பிரைட் ஆஃப் தமிழ்சினிமா! ‘ப்ரவுட்’ ஆகிறோம் தனஞ்செயன்!!
தனஞ்செயனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சக்கரங்களில் ஒன்றாகியிருக்கும் அவரது சமீபத்திய அட்ராக்ஷன் PRIDE OF TAMIL CINEMA.
1931 ல் துவங்கி 2013 வரையிலான தமிழ்சினிமாவை பற்றிய ஆய்வை மேற்கொண்ட தனஞ்செயன், அதை புத்தக வடிவமாக உருவாக்கி தமிழ்சினிமா குறித்த பெரிய ஆவணத்தை தந்திருக்கிறார். அந்த ஆவணத்தின் பெயர்தான் PRIDE OF TAMIL CINEMA. இதை பாராட்டுகிற விதத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த விருதை டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் திருக்கரங்களால் பெற்றிருக்கிறார் அவர். நல்ல படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைப்பது வாடிக்கைதான். ஒரு நல்ல புத்தகத்திற்கும் இந்த முறை தேசிய விருது கிடைத்திருப்பது தமிழ் எழுத்தாளர்களுக்கும், தமிழ் சினிமா குறித்த ஆராய்ச்சியாளர்களுக்கும் சேர்த்து பெருமை தரும் விஷயம்.
பல்வேறு முன்னணி இதழ்களில் தொடர்ந்து சினிமா குறித்த அலசல்களையும், அனுபவங்களையும் எழுதி வரும் தனஞ்செயன், முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மை அதிகாரியாக செயலாற்றியவர். அனுபவம் பெற்றவர். அவரிடம் இதுபோன்ற இன்னும் இன்னும் எழுதிக்குவிக்க ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் வருடம் ஒன்றாக அவர் வெளியிட வேண்டும் என்பதுதான் பலரது ஆசையும்!
இந்த விருது குறித்து சொல்லொணா மகிழ்ச்சியில் இருக்கும் தனஞ்செயனுக்கு அது நெகிழ்ச்சியான நினைவும் கூட! எப்படி? அதை அவரே சொல்கிறார்… ‘என் வாழ்க்கையில் ஒரு பொன்னாள் இன்று. என் மனைவி மற்றும் அவர் தந்தையின் முன்னிலையில் ஜனாதிபதியின் கையால் என் எழுத்துக்கு கிடைத்த விருது தமிழ்சினிமாவுக்கு உரித்தானது. தமிழ் சினிமாவின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்த என் புத்தகத்திற்கு கிடைத்த இந்த விருதால், தமிழ்சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமையும் கிடைத்தது. இந்த விருது மேலும் என்னை எழுதுவதற்கு ஊக்குவிக்கிறது.
அப்படியே வருடந்தோறும் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளுக்கும் ஒரு வழிகாட்டியை எழுதுங்கள் தனஞ்செயன்! உப்புமா படங்களாகவும், திரைக்கே வராத ஹாட் டிஸ்குகளாகவும் வீணாகப் போகும் பல கோடிகள் உருப்படியாக வேறெங்காவது பயன்படும் அல்லவா?
ஸ்பெஷல் வாழ்த்து- இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற காக்கா முட்டை, குற்றம் கடிதல் உள்ளிட்ட ஏனைய படங்கள், மற்றும் கலைஞர்களுக்கும் நியூதமிழ்சினிமா.காம் அன்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.