நதிகள் நனைவதில்லை – விமர்சனம்
‘காதலிக்காதவர்களிடம்தான் காதல் பத்திரமாக இருக்கிறது’ என்று அண்மைக்காலமாக விளம்பரங்களில் பளிச்சிட்ட வாசகத்திற்கு சொந்தமான படம்! ‘ ரொம்ப பொயட்டிக்கா இருக்குமோ?’ என்கிற சிந்தனையோடு கொட்டாய்குள்ள போகிறவர்களுக்கு, ‘சினிமா எடுக்காதவர்களிடம்தான் சினிமா பத்திரமாக இருக்கிறது’ என்ற எண்ணம் வராமலிருந்தால் ஆச்சர்யம்!
நாகர்கோவில் பகுதியில் நடக்கிறது கதை. வேலை வெட்டிக்கு போகாத ஹீரோ பிரணவ், முதல் காட்சியிலேயே குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். நடுஹாலில் உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் வாயில் எரியும் சிகரெட்டை சொருகி விட்டு அவன் நகர, அந்த சிகரெட் அப்படியே கரைந்து அவர் வாயை சுடுகிறது. அப்படியாப்பட்ட உருப்படாத நாயை அந்த அப்பா திட்டாமல் என்ன செய்வார்? படம் முழுக்க திட்டிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அவன் மீது நமக்கு பரிதாபம் வர வேண்டும் என்று நினைக்கிறார் டைரக்டர் பி.சி.அன்பழகன். இப்படி டைரக்டர் ஒரு பக்கம், கதை ஒரு பக்கமுமாக டிராவல் ஆகி முடிவதற்குள், கெட்ட சொப்பனத்துல கெடா முட்டுன மாதிரியாகிறான் ஒவ்வொரு ரசிகனும்.
ஹீரோவுக்கு வேலையில்லை. ஆனால் காதல் இருக்கிறது. காதலிக்கு காதல் இல்லை. ஆனால் பணத்தாசை இருக்கிறது. காதல் தோல்வியில் ஹீரோ தவிக்கிறான். ஆனால் லட்டு மாதிரி இன்னொருத்தி கிடைக்கிறாள் என்று அது போக்குக்கு படம் நகர்ந்து கொண்டேயிருக்க, ரீலுக்கு நாலு முறை பாலாசிங் குளோஸ் அப்பில் வந்து ‘உருப்புட மாட்ட… உருப்புடவே மாட்ட’ என்று மகனை திட்டிக் கொண்டேயிருக்கிறார். அந்த மகன் எப்படி கடைசியில் உருப்பட்டு தனக்கும் ஊருக்கும் தன் அப்பாவுக்கும் பெயர் வாங்கி தருகிறான் என்பது க்ளைமாக்ஸ்.
பிரணவ் பார்க்க நன்றாக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார். தனது கால் ‘கட்’டாகிவிட்ட உணர்வையும், சின்ன ஸ்டெப் வைத்தால் கூட கட்டை காலுடன்தான் வைக்கிறோம் என்கிற உஷார்தனத்தையும் தவறாமல் செய்துவிடுகிறார். வார்த்தைக்கு வார்த்தை கவிதை போல அவர் பேசியே கொல்லுவதுதான் ஆவ்… இவர் மட்டுமல்ல, படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே டிராஜேந்தர் படத்தில் வருவது போல பழமொழியாக பேசுகிறார்கள். அல்லது அடுக்கு மொழியாக கொட்டுகிறார்கள். ‘மரத்துல புளியங்கா காய்க்கும், மடியில புடலங்காய் காய்க்குமா?’ டைப்பில் எல்லாருமே டயலாக் பேசுவதால், ஒரு கட்டத்தில் அமைதி தேடி டாய்லெட் பக்கம் ஓடலாமா என்றாகிவிடுகிறான் ரசிகன்.
எல்லா படத்திலும் ஒற்றை பாடலுக்கு தொப்புள் காட்டும் ரிஷா என்பவர்தான் இந்த படத்தின் நாயகி. அவர் தொப்புளுக்கு வைக்கிற குளோஸ் அப்பை முகத்திற்கு வைக்க முடிகிறதா? இருந்தாலும் அவரும் கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்குகிறார். இன்னொரு நாயகி மோனிகா கேரக்டர் மட்டும் முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனக்காக சண்டை போட்டதால்தானே பிரணவ் கால் முறிந்தது. ஏன் அவனை காதலிக்கக் கூடாது என்கிற மோனிகாவின் முடிவுக்கு கைதட்டுகிறது தியேட்டர். அதைவிட பலத்த கைத்தட்டல் மோனிகாவும் பிரணவும் ஆடும் அந்த மழை பாட்டுக்குதான். பாடலுக்கான ட்யூனும், வரிகளும், ஒளிப்பதிவும் மிக்ஸ் ஆகி மிரட்டுகிறது.
அதற்கப்புறம் படத்தில் மதுரை முத்து, டவுட் செந்தில் என்று கோஷ்டியே சிரிக்க வைக்க முயல்கிறார்கள். அதை படத்தில் வரும் எல்லா காட்சிகளும் செய்து விடுவதால், இவர்களின் தனி ஆவர்த்தனத்திற்கு யாராவது சிரித்தால்தானே?
ப்ரணவின் தங்கையாக வரும் கல்யாணி நாயர், அவரவர் வீட்டு தங்கச்சிகளை நினைவுபடுத்துகிறார். நல்வரவு தங்கச்சி.
பாடல்களில் ஹண்ட்ரட் மார்க் வாங்குகிறார் இசையமைப்பாளர் சவுந்தர்யன். அதிலும் ‘உன்னை நேத்து ராத்திரி’ பாடலுக்கான மெலடி, முன்னணி ஹீரோக்களுக்கு அமைந்திருந்தால் இந்த வருடத்தின் மெகா ஹிட் பாடலாக அதுதான் அமைந்திருக்கும். ‘ஜாதி மல்லி’ பாடல் செம குத்து. முத்துலிங்கம், புலமைப்பித்தன் போன்ற கவிஞர்களுக்கு வாய்ப்பளித்த டைரக்டர் பி.சி.அன்பழகனுக்கும், இசையமைப்பாளர் சவுந்தர்யனுக்கும் ஒவ்வொரு ரசிகனும் தனியாக நன்றி சொல்ல வேண்டும். பின்னணி இசையமைத்த புண்ணியாவன் யாரோ? தகர டின்களை அள்ளிப் போட்டு தட்டிக் கொண்டேயிருக்கிறார். ஒளிப்பதிவாளர் காத்திக்ராஜாவின் ஒளிப்பதிவு நாகர்கோவில் பகுதியை அழகாக மேய்ந்திருக்கிறது.
மனசுல நினைக்கறதையெல்லாம் ஸ்கிரீன்ல காட்டிடணும்னு நினைச்சா, அது படமா இருக்காது. வெறும் ஜடமாதான் இருக்கும். இப்படியெல்லாம் படம் எடுத்தா புயல் மழை அடிச்சாலும், நதிகள் எப்படியய்யா நனையும்?
-ஆர்.எஸ்.அந்தணன்