ஏர்போர்ட்டில் சிக்கிய நயன்தாரா! மலேசியா காவல் துறையிடம் புகார் தர முடிவு?

‘இருமுகன் ’ என்ற படத்தின் ஷுட்டிங்குக்காக மலேசியா சென்றிருந்த நயன்தாரா, நேற்றிரவு சென்னை திரும்பும்போது அங்குள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு ஆளாக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் ஒரு வருடம் வரை அவருக்கு சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் இஷ்டத்துக்கு புரளி கிளம்பியது.

குற்றம்… நடந்தது என்ன? என்று ஆளாளுக்கு பூதக்கண்ணாடி அணிய ஆரம்பித்ததால், ஜெர்க் ஆனவர் நயன்தாரா இல்லை. அவரை அழைத்துப்போன படக் கம்பெனிதான். படப்பிடிப்பு குழுவினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்று பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நட்சத்திரங்கள் பல்வேறு நாடுகளுக்கு இவர்களை நம்பிப் போகிறார்கள். இங்கு விசா பிரச்சனை, டிக்கெட் பிரச்சனை, பாதுகாப்பு பிரச்சனை என்று தேவையில்லாமல் அவதிப்பட நேர்ந்தால், அடுத்த முறை இவர்களுடன் செல்வதற்கு ஆயிரம் யோசனைகள் வருமல்லவா? அப்படிதான் வந்ததாம் நயன்தாராவுக்கும். தனது அதிருப்தியை அவர் கம்பெனிக்கு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருமுகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:

மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது. அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், நயன்தாராவின் பாஸ்போட் நகல் அந்நாட்டு இணையதளங்களில் வெளியானது குறித்து, மலேஷிய காவல்துறையில் புகார் ஒன்றை “இருமுகன்” படக்குழுவினர் அளித்துள்ளனர்.

உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது பற்றி வெவ்வேறு தகவல்கள் பரவி வருவதால், நயன்தாராவின் புகழில் நிறைய பொத்தல்கள் ஏற்பட்டு வருவதுதான் சோகம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இப்ப இதுதான் சென்னை தியேட்டரில்… (05/02/16)

Close