மோடி பற்றி மூச்! ஜில்லா விழாவில் விஜய் கப் சிப்…?

ஜில்லா படத்தின் வெற்றி விழா சென்னை ஆல்பட் தியேட்டரில் நடந்தது. இந்த படம் நிஜமாகவே 100 நாள் ஓடியதா? விநியோகஸ்தர்களுக்கு லாபமா? என்கிற கேள்வியெல்லாம் எழுப்பாமல் கூட்டம் கட்டுக்கு அடங்காமல் கூடியது. எல்லாம் விஜய்யை காண காண காணதான்.

ரசிகர்களின் பேய்க் கூச்சலுக்கு நடுவில் மைக்கை பிடித்தார் விஜய். கொஞ்சம் விரிவான பேச்சுதான் அது. ”கஷ்டப்பட்டு உழைத்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம். கஷ்டப்பட்டு உழைக்கிற எல்லோருமே ஜெயிக்கிறார்களா என்று நீங்கள் கேட்கலாம். வாழ்க்கையில் ஜெயித்த அத்தனை பேரும் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள்தான். அப்படி உழைப்பில் கிடைத்ததுதான் ‘ஜில்லா’ படத்தின் வெற்றி. ‘ஜில்லா’ படத்துக்கு முன்பு ஒரு படம் வந்தது. அந்த படத்தின் ரிலீசில், சில பிரச்சினைகளை சந்தித்தோம். அதன் பிறகு ஆரம்பித்த படம் ஜில்லா. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் எடுத்தோம். மக்கள் வெற்றி பெற வைத்தார்கள். இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அத்தனை பேருக்கும் நன்றி.

இப்போது உள்ள பலத்த போட்டிக்கு நடுவில், ஒரு படம் 100 நாள் ஓடுவது சாதாரண விஷயம் அல்ல. டி.வி, நெட், திருட்டு வி.சி.டி.யை எல்லாம் தாண்டி ‘ஜில்லா’ வெற்றி பெற்றதற்கு, தியேட்டருக்கு வந்து படம் பார்த்த என் ரசிகர்கள்தான் காரணம். ‘சினிமா ஒரு கனவு தொழிற்சாலை’ என்று சொல்வார்கள். அந்த கனவு தொழிற்சாலையின் கண்கள், ரசிகர்கள். சினிமாவில் எல்லோருக்கும் சம்பளம் கொடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள். அந்த தயாரிப்பாளர்களுக்கே சம்பளம் கொடுப்பவர்கள் ரசிகர்கள்தான். சினிமா பல குடும்பங்களை வாழ வைக்கிறது. அந்த சினிமாவையே வாழ வைப்பது, ரசிகர்கள்தான். ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது, அது வெற்றி பெற வேண்டும் என்று என்னை விட ஆர்வத்துடன் இருப்பவர்கள், என் ரசிகர்கள்தான்.

நான் இப்போது எல்லா படங்களையும் பார்க்கிறேன். திறமையான இளம் டைரக்டர்கள் பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இரண்டரை மணி நேரத்தில் படத்தை முடித்து விடுங்கள். அப்படி முடிக்கவில்லை என்றால் படம் பார்ப்பவர்கள் படத்தை பார்க்க மாட்டார்கள். வாட்ச்சை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். எனவே ரசிகர்களை மனதில் வைத்து படத்தை எடுங்கள். இயக்குநர் நேசன்கூட வேலை பார்த்தது எனக்குக் கிடைத்த நல்ல அனுபவம். ‘தலைவா’ பட பிரச்னையோடுதான் ‘ஜில்லா’ ஷூட்டிங்கிற்கு போனேன். அங்கு எனது நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி ஷூட்டிங் எடுத்தார். அவர் இன்னும் நிறைய நல்ல நல்ல படங்கள் எடுக்கணும், அவருக்கு என வாழ்த்துக்கள்.

அதேப்போல் சூப்பர் குட் பிலிம்ஸ் நல்ல ராசியான தயாரிப்பு நிறுவனம். இந்தப் படத்தில் ஜீவாவும் தயாரிப்பாளராக இருந்துள்ளார். என்னை போன்ற நடிகர்கள் நிறைய பேருக்கு அவர் வாய்ப்பளிக்க வேண்டும். நான் உட்பட எங்கள் எல்லோருக்கும் விருது கிடைத்தது சந்தோஷம். அப்படியே வைரமுத்து, மகத், சூரி, இமான் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்…’’ என்றார் விஜய்.

கடைசி வரை அவர் மோடியை சந்தித்தது பற்றி மூச்சு கூட விடவில்லை. அதுதான் ஏனென்று யாருக்கும் புரியவில்லை.

Read previous post:
ஏ.ஆர்.முருகதாசுக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அட்வைஸ்!

‘மான் கராத்தே’ படத்தின் கதை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியதுதான். இந்த படத்தை இயக்கியது அவரது அசிஸ்டென்ட் திருக்குமரன். படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றவும் செய்திருப்பார் முருகதாஸ். அதுவும்...

Close