ஓங்கி அடிச்சா ஒரு கிராம் வெயிட் கூட இல்லடா…
இன்னும் எத்தனை நாளைக்குதான் காதலித்துக் கொண்டிருப்பது? பேசாமல் ஆக்ஷனுக்கு தாவி விடலாம் என்று நினைத்து வந்தார் நயன்தாரா. பூ ஒன்று புயலானது என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர் வைத்து சக நடிகைகள் நகை நகை என்று நகைத்தாலும், தினந்தோறும் ஆக்ஷன் பயிற்சியாளரை வரவழைத்து ஆ… ஊ… என கத்துவதை அவர் நிறுத்தியபாடில்லை. எல்லாம் கஹானிக்கு முன்… அப்படத்தில் கொஞ்சம் ஆக்ஷனுக்கும் வேலை இருந்தது. அதையே பிள்ளையார் குத்தாக போட்டு தனது ஆக்ஷன் பயணத்தை செவ்வனே துவங்கிவிடலாம் என்று நினைத்திருந்தார் அவர்.
ஆனால் கஹானி வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. நயன்தாராவின் ஆக்ஷனை ஜனங்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை போலிருக்கிறது என்று எல்லாரும் முடிவுக்கு வருவதில் கூட தப்பில்லை. அந்த முடிவுக்கு நயன்தாராவே வந்துவிட்டதுதான் ஆச்சர்யம். இனி காதல் படங்களை நைசாக ஒதுக்கிவிட்டு அடுத்த கட்டத்திற்கு தாவி விடுவது என்று முடிவெடுத்திருந்த நயன்தாரா, இப்போது ஆக்ஷன் பயிற்சியாளரை அறவே மறந்துவிட்டாராம்.
மாலை நேர மைக் டைசன் பயிற்சிகள் எதையும் செய்வதுமில்லையாம். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்றா… என்ற நம்பிக்கையோடு களம் இறங்கிய நயன்தாரா, ஓங்கி அடிச்சா ஒன்றரை கிராம் வெயிட் கூட இல்லையே என்கிற உண்மையை புரிந்து கொண்டார். அது புரியாத ஆக்ஷன் இயக்குனர்கள் நயன்தாராவுக்காக ‘ரெட்’ இங்க்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்.
ஆட்டம் மாறி ஆறேழு வாரமாச்சு. அடுத்த இங்க் டப்பாவை தெறங்க சார்ஸ்…