புலி ஹிட்டாம்ல? அட்டக்கத்தி நந்திதாவின் அலம்பல்!

படத்தை நம்பி பணத்தை போடுகிற விஷயத்தில் இதுவரை தலையை நுழைக்காமலிருந்தது ஸ்டன்ட் இயக்குனர்கள் மட்டும்தான். அந்த வெற்றிடத்தையும் நிரப்பிவிட்டார் திலீப் சுப்பராயன். தங்கம் சரவணன் இயக்கும் ‘அஞ்சல’ படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். இவரது அப்பா சூப்பர் சுப்பராயன் தமிழ்சினிமாவின் டாப்மோஸ்ட் ஸ்டன்ட் இயக்குனர். அப்பா கூரையை தாண்டினால், பையன் வானத்தை தாண்டுவார் போலிருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களின் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் பல படங்களுக்கு திலீப்தான் ஸ்டன்ட் மாஸ்டர்.

அந்த பழக்கத்தில்தான் இந்த ‘அஞ்சல’ படத்தின் பாடல்களையும் விஜய்யை வைத்தே வெளியிட்டார் திலீப்! விமல் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லரை பார்த்தால், பாய்லரில் கொதிக்கும் டீ மாதிரியே செம சூடாக இருக்கிறது. சொன்ன மாதிரி முழு கதையும் ஒரு டீக்கடையில்தான் நடக்கிறது. ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் அந்த டீக்கடையை ஏதேதோ காரணத்தை வைத்து இடிக்கிறார்கள். அதையடுத்து என்ன நடக்கிறது. அங்கு மீண்டும் கடை வருகிறதா? இதுதான் ‘அஞ்சல’ கதையாக இருக்க வேண்டும்.

“இந்த படம் கண்டிப்பா ஓடும். ஏன்னா இதில் விமல் ஹீரோவா நடிக்கிறாரே…’ என்றொரு தப்பான புள்ளிவிபரத்தை சொல்லி தனக்குத் தானே சிரித்துக் கொண்டார் படத்தின் ஹீரோயின் நந்திதா. (ஏம்மா?) இருந்தாலும் அதற்கான காரணம் என்னவென்பதையும் சொன்னார் நந்திதா. இதற்காகதான் ஆசைப்பட்டாயா படத்தில் விஜய் சேதுபதியோடு நடிச்சேன். அந்த படம் ஹிட். புலி படத்தில் விஜய் சாரோட நடிச்சேன். அந்த படமும் ஹிட். அந்த வி சென்ட்டிமென்ட்டுக்காக சொல்றேன். இந்த விமலுக்கும் வி வருதே என்றார். அவர் சொன்ன மாதிரி விமலின் சமீபத்திய தோல்விகளுக்கு இந்தப்படம் மருந்தாக இருக்கும் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது படத்தில் வரும் சில பாடல் காட்சிகளையும், ட்ரெய்லரையும் பார்த்தபோது.

முதலில் இந்த படத்திற்கு டீக்கடை என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல, சூப்பர் சுப்பராயனின் அம்மா பெயராம். எல்லா சென்ட்டிமென்ட்டையும் தூக்கி சாப்பிடுதே இந்த சென்ட்டிமென்ட்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகர் சங்கத்தில் கலகம் ஸ்டார்ட்? கலைஞர் சந்திப்பும், அதிமுக வினர் கோபமும்!

மூச்சுக்கு நானூறு தடவை “சங்கத்துல அரசியல் வராது” என்றெல்லாம் விஷால் முழங்கினாலும், ‘ஸாரி மை பிரதர்’ ஆக்குவார்கள் போலிருக்கிறது அவரை. வேணாம்னு சொன்னாலும் சரின்னு போகிற குணம்...

Close