நெருங்கி வா முத்தமிடாதே- விமர்சனம்

‘அடிப்பதெல்லாம் ரீல்’ என்கிற மாதிரியே ஒரு கதை. ஆனாலும் பொட்டக்கோழி எட்டிக் கொத்தாது என்கிற பழமொழியை சர்வ சாதாரணமாக க்ராஸ் பண்ணியிருக்கிறார் டைரக்டர் லட்சுமிராமகிருஷ்ணன். ஹரி மாதிரியான ஆக்ஷன் இயக்குனர்கள் தொட வேண்டிய சப்ஜெக்ட் இது. அதை தைரியமாக தொட்டிருக்கிறார். சாமர்த்தியமாகவும் சொல்லியிருக்கிறாரா? அப்படியே படத்தில் பொறி பறக்க வேண்டிய சம்பவங்களையும் நுழைத்திருக்கலாம். தியேட்டரே பற்றிக் கொள்கிற அளவுக்கு ஃபைட் சீன்கள் கூட வைத்திருக்கலாம். அந்த விஷயத்தில் ஏனோ லட்சுமி ‘சிரம’கிருஷ்ணனாகியிருக்கிறார். இருந்தாலும், நெட் ரிசல்ட்?

‘என்னம்மா இப்டி பண்ணிட்டீங்களேம்மா….’

நாடு முழுக்க பெட்ரோல் ஸ்டிரைக்! பிணம் எரிக்கக்கூட எரிபொருள் இல்லை. இந்த நேரத்தில் திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு இரண்டாயிரம் லிட்டர் டீசலை கடத்திக் கொண்டு போக வேண்டிய வேலை ஹீரோ ஷபீருக்கு. சவால்களை விரும்பும் ஷபீர், சந்தோஷமாக கிளம்புகிறார். இந்த அசைன்ட்மென்ட்டை அவருக்கு தரும் எல்.அழகப்பன் ஒரு எம்.எல்.ஏ. வண்டி கிளம்புகிறது. காரைக்காலை நெருங்குவதற்குள் தனது லாரியில் சிலருக்கு லிஃப்ட் கொடுக்கிறார் ஷபீர். அதில் ஒரு காதல் ஜோடியும், ஒரு ஃபிரன்ட்ஸ் ஜோடியும் அடக்கம். நடுவில் வம்படியாக வண்டியில் ஏறும் தம்பி ராமய்யா தனி. அவரும் ஒரு ஸ்பை என்பது தெரியவர, ஆட்டோமேடிக்காக ஒரு ‘அட…’ போட வைத்துவிட்டு நக…ர்….ர்கிறது திரைக்கதை. சொன்ன இடத்தில் சரக்கு சேர்ந்ததா? இந்த தேசிய குற்றத்தை செய்த ஷபீர் என்னவானார்? எண்ட் ஆஃப் த குண்டு…. பியாவுக்கும் ஷபீருக்கும் லவ்வாம். படம் முடிந்த பிறகும் பத்து நிமிஷம் ஓட்டுகிறார் லட்சுமி. ‘என்னம்மா இப்டி பண்ணிட்டீங்களேம்மா….’

ஹீரோ ஷபீரிடம் தனி அட்ராக்ஷன் இருக்கிறது. யாராவது முன்னணி இயக்குனர்கள் நம்பி அழைக்கலாம் இவரை. வண்டியில் இருப்பது டீசல். அதுவும் இரண்டாயிரம் லிட்டர் என்று தெரிந்தும், போலீஸ் முன் அலட்டிக் கொள்ளாமல் வண்டியை நிறுத்துகிறாரே, அங்கு தெரிகிறது அவரது ‘கெத்’ நடிப்பு. தன்னை மிரட்டு எல். அழகப்பனிடம், ஒரு தீக்குச்சி போதும். அத்தனையையும் எரிச்சுட்டு போயிகிட்டேயிருப்பேன் என்கிற ஷபீரின் பதில், ஆக்ஷன் ஹீரோக்களுக்கு கிடைத்தால் அல்வா. காதல் ஜோடியை கையில் அரிவாளுடன் தேடும் கும்பலுக்கும் ஷபீர் கொடுக்கும் பெப்பே செம ட்விஸ்ட். ஒரே ஒரு ஃபைட் இருக்கிறது ஹீரோவுக்கு. ரொம்ப சிக்கனமாக எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அவ்வளவும் ஒர் ரூவா பேண்டேஜில் ஆறிப்போகிற காயம். அட போங்கப்பா…

‘என் அப்பா யாருன்னு சொல்லு? நான் அவருகிட்ட போறேன்’ என்று அம்மாவை கோபத்தோடு துளைக்கும் கேரக்டர் பியாவுக்கு. வீட்டுக்கு அடங்காத பிள்ளைக்கு நேர்கிற எல்லா கொடுமையும் இவருக்கும் நேர்கிறது. நல்லவேளை… அசம்பாவிதம் ஏதுமில்லை. நடிப்பு எப்படி? நடிக்கவே வாய்ப்பு தரல. அப்புறம் நடிப்பு பற்றி கேட்டா எப்படி?

இன்னொரு காதல் ஜோடியை காண்பித்து ஜாதி வெறியர்களுக்கு சங்கு ஊதுகிறார் லட்சுமி. ‘பி.எம்.கே ஏரியாஸ்… நோட் திஸ் டைரக்டரு’

விஜி சந்திரசேகர்தான் பியாவின் அம்மா. மகளுக்கு அப்பா யார் என்பதை அவர் சொன்னதும், கப்பென்று காதடைத்துப் போகிறது. பெரிய பாடகியான இவரை குளோஸ் அப்பில் சாதகம் செய்ய வைக்கிறார்கள். அவ்வளவு குளோஸ் அப்புகள் தேவையா மேம்? ஒவ்வொரு படத்திலும் தயிர்சாத மூட்டையாக வந்து போகும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இதில் வித்தியாசமான ரோல். ரசிக்கவும் வைக்கிறார் மனுஷன்.

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நுழையும் தீவிரவாதி அங்கிருக்கும் டேட்டாஸ்களை திருடிக் கொண்டு கடல் வழியாக தப்ப முயல்கிறான். அவன் தப்பித்து செல்லதான் இந்த டீசல் கடத்தல். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று விஜயகாந்த் பட ரேஞ்சுக்கு கதை சொல்லியிருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன். ஆனால் எல் அழகப்பன் வீட்டிலிருக்கும் வேலைக்காரர்களும், அவர்களின் வெட்டிப் பேச்சும் நேரத்தை தின்று, சுவாரஸ்யத்திற்கு வேட்டு வைக்கிறது. அதுவும் கதை நாலாக பிரித்து சொல்லப்படுவதால், சின்ன ஜர்க் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இசை மேட்லி புளூஸ். ஒரு பாடலும் மனசை அள்ளவில்லை. ஆனால் ஒளிப்பதிவாளர் வினோத் பாரதி பிரித்து மேய்ந்திருக்கிறார். அந்த நீண்….ண்ட சாலையில் ஒற்றை லாரி ஓடும் அழகும், பல காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் டாப் ஆங்கிளும் ரசனையோ ரசனை.

காமேடி பாலா பேசும் சித்தப்பா ஃபஸ்ட் நைட் வசனம், ‘யூ டூ லட்சுமி’ என்று பதற வைக்கிறது.

நெருங்கி வா, முத்தமிடாதே… படம் பார், குறை சொல்லாதே!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கல்கண்டு- விமர்சனம்

பெரிய வீட்டு பிள்ளைகள் அறிமுகமாகும்போதெல்லாம் கிழக்கில் ஸ்டார் முளைக்கும் என்ற நம்பிக்கையோடு வானத்தை பார்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால், அங்கு பல நேரம் பீஸ் போன பல்புகள்தான் பல்லை...

Close