திருட்டு விசிடி அச்சம்! வெளிநாட்டுக்கு போகாத நாலு போலீசு!

இன்னும் ஒரே நாள்தான். திரைக்கு வரப்போகிறது ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’ அருள்நிதி ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தலைப்பிலேயே மனசை கேட்ச் பிடிப்பதில் வல்லவர் தயாரிப்பாளர் லியோவிஷன் ராஜ்குமார். அவரது முந்தைய படம்தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!’ இப்ப புரிஞ்சுருக்குமே, படத்தோட நிறம், மணம், குணம் என்னவென்று! இந்த படத்தை உலகம் முழுக்க வெளியிடப் போகிறது JSK நிறுவனம்.

ஆனால் முதலில் தமிழகத்தில்தான் ரிலீஸ். பொதுவாகவே எந்த படம் வெளியானாலும் திரைக்கு வருகிற முதல் சில நாட்களிலேயே எப் எம் எஸ் சொல்லப்படும் வெளிநாட்டு உரிமைக்காக பிரிண்ட் அனுப்பிவிடுவார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை அதில் வேறொரு உறுதியை எடுத்திருக்கிறார் ஜே.எஸ்.சதீஷ்குமார். வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பிரிண்ட் மூலமாக துல்லியமான திருட்டு விசிடி வருகிறது. அதுமட்டுமல்ல, படம் வெளியான அடுத்த ஷோவே இணையங்களில் பளபளவென டவுன்லோடு செய்யும் விதத்திலும் கசிய விட்டுவிடுகிறார்கள். அதனால் வெளிநாடுகளில் ரிலீஸ் இல்லை. இதுதான் அந்த உறுதிப்பாடு.

ஒப்பந்தம் போடும் போதே அதற்கு வசதியாக இண்டு இடுக்கெல்லாம் அடைத்துதான் ஒப்பந்தம் போட்டராம் ஜே.எஸ்.சதீஷ்குமார். கடந்த சில தினங்களுக்கு முன், ‘எனக்கு வெளிநாட்டு உரிமைக்கான ஒப்பந்தம் போடப்பட்டு அட்வான்ஸ் வாங்கியதோடு சரி. என்னிடமிருந்து மீதி பணத்தை கூட வாங்கவில்லை’ என்று ஒருவர் கோர்ட்டுக்கு போயிருக்கிறார் அல்லவா? அது இந்த திருட்டு விசிடி தடுப்பு முயற்சியால் ஏற்பட்ட சலசலப்புதான். மேற்படி கம்பெனி போட்ட ஒப்பந்தத்தை மதித்து அவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை கோர்ட்டில் கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்யும் முடிவிலிருக்கிறார் ஜே.எஸ்.சதீஷ்குமார்.

ஒவ்வொரு தயாரிப்பாளரும் இப்படி முடிவெடுத்தால், திருட்டு விசிடி காரர்கள் ஏன் கொள்ளையடிக்கப் போகிறார்கள்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இப்ராஹிம் ராவுத்தர் எனும் ‘நண்பேன்டா….! ’

அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இப்ராஹிம் ராவுத்தர் என்ற நல்ல நண்பனை! இப்போதைய விஜயகாந்த் அரசியலில் எப்படியெப்படியெல்லாம் சித்தரிக்கப்படுகிறார்? அது அரசியல் சதுரங்க விளையாட்டின் ஒரு...

Close