ஐம்பது லட்சத்திற்காக படப்பிடிப்பை நிறுத்தினார் நயன்தாரா!
பாண்டிராஜ் இயக்கி வரும் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடந்து அதற்கப்புறம் நகராமல் நிற்கிறது. இதற்கு முழு காரணம் சிம்புதான் என்று நாம் உட்பட எல்லா மீடியாக்களும் நினைத்துக் கொண்டிருக்க, சிம்புவும் ஒரு காரணம் என்கிற அளவுக்கு அதற்குள்ளிருக்கும் ‘அகா சுகா’ புலப்பட ஆரம்பித்திருக்கிறது. அது என்ன?
வழக்கமாக ஒரு கோடியிலிருந்து ஒன்றரை கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா, இந்த படத்தில் நடிக்க அழைத்த போது ரொம்பவே யோசித்தார். காரணம்? படத்தின் ஹீரோ சிம்புவாச்சே! கடந்த சில வருடங்களுக்குள் நயன்தாராவும் சிம்புவும் முறையில்லாமல் சேர்ந்து முறைப்படி பிரிந்தும் விட்டார்கள். இந்த நேரத்தில் மீண்டும் சிம்புவோடு டூயட் பாடணும் என்றால், அதை சாமான்யத்தில் ஒப்புக் கொள்ள முடியாதே? ஆனால் அதற்கும் ஒரு விலை வைத்தார் நயன்.
‘எக்ஸ்ட்ரா ஐம்பது லட்சம் கொடுங்க. அதாவது நான் இப்போ வாங்குற ஒன்றரை கோடியோட ஐம்பது போட்டு இரண்டு சி யா கொடுத்தீங்கன்னா பரிசீலிக்கிறேன்’ என்றார். விஷயம் டி.ஆர் காதுக்கு போக, ‘கேட்கறது அவங்க இஷ்டம். அதனால் இல்ல எனக்கு நஷ்டம். ஏன்னா நயன்தாரா மேல எனக்கு இல்ல இஷ்டம். உடனே நடிகையை மாத்து’. என்று கூறிவிட்டார் . ஆனாலும் மீண்டும் சிம்பு- நயன்தாரா இணைகிறார்கள் என்பதுதானே இந்த படத்தின் ஆகப்பெரிய கிரேஸ்?
வந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று நினைத்த சிம்பு பாண்டிராஜிடம், அந்த ஐம்பது லட்சத்தை நானே கொடுத்துடுறேன். நயன்தாரா கால்ஷீட்டை வாங்கிடுங்க என்று கூறிவிட, தெம்பாக களம் இறங்கினார் பாண்டிராஜ். இப்போது என்ன ஆச்சு? ஐம்பது லட்சத்தை கொடுத்தால்தான் ஷுட்டிங் வருவேன் என்று நயன்தாரா கூறிவிட்டார். ஐம்பது லட்சமா? நான் எதுக்கு தரணும்? என்று கூறிவிட்டார் சிம்பு.
இவ்விருவரும் மாற்றி மாற்றி இதையே சொல்லிக் கொண்டிருப்பதால், பஞ்சாயத்து முடிவதற்குள் நடுவுல ஒரு படத்தை இயக்கி முடிச்சிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் பாண்டிராஜ். இதில் ஏமாந்தது யார்? நயன்தாராவா? சிம்புவா? பாண்டிராஜா?