நயன்தாராவுக்கு ஆர்யா ஹன்சிகாவுக்கு குஷ்பு சிபாரிசுக்குள் சிக்கிய ஹீரோ!
குஷ்புவையும் பிரபுவையும் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஜோடியாக்கி பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் சில இயக்குனர்கள். அப்படியொரு இயக்குனரின் கதையே கேட்டுவிட்டு குஷ்பு நடிக்க சம்மதித்ததாக கூட நடுவில் சில தகவல்கள் கசிந்தன. ஆனால் அந்த சூடு ஏறுவதற்குள், சட்டென அதில் நீரை பாய்ச்சி நெருப்பை குளிர வைத்தார் குஷ்பு. ‘இல்லை இல்லை இல்லவே இல்லை. நான் பிரபுவுடன் இணைந்து நடிக்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை’ என்று தனது ட்விட்டரில் பதிலளித்துவிட்டார்.
இந்த நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சுந்தர்சி இயக்கி வரும் ‘ஆம்பள’ படப்பிடிப்பில் பிரபுவை சந்தித்திருக்கிறார் குஷ்பு. விஷாலின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபு, அங்கு குஷ்பு வந்ததை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. ஏனென்றால் அது குஷ்புவின் கணவர் இயக்குகிற படமல்லவா? மிக சாதாரணமாக அந்த சந்திப்பு நடந்ததாம். அதற்கப்புறம் சில நிமிடங்கள் இருவரும் தங்களது வாரிசுகள் பற்றியும் பேசிக் கொண்டார்களாம்.
வழக்கம் போல இந்த படத்திலும் ஒரு சிபாரிசு கசமுசா. விஷாலுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க எவ்வளவோ முயன்றாராம் ஆர்யா. (இவரு எப்படி சம்பந்தமில்லாம மூக்கை நுழைச்சாரு?) ஹன்சிகாவுக்கு குஷ்பு சிபாரிசு. கடைசியில் வீட்டுக்காரம்மாதான் வென்றிருக்கிறார்.