பஞ்ச் டயலாக் வேணாம்! எங்க வீட்டுப் பிள்ளை முடிவு?
ஒருவழியாக விஜய்60 படத்திற்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்ற தலைப்பே முடிவாகிவிட்டதாம். முறைப்படி அறிவிக்கும் போது உலகம் முழுக்கவிருக்கும் விஜய் ரசிகர்களால் கோலாகலம் நிச்சயம். எம்.ஜி.ஆர் நடித்த இந்த படத்தின் தலைப்புக்காக எந்த வீட்டு கதவையும் தட்டத் தேவையில்லை. ஏன்? விஜய் 60 படத்தை தயாரிக்கும் விஜயா கம்பைன்ஸ் நிறுவனம்தான் எங்க வீட்டுப் பிள்ளை படத்தையும் தயாரித்திருந்தது.
இந்த தலைப்பை வைப்பதா, வேண்டாமா என்று குழம்பி வந்த விஜய், இப்போது அந்த குழப்பத்திலிருந்து விடுபட்டு விட்டதாக தகவல். மனப்பூர்வமாக தலைப்புக்கு பச்சைக் கொடியும் காட்டிவிட்டார். இதே நேரத்தில் தன் மனதிலிருந்த இன்னொரு முக்கியமான விஷயத்தையும் டைரக்டர் பரதனிடம் கூறியிருக்கிறாராம்.
அதுதான் பஞ்ச் டயலாக் மேட்டர். கபாலி படத்தில் ரஜினியே பஞ்ச் டயலாக் பேசவில்லை. அவருக்கே ஒரு மாற்றம் தேவைப்படுகிற காலத்தில், நாம் மட்டும் ஏன் வலிய பஞ்ச் டயலாக்கை திணிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அதனால் “கதைக்கு தேவைப்பட்டால் மட்டும் பஞ்ச் டயலாக் வைங்க. மற்றபடி எனக்காக எதுவும் செய்ய வேண்டாம்” என்று கூறியிருக்கிறாராம்.
கதைக்கு சம்பந்தமில்லாத பஞ்ச்களால் ஒரு போதும் பயனில்லை. அதே நேரத்தில் தேவைப்படுகிற இடத்தில் பஞ்ச் இல்லையென்றால் அது படமேயில்லை.
விஜய்யின் இந்த முடிவுக்காகவே அவருக்கு ஒரு வாழ்க…. வாழ்க… வாழ்க வாழ்கவே!