எஸ்.ஏ.சி – சீமான்- தாணு கலந்து கொண்ட விழா பட்… கத்தி பற்றி பேசாமல் கப்சிப்!
சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாடோடி வம்சம்’! அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. பொதுவாக சின்னப்படங்களின் விழா என்றால், அதில் கலந்து கொள்ளும் விஐபிகளின் அந்தஸ்தும் அதற்கேற்றார் போலதான் இருக்கும். ஆனால் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்கள் அத்தனை பேரும், ‘அட… அவரே வந்துட்டாரே ’ என்கிறளவுக்கு விஐபிகள்!
அனல் பேச்சாளர் சீமான், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், துப்பாக்கி தயாரிப்பாளர் தாணு, அதற்கப்புறம் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் செல்வமணி, நடிகை தேவயானி என்று அத்தனை பேருமே அடடே ரகம்! சீமான், தாணு, எஸ்.ஏ.சி மூவரும் இருப்பதால் கண்டிப்பாக கத்தி திரைப்படம் பற்றி அனல் பறக்கும் விவாதம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த பிரஸ்சுக்கு, மூன்று பேருமே சேர்ந்து திருப்பதி பிரசாதத்தை ஸ்பெஷலாக மடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பியதுதான் பகீர்!
‘சுப்பையா கூப்பிட்டாரு. வந்தோம். இங்க வந்த பிறகுதான் தெரியுது, ஹீரோ நம்ம சிங்கமுத்தண்ணனோட புள்ள… நல்லாயிருப்பா, நல்லாயிரு’ என்று பாராட்டிவிட்டு போனார்கள் அவர்கள். இவர்களையெல்லாம் ஒன்று திரட்டிய சுப்பையா யார்? விஜயகாந்த் சூப்பர் டூப்பர் ஹீரோவாக இருந்த காலத்தில் அவரிடம் உதவியாளராக இருந்தவராம். அவரை ஸ்டேஜில் ஏற்றி ஒரு முன்னுரை கொடுத்தார் தயாரிப்பாளர் சிவா. ‘அவனுக்கு அப்போ 100 ரூபாதான் சம்பளம். ஆனால் யாராவது உதவின்னு வந்தா அந்த 100 ரூபாயையும் கொடுத்து மேற்கொண்டு ஐம்பது ரூபாய் கடன் வாங்கியும் கொடுப்பான். அதுவும் தான் கொடுத்ததா சொல்ல மாட்டான். விஜயகாந்த் கொடுத்தாருன்னு சொல்லி கொடுப்பான் என்று சுப்பையாவின் பெருமையை கூறினார் அவர். தற்போது சுப்பையாவின் நிலைமை? ரொம்ப புவர்தானாம். இந்த படத்தில் ஏதோ ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டு செய்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் அத்தனை பாடல்களும் ஒரே தாட் பூட்! பாடியவர்களும், நடனம் அமைத்தவர்களும், படத்தில் ஆடியவர்களும் சேர்த்து பிய்த்து எடுத்திருந்தார்கள். படம் வெளிவந்தால் பாடலுக்காகவே ஓடும் என்கிற எண்ணத்தை தானாகவே உருவாக்கிய அந்த படைப்பாளிகள் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்ததுதான் ஆச்சர்யம்.
வாசன் கார்த்திக்கின் நடிப்பையும் ஆட்டத்தையும் பார்த்து மெய் மறந்த வேந்தர் மூவிஸ் டி.சிவா, இந்த பையன்கிட்ட இப்படியொரு ஃபயரா? நிச்சயமா அவருக்காக ஒரு படம் தயாரிக்கணும் என்று கூறியதுதான் இந்த பாடல் வெளியீட்டு விழாவின் டாப்போ டாப் அதிர்ஷ்டம்!