நயன்தாரா பேசி பார்த்துருப்பே! சமந்தா பேசி பார்த்திருப்பே! தமன்னா பேசி பார்த்துருக்கியா?
ஒரே வார்த்தையில் ‘டைம் வேஸ்ட்’ என்று நடிகைகள் அலுத்துக் கொள்கிற ஒரே விஷயம் சொந்தக்குரலில் பேசுவதற்குதான்! நடித்து முடித்தோமா, பேக்கப் சொன்ன பின் பிளைட்டை பிடித்து அடுத்த ஷுட்டிங்குக்கு ஓடினோமா என்பதுதான் அவர்களின் ஒரே விருப்பமாக இருக்கிறது. படம் முடிந்த பிறகும் ஏன் அந்த படத்திற்காக இன்னும் நாலைந்து நாட்களை இழுத்துப் போட்டுக் கொண்டு உருட்ட வேண்டும்? இதுதான் பெரும்பாலான நடிகைகளின் எண்ணம். தமிழ் நன்றாக பேச தெரிந்தாலும், டைரக்டரை பார்த்தால் மட்டும், க் போட்ற இடத்துல ஸ்… என்பார்கள். ஸ் போட்ற இடத்தில் க் என்பார்கள். இந்த கொடுமையை வச்சு குடித்தனம் பண்றதை விட, தேவாங்கோ, பிசாசோ மேல் என்ற முடிவுக்கே வந்துவிடுவார் சம்பந்தப்பட்ட இயக்குனரும்.
அப்படியிருந்தும் தனது லவ்வர் விக்னேஷ் சிவனுக்காக நானும் ரவுடிதான் படத்தில் மெனக்கெட்டு டப்பிங் பேசிக் கொடுத்தார் நயன்தாரா. அஞ்சான் படத்திற்கு சமந்தாதான் டப்பிங் பேசியிருந்தார். அவர் சென்னையிலேயே படித்து வளர்ந்தவர் என்பதால் இது சுலபமாகவும் அமைந்தது. ஆனால் தமிழ் நன்கு பேசத் தெரிந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசி வரும் தமன்னா, முதன் முறையாக தமிழில் டப்பிங் பேச முன் வந்திருக்கிறார்.
படம்- தர்மதுரை. ஏனிந்த மாற்றம்.? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அரை இலக்கியவாதியான சீனு ராமசாமி, “அதென்னம்மா தமிழ் படத்துல நடிச்சுட்டு, தமிழ் பேசலேன்னா எப்படி? நீயே உன் சொந்தக்குரல்ல பேசணும். அதுக்காக எத்தனை நாள் ஆனாலும் நான் பொறுத்துக்குறேன்” என்றாராம். சரி என்று ஒப்புக் கொண்ட தமன்னா இப்போதெல்லாம் சும்மா இருக்கிற நேரத்தில் கூட தமிழில் நடை வண்டி ஓட்டி பழகுகிறார்.
அபிநய சுந்தரி… அப்படி வாங்க வழிக்கு!