தேசிய கட்சி அழைப்பு நயன்தாரா ஓட்டம்
கடந்த வார நியூஸ் இது. சற்று தாமதமாகதான் நமது காதுக்கு வந்தது.
வேறொன்றுமில்லை. அரசியல்வாதிகள் அத்தனை பேரும் வயலுக்கு சென்று, நாட்டு நட்டு, களை பறித்து, வெயிலில் காய்ந்து ஓட்டுக் கேட்கிற கொடுமை ஐந்தாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்துவிடுகிறது. அப்படி வேகாத வெயிலில் போயும் கூட்டத்தை வரவழைக்க படாத பாடு பட வேண்டியிருக்கிறது. அதுவும் காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய தலைவர்கள் செல்கிற கூட்டம் என்றால், பஸ் பிடிக்க நிற்கிற கூட்டம் கூட வீட்டுக்குள் போய் கதவை சாத்திக் கொள்கிற நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆட்கள் இல்லையே அவர்கள்? ஆளே இல்லாமல் ஐந்து மணி நேரம் பேசுகிற வித்தையை பால பாடமாக கற்றவர்கள் ஆயிற்றே?
இருந்தாலும் நம்ம கட்சிக்கும் குஷ்பு மாதிரி, விந்தியா மாதிரி ஒரு நட்சத்திர பேச்சாளர் இருந்தா நல்லாயிருக்கும். அவர் பேசலேன்னா கூட பரவாயில்ல, கூட்டம் சேர்த்தா போதும் என்று கும்பிட்டு கேட்டார்களாம் தலைமையிடம். அவர்களும் எங்கெங்கோ வலை வீசி எவரும் சிக்காமல் கடைசியாக நயன்தாராவிடம் வந்ததாக தெரிகிறது. எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்க ரெடி என்றும் பேச்சு வார்த்தினார்களாம்.
‘சினிமாவுல குஷன் நாற்காலிக்கு பதிலா ஈஸி சேர் போடுற காலம் வந்தா கூட அரசியல் பக்கம் வர்ற ஐடியா இல்லேங்க. போயிட்டு வாங்க பெரியப்பாக்களா’ என்று கூறிவிட்டாராம் அவர். நயன்தாரா நினைச்சா தேசிய கட்சி என்ன, ஓபாமாவே அழைச்சு கவர்னர் போஸ்டிங் கொடுக்கிற அளவுக்கு செல்வாக்கு இருக்குற நேரத்தில இவங்க வேற காமெடி பண்ணிகிட்டு….