நதியா படம்! இம்சைக்கு ஆளான இயக்குனர்!
நதியாவும் இனியாவும் லீட் ரோலில் நடித்த படம் திரைக்கு வராத கதை. மலையாளத்தில் சுமார் நாற்பது படங்களுக்கு மேல் இயக்கியிருக்கும் துளசிதாஸ் இயக்கியிருக்கிறார். மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருபெரும் ஜாம்பவான்களை வைத்து படம் இயக்கியிருக்கும் இவர், அங்கு கேரள அரசின் சிறந்த இயக்குனருக்கான அவார்டும் வாங்கியிருக்கிறாராம். அவர் மீதுதான் ஆபாசப்பட இயக்குனர் என்ற பழி விழுந்திருக்கிறது. அரைகுறை தமிழிலும், அபரிமிதமான மலையாளத்திலும் அவர் சம்சாரிச்சு ஓய்ஞ்சதில், நமக்கே மூச்சு வாங்கியது. பின்னே என்னவாம்? ஒரு நல்ல கலைஞனை ஆபாசப்பட இயக்குனர் ரேஞ்சில் சித்தரித்தால் அவர்தான் என்ன பண்ணுவார்.
இனியாவும் நதியாவும் ஒரு லேடீஸ் ஆஸ்டலில் தங்கியிருப்பதை போலவும் அவர்களுக்குள் தகாத உறவு இருப்பதை போலவும் திரைக்கு வராத கதை படத்தில் காட்சிகள் இருப்பதாக செய்திகள் பரவிவிட்டது. அதுமட்டுமல்ல, தணிக்கை குழு இந்த படத்தில் இப்படி பல காட்சிகளை வெட்டி வீசியதாகவும் வதந்திகள் பரவி, படு பயங்கர அப்செட்டுக்கு ஆளாகிவிட்டார் துளசிதாஸ்.

“இந்தப்படத்தில் சென்சார் அமைப்பு இரண்டே காட்சிகளைதான் வெட்டியது. ஒன்று ஊசி போடுகிற காட்சி. இன்னொன்று அந்த ஊசியில் எழுதப்பட்டிருக்கும் மருந்தின் பெயர் தெரிந்த காட்சி. மற்றபடி இந்த படத்தின் திரில்லர் காட்சிகளுக்காக U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது. மற்றபடி படத்தில் துளி கூட ஆபாசம் இல்லை. குழந்தைகளுடன், குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கக் கூடிய படம். வர்ற தீபாவளிக்கு திரைக்கு வர்றோம். 150 தியேட்டர்களுக்கு மேல் கிடைச்சுருக்கு. படத்தில் ஆபாசம் இருந்தால் அதில் நதியா நடிப்பாங்களா?” என்று அடுக்கடுக்காக விளக்கம் கூறினார்.
திரையில் இருக்குற கதையைவிட இல்லாத கதையை பெரிசாக்கிட்டாங்களே… ஐயோ பாவம் துளசிதாஸ்!
To listen Audio click below:-