாரா சொல்லும், ‘ஜெயிலுக்கு போயிட்டு வந்தேன்’ பிளாஷ்பேக் என்னவோ பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் என்று எதிர்பார்த்தால், அட… குட்டி நாய் குலைச்ச மாதிரி அவ்வ்வ்வ்…. பாடல் காட்சிகளில் தன்னை ஓவியம் போல காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெனுக்கு நயன்தாரா தன் சம்பளத்திலிருந்து பெரும் தொகையை ஆன் லைன் டிரான்ஸ்பர் செய்தாலும் தப்பில்லை.

தமிழ்சினிமாவில் விஜய்க்கு பிறகு, அதே வேகத்தோடு ஆடும் இன்னொரு ஹீரோவாக இவ்வளவு சீக்கிரத்தில் இடம் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கப் போவதில்லை. பிரமாதப்படுத்துகிறார் உதயநிதி. லேடீஸ் ஆஸ்டல் வேறொரு இடத்திற்கு மாறுகிறது என்று பொங்கும் இளைஞர் கூட்டத்தில் இவர் பேசும் ஸ்டைல், எதிர்கால மேடைக்கு ட்ரெயலோ என்னவோ? நயன்தாராவை மடக்க உதயநிதி போடும் எல்லா திட்டமும் இளைஞர்களுக்கான காதல் கைடாக இருக்கும். ஒருமுறை ஜெயிலுக்கு போய் பாரு. அதன் கஷ்டம் தெரியும் என்று நயன்தாரா சொன்னதற்கும், இவர் ‘உள்ளே’ போனதற்கும் சம்பந்தமில்லை என்றாலும், அதையும் லவ்வுக்கான உரமாக்கி அதில் ரோஜாவை நடும் உதயநிதியின் சாமர்த்தியத்தை கைதட்டி ரசிக்காமல் என்ன செய்வது?

சந்தானம் படத்திற்கு படம், ஏதோவொரு மேனரிசத்தை கையாள்கிறார். இந்த படத்தில் அவர் சிரிக்கும் அந்த நக்கல் சிரிப்பு, இன்னும் கொஞ்ச காலத்திற்கு இளைஞர்கள் ஏரியாவில் புழங்கும். இவருக்கும் அழகான ஹீரோயினான ஷெரீனை கோர்த்து விட்டிருக்கிறார் டைரக்டர். கலகலக்கும் காட்சிகள்தான் இருவருக்கும். அதுவும் ஷெரின் பஸ்சிற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் அந்த காட்சி(கள்) செம்ம! உதயநிதி நினைத்ததை போல, இன்னும் கொஞ்ச வருடத்திற்கு சந்தானத்துடனான காம்பினேஷன் மாறாவிட்டால், மண்டை காய்ந்துவிடும் ரசிகர்களுக்கு.

என்னது… மனோபாலா வில்லனா? நயன்தாராவையே ஜெயிலுக்கு அனுப்பி விடுவாரா? என்றெல்லாம் அதிர்ச்சியூட்டி ‘தெளிய’ வைக்கிறார் இயக்குனர் ஏ.ஜெகதீஷ், படத்தில் ஒரு காட்சியில் வந்து சிலிர்ப்பூட்டுகிறார் தமன்னா. அவர் குறித்து சந்தானம் பேசும் அந்த டயலாக் வேண்டுமென்றே வைக்கப்பட்ட ஏ வைட்டமின். பாவம்… அந்த புள்ளைக்கு தமிழும் தெரியாது. அதற்குள் புதைந்துகிடக்கும் அர்த்தமும் புரியாது. ஆமாம்… நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருக்கும் அந்த க்யூட் முள்ளங்கி பத்தை யாரு? தமன்னாவை விடவும் அழகு! முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்று கூறுவதற்குள் அவரையும் ஹீரோயினாக்கிடுங்க இயக்குனர்களே…

படத்தில் வரும் வில்லன்கள் எல்லாருமே ‘நாங்க மிரட்டப்போறதில்ல…’ என்பது போல நடந்து கொள்வதால், ரசிகர்களும் மிரளவில்லை. நான் கடவுள் ராஜேந்திரனை என்னவாக காண்பிப்பது என்கிற குழப்பம் இனிவரும் இயக்குனர்களுக்கும் வரப்போவது நிச்சயம்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் எல்லா பாடல்களும் கேட்ட மாதிரியும் இருக்கு. கேட்காத மாதிரியும் இருக்கு. ஆனால் நல்லாயிருக்கு. படத்தின் இரண்டாம் பாதியில் பெருமளவு கத்திரி போட்டிருந்தால், தியேட்டர் கேன்டினில் போண்டாக்கள் ஆறியிருக்கும். கேன்டீன் முதலாளிகள் சார்பில் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு நன்றி. இந்த வகையில் மட்டுமல்ல, எல்லா வகையிலுமே, நண்பேன்டா…. சற்றே ஆறிய போண்டா!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
இந்தா புடிங்க இன்னோவா கார்! இது கொம்பன் பரிசு!

இந்த வாரம் வந்த படங்களில் ‘கொம்பன்’ தாறுமாறான ஹிட்! ‘எதிர்ப்புகளை முறியடித்து’ என்றெல்லாம் விளம்பரங்களில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. நிஜத்தில் அப்படம் வெளிவருவதில் அவ்வளவு சிக்கல்...

Close