வருஷத்துக்கு பத்து நாட்களில்தான் பெரிய படங்கள் ரிலீஸ்? -தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி

இந்த முடிவு தனிப்பட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு படங்கள் வெளிவருகிற போதும், என்னோட ஐ வருது என்று புரளியை கிளப்பி சம்பந்தப்பட்ட படங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறார் அவர். எனவே குறிப்பிட்ட பத்து நாட்களை தவிர, மற்ற நாட்களில் பெரிய படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளது தமிழ் திரைப்பட அமைப்பு. இதையடுத்து சிறு பட முதலாளிகள், மற்றும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சுமார் 300 பட தயாரிப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

‘இணையத்தில் திருட்டுத்தனமாக தமிழ்த் திரைப்படங்கள் வெளியிட்டு, திரையுலகினர் பெரும் நஷ்டத்தை சந்திக்க முழு முதற்காரணமாக இருக்கும் திருட்டினை அடியோடு வேரறுக்கவும், திருட்டு வி.சி.டிக்களில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாவதைத் தடுக்கவும் வழி வகைகளைக் காண தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் விவரம்:

* தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் பல சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். ஆகவே இனி குறிப்பிட்ட பத்து நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களைத் திரையிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. பட வெளியீடுகளை முறைப்படுத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் ஆறு பேர்களை பிரதிநிதியாகக் கொண்ட குழு அமைக்கப்படும்.

* திருட்டுத்தனமாக வெளியிடப்படும் படங்களைப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும், துணைபுரியும் வலைதளங்களை முடக்க மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முறையீடு செய்வது மற்றும் சட்டரீதியாக அவைகளை முடக்க போராடுவோம்.

* தமிழ்த் திரையுலகைக் காக்கவும் திருட்டு விசிடியை அடியோடு ஒழிக்கவும் 2004 ஆண்டில் குண்டர் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தக் குழு தனது பணிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

* இடையில் ஆட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்களைத் தொடர்ந்து மீண்டும் திருட்டு விசிடிக்கள் தலையெடுத்து கரையான் வீட்டை அழிப்பது போல தமிழ் சினிமாவை அழித்து வருகின்றன. ஆகவே, இந்த திருட்டு விசிடிக்களால் இந்த சினிமா உலகையே நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர் நடிகைகள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் பேரணி ஒன்றை டிசம்பர் மாதம் அன்று நடத்த உள்ளது குறித்து மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்று அளித்துள்ளோம். டிசம்பர் 2ம் தேதியன்று நடைபெற உள்ள இந்த பேரணியின் முடிவில் திரையுலகப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க முதல்வரின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

* இந்த திருட்டு விசிடி என்பது எல்லோரும் இணைந்து ஒழிக்க வேண்டிய தீய சக்தி என்பதால், இதில் தங்களது ரசிகர்கள் முழுமையாக ஈடுபட்டு திருட்டு விசிடிக்கள் விற்பவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறையாகப் புகார் செய்ய வேண்டுமென ரஜினி, கமல் முதல் இன்று அறிமுகமாகியுள்ள கதாநாயகர்கள் அவரை அனைத்து நடிகர்களும் தங்கள் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று இந்தக் குழு கோரிக்கை வைக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீண்டும் நடிப்பு… ஷாம்லி முடிவு! அஜீத் ஆசிர்வாதம்?

‘என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். அதில் ஆனந்த கண்ணீரைதான் பார்க்கணும்’ என்று மகளை அஜீத்திடம் ஒப்படைத்துவிட்டு ‘அக்கடா’ என்று சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் ஷாலினியின் அப்பா. தன்...

Close