அட்டக்கத்தி நந்திதா கையில் வெட்டுக் கத்தி! -இது நமீதா சீசன் 2
சிக்கென ஆன்ட்ராய்டு மொபைல் போல வந்திறங்கினார் அட்டக்கத்தி நந்திதா. அவர் கையில் வெட்டுக்கத்தியை கொடுக்காத குறைதான். ஏன்? அவர்தான் இப்போதெல்லாம் நமீதா மாதிரி திறப்பு விழா நாயகி ஆகிவிட்டாரே? நந்திதா வந்திருந்த இடம் மவுண்ட் ரோடு. வந்ததற்கான காரணம்… மைக்ரோ மினி என்ற மொபைலை செல் விரும்பிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக.
சென்னையில் வடை மழை! (எவ்ளோ நாளைக்குதான் அடைமழைன்னு சொல்வீங்க? மழை டயத்துலதான் வடையும் சூடா விக்குது. அதனாலவும் இப்படி வச்சுக்கலாம்) அவ்வளவு வடை மழையில் அவர் எங்கே சொன்ன நேரத்தில் வந்து சேர்வது? வடபழனி அம்பிகா எம்பையர் ஓட்டலில் இருந்து அவர் மவுண்ட் ரோடு வருவதற்குள் நாலு முறை ச்சோ மழை. ஐந்தாறு முறை மிதம். அதற்குள் சாலையெங்கும் வெள்ளக்காடானது. வந்து சேர்ந்த நந்திதா, வலது காலை நீட்டினால், சென்னை மழையும் செந்நிற அழுக்குமாக சேர்ந்து அவரது காலை முத்தமிட… ஹய்யோவானார் அவர்.
இருந்தாலும், வந்த கடமை முக்கியமாச்சே? எங்கே எங்கே என்று கத்திரிக்கோல் தேடி கட் பண்ண அலைந்தார். பொருத்தமான நேரத்தில் அவரை அரவணைத்து மேலே கூட்டிச் சென்றது கூட்டம். முதல் தளத்திலிருந்த கடையை திறப்பு விழா செய்துவிட்டு நல்ல புள்ளையாய் மொபைல் விளக்க கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார். ‘இந்த மொபைல தண்ணியில போட்டாலும் கெட்டுப்போகாது. நீங்க மழையில நனைஞ்சுகிட்டே பேசலாம்’ என்று அவர் அடுக்கடுக்காக நம்பிக்கை கொடுக்க, மைக்ரோ மிக்ஸ் கடைக்காரர்களுக்கு ஒரே சந்தோஷம்.
மழையில நனைஞ்சா மட்டுமில்ல, நந்திதாவை பார்த்துகிட்டே ஜொள்ளுல நனைஞ்சாலும் செல்போனுக்கு ஆபத்தில்லே என்று கூட்டத்தில் ஒருவர் கமென்ட் அடித்தார். நந்திதாவோ, நமீதாவோ… யாரோ ஒரு ஜிகினா அறிமுகம் செய்து வைத்தால், சிம் கார்டு இல்லாவிட்டாலும், நம்ம டாக் டைம் மொத்தமும் காலி!