நாக்கில் பிளேடு! நயன்தாரா ரிஸ்க்! எதுக்கு இந்த வேண்டாத வேலை?
விட்டால் மவுண்ட்ரோடில் சிலை வைத்து, மார்னிங் ஈவ்னிங் பூஜையே நடத்துவார்கள் போலிருக்கிறது நயன்தாராவுக்கு! அதுவும் நானும் ரவுடிதான் படத்தில் அவருடைய பர்பாமென்ஸ் பார்த்த திரையுலகம், ஆடி மாசத்து கரகம் எடுக்காத குறைதான்! அதற்கேற்றார் போல தன்னை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களிடம் நல்ல பெயர் வாங்கியே தீருவது என்று நிற்கிறார். அதில் லேட்டஸ்ட் தகவல் இதுதான்.
ஜீவா நடிக்கும் ‘திருநாள்’ படத்தை அம்பாசமுத்திரத்தில் அம்பானி பட இயக்குனர் ராம்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் ஜீவா பிளேடு என்ற கேரக்டரில் நடிக்கிறார். ஆ… ஊ… என்றால் வாயிலிருந்து பிளேடை எடுத்து நறுக்கென்று கழுத்து நரம்பை இழுத்துத்தள்ளுகிற ரவுடி பாத்திரம் அவருக்கு. கதைப்படி இவருக்கும், அந்த ஊர் எல்.கே.ஜி டீச்சர் நயன்தாராவுக்கும் லவ். ஒரு மாண்டேஜ் காட்சியில், ஜீவா நயன்தாராவை நெருங்கும்போது, ஜீவா மாதிரியே அவரும் நாக்கிலிருந்து அப்படியே பிளேடை எடுத்து மிரட்டுவது போல யோசித்துவிட்டார் ராம்நாத்.
இப்படியெல்லாம் நாக்கில் பிளேடை வைத்துக்கொள்வது எவ்வளவு பெரிய ரிஸ்க் என்பதை பிளேடு பக்கிரிகளிடம் கேட்டால், பிசிறு தட்டாமல் பதறுவார்கள். அதற்காகவே பல வாரங்கள் ட்ரெய்னிங் எடுத்துதான் தொழிலில் இறங்குவார்களாம். இவ்வளவு ரிஸ்க்கான ஒரு விஷயத்தை ராம்நாத் சொல்ல, ஓ… அதுக்கென்ன செஞ்சுடலாமே என்றாராம் நயன்தாரா. அரை மணி நேரம்தான் பிராக்டீஸ் எடுத்துக் கொண்டார். ம்… டேக் போகலாம் என்று கூறிவிட்டார்.
அச்சு அசலாக அப்படியே அவர் செய்து காட்ட, அசந்து போயிட்டோம் நாங்க என்கிறார் ராம்நாத்.
கலிங்கத்துப்பரணி முடிஞ்சுதா? இல்லையே… நயன்தாரா மாதிரியான ஒரு ஆர்ட்டிஸ்ட் நமக்கு கிடைச்சது அதிர்ஷ்டம் சார். காலையில் கேரவேன்ல மேக்கப் பண்ணிட்டு இறங்கிட்டா, லஞ்ச்சுக்கு அரை மணி நேரம் உள்ள போவாங்க. அதற்கப்புறம் பேக்கப் சொல்ற வரைக்கும் அதுக்குள்ள ரெஸ்ட் எடுக்க போய் நான் பார்த்ததேயில்ல. வேற ஒருவர் நடிக்கிற ஷாட்டா இருந்தாலும், அந்த ஷாட் சற்று லெங்க்த்தா போனா கூட, என்ன பிரச்சனை? ஏன் லேட்டாகுது? என்று அக்கறையாக கேட்பார். சினிமாவில் ஒவ்வொரு நிமிஷமும் பணமா செலவாகுது என்பதை நல்லா புரிஞ்சு வச்சுகிட்டு ஒத்துழைப்பு கொடுக்கிற நடிகை அவங்க என்று மேலும் கொஞ்ச நேரம் நயன்தாரா புகழ் பாடினார் ராம்நாத்!
நயன்தாரா புகழை நாள் முழுக்க கேட்கவும் தயாராகதான் இருக்கு மனசு! இன்னும் இருக்கா?