பெண்ணினத்தின் பிரதிநிதியா நயன்தாரா?

“எட்டாவது மாடியிலேர்ந்து கனகா விழுறதுக்கும், அவளோட கர்சீப் விழறதுக்குமான வித்தியாசம்தான் நயன்தாரா குறித்த ராதாரவியின் பேச்சு! ஏதோ கனகாவே விழுந்தது போல பதறுகிறார்களே, அதைதான் தாங்க முடியவில்லை”. -இப்படி ராதாரவிக்கு சப்போர்ட்டாகவும் சில குரல்கள் கோடம்பாக்கத்திலிருந்து விழுந்தாலும், எதிர்ப்பு குரல்களின் சப்தம் சற்று ஓவர்தான்.

பொதுவாகவே வாய் நீளக் காரர் ராதாரவி என்பது உலகத்திற்கு தெரியும். அதற்காக வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ‘கொலையுதிர் காலம்’ பட நிகழ்ச்சியில் அவர் பேசியதில் இருக்கிற உட் கருத்தை யாரும் வலியுறுத்தவே இல்லையே அது ஏன்?

தன் பட பிரமோஷன்களுக்கு வராத நயன்தாராவை அவர் கடுமையாக விமர்சிக்க நினைத்தார். அதை தன் வழக்கமான பாணியில் சொல்லிவிட்டார். அந்த நிகழ்வில் அவர் பேசியது முழுக்க முழுக்க தனிப்பட்ட நயன்தாரா குறித்துதான். இதற்காக நயன்தாரா அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரலாம். எதிர் கருத்துக்களை கூறலாம். அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த பெண் இனமே அவமதிக்கப்பட்டதாக பலரும் பொங்கி வருவதுதான் ஷாக்.

திமுக வும் தன் பங்குக்கு அவரை கட்சியிலிருந்தே கட்டம் கட்டியிருக்கிறது. ‘கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும்படி ராதாரவி செயல்பட்டதாக’ அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. நயன்தாராவை இழிவாக பேசினால் அது கழகத்திற்கு எப்படி அவப்பெயர் ஏற்படுத்தும்? அல்லது நயன்தாரா என்பவர் ஒட்டுமொத்த பெண் இனத்தின் குறியீடா? இப்படியெல்லாம் பல சந்தேகங்கள் பொதுமக்களுக்கு எழுமல்லவா?

அந்த நிகழ்வில் ராதாரவி பேசியது இதுதான். “நயன்தாரா நல்ல நடிகை. அவங்களால் பேயாவும் நடிக்க முடியுது. சீதாவாகவும் நடிக்க முடியுது. முன்பெல்லாம் சாமி வேஷத்துல நடிக்கணும்னா கே.ஆர்.விஜயாவை கூப்பிடுவாங்க. கையெடுத்து கும்பிடத் தோணுகிறவங்களை கூப்பிடணும். கை தட்டி கூப்பிடுற மாதிரி இருக்கிறவங்களை சாமி வேஷம் போட கூப்பிடக் கூடாது”.

இது ஒருபுறம் இருக்க… ‘நானே கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன். உங்களுக்கு சிரமம் வேண்டாம்’ என்று கூறிவருகிறார் ராதாரவி.

இந்த பிரச்சனை அவ்வளவு சீக்கிரத்தில் ஆறப்போவதில்லை என்று மட்டும் புரிகிறது.

Read previous post:
படம் ஓடுனதுக்கு காரணம் வைரமுத்துவாம்! அட பொய்யர்களா?

Close