ஜோதிகாவை வெல்வாரா நயன்தாரா?
வெறும் அழகு பொம்மையாக வந்து மரத்தை சுற்றி மங்களம் பாடிவிட்டு போகும் கதாநாயகிகளை தோல் சுருங்கியவுடன் மறந்துவிடும் மக்கள் கூட்டம். ஆனால் ஒரு படத்திலாவது இயல்பாக நடித்து அழியாத முத்திரை குத்திவிட்டு போகும் எந்த நடிகையையும் அவர்கள் மறப்பதேயில்லை. மூன்றாம் பிறை ஸ்ரீதேவியை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள் ரசிகர்களும், நடிகைகளும். உங்களோடு லட்சியம் என்ன என்று யாரையாவது கேளுங்களேன். டுபாக்கூர் நடிகையாக இருந்தால் கூட, மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி ஒரு படத்திலாவது நடிக்கணும் என்பார்கள். (அந்த பதிலை கேட்டு நமக்குதான் மயக்கம் வரும்)
ஜோதிகா சினிமாவை விட்டு விலகும் போது ‘சூர்யா மேல எங்களுக்கு கோவமே வந்துருச்சு. இவ்வளவு நல்ல நடிகையை கல்யாணம் பண்ணிக் கொண்டு நடிக்க விடாமல் செய்யுறாரே?’ என்று பொதுமேடையிலேயே ஒரு விஐபி பேசினார். அந்தளவுக்கு இருந்தது அவரது நடிப்பு. அதுவும் ‘மொழி’ படத்தில் காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக ஜோதிகா நடித்திருப்பதை இப்போது பார்த்தாலும், இது நடிப்பா? அல்லது நிஜமா? என்கிற வியப்பே வந்துவிடும்.
எப்படியோ? மக்களின் விருப்பம் நிறைவேறியது. மீண்டும் ஒரு சில நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வந்திருக்கிறார் ஜோதிகா. இவருக்கு எப்படி புகழ் ஏணி படிக்கட்டுகளை தயார் செய்து கொடுத்ததோ, அதற்கு சற்றும் குறையாமல் வளர்ந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. வெறும் அழகு பதுமையாக வந்து ஆட்டம் போட்டுவிட்டு போவதில்ல நடிப்பு. அது காலம் உள்ளளவுக்கும் பேசப்படுவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் நயன். ஸ்ரீராமராஜ்யம், அனாமிகா போன்ற படங்களின் மூலம் ‘என்னாலும் நடிப்பை பொழிய முடியும்’ என்று நிரூபித்ததுதான் நயன்தாராவின் சமீபத்திய சிறப்பு.
இப்போது மீண்டும் நடிப்பால் வியக்க வைப்பார் போலிருக்கிறது. யெஸ்… நானும் ரவுடிதான் படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. யாராவது அவரிடம் பேசினால் காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக போகிறார் என்றால் ‘டோன்ட் டென்ஷன்’. தங்கச்சி நடிப்பு பயிற்சி எடுத்துட்டு இருக்குன்னு அர்த்தம்!