தெனாலிராமனுக்கு வரிவிலக்கு இல்லை – வடிவேலு அதிர்ச்சி

நீதிமன்ற ஆணை வந்ததிலிருந்தே பேதியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. வரிவிலக்கு ஆணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். அப்படியென்றால் கடைசியாக வரிவிலக்கு வாங்கிய படம் மான் கராத்தே மட்டும்தான். தற்போது திரைக்கு வந்திருக்கும் நான் சிகப்பு மனிதனுக்கோ, விரைவில் வரவிருக்கும் தெனாலிராமன் படத்திற்கோ இன்னும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. அதற்குள் இப்படியொரு உத்தரவு.

இதில் சோதனைக்கு ஆளானது தெனாலிராமன்தான். படத்தை சென்சார் செய்து வரிவிலக்குக்கு முன்பே மனு செய்துவிட்டார்களாம். வரிவிலக்குக்காக படம் பார்க்கும் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு, வெரி குட் என்று பாராட்டியதோடு, தங்கள் கருத்தை அரசுக்கும் சமர்பித்துவிட்டார்களாம். ஆனால் அரசு எந்திரம் மெத்தனமாகவே இருந்துவிட்டது. சர்டிபிகேட் கைக்கு வராமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் வடிவேலுவை பேட்டிக்காக அழைத்தது ஜெயா தொலைக்காட்சி.

மங்கு சனி முடிஞ்சுது. இனி பொங்கு சனிதான் என்று சந்தோஷமாக பேட்டியெல்லாம் கொடுத்துவிட்டு வந்தார் வடிவேலு. ஆனால் அதற்கப்புறமும் தெனாலிராமன் படத்திற்கான வரிவிலக்கு சர்டிபிகேட் வந்து சேரவில்லை. மாறாக, சட்டம்தான் தன் பல்லை நறநறத்தது. வரிவிலக்கு கொள்கை விஷயத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்யாத காரணத்தால், இந்த ஆணைக்கே இடைக்கால தடை விதிக்கிறேன் என்று கூறிவிட்டார் நீதிபதி.

இனி கோடைக்கால விடுமுறை, வாய்தா, தள்ளி வைப்பு என்று ஏகப்பட்ட அலைகழிப்புக்கு பின்தான் சம்பந்தப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு உண்டா, இல்லையா? என்ற முடிவே கிடைக்கும். அதுவரைக்கும் தெனாலிராமனுக்கு தியேட்டர்கார்கள் பொங்க பொங்க பில் வைப்பார்கள். முப்பது சதவீத கழிவு போக மிச்சத்தை வாங்கி என்ன பண்ண போகிறதோ தயாரிப்பு நிறுவனம்.

இந்த யானையை பானைக்குள் அடைக்கணும் என்று வடிவேலு அடம் பிடிப்பதாக படத்தில் ஒரு காட்சி வருகிறது. பட்ஜெட் அரக்கனையும் வரிவிலக்கு வம்பையும் எப்படி கலெக்ஷனுக்குள் அடக்கப் போகிறார்களோ? அதுதான் யானை பானையை விட பெரிய கஷ்டம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாலாதான் அப்படி படம் எடுக்கணுமா? மன்சூரலிகான் அழிச்சாட்டியம்

திடீரென்று கழைக் கூத்தாடிகள் மீதும், கரகாட்டக்காரர்கள் மீதும் கரிசனம் வந்திருக்கிறது தமிழ் பட இயக்குனர்களுக்கு. ஒரு புறம் பாலா கரகாட்ட நாதஸ்வர கலைஞர்களை பற்றி படம் எடுக்க...

Close