ஓ காதல் கண்மணி / விமர்சனம்
மாநராட்சியோ, தேர்தல் ஆணையமோ, மணிரத்னத்தின் ‘பர்த் சர்டிபிகேட்’டை மறுபடியும் சரிபார்க்கும் நேரமிது! இளமை வழியும் கதையும், அதில் குறும்பு வழியும் வசனங்களுமாக தனது நிஜ வயசில் பல வருஷம் பின்னோக்கி திரும்பி காதலித்திருக்கிறார் மணி. கால காலமாக பிற்பற்றப்படும் கலாச்சாரம் என்கிற பூட்டின் மீது, அவர் வீசியிருக்கிற சுத்தியல்… நல்லவேளை, பெரிசாக சேதப்படுத்திவிடவில்லை எவற்றையும்! இல்லையென்றால் தெருவுக்கு தெரு மணிரத்னத்தின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டிருக்கும். அரசு பேருந்துகள் ‘ஐயகோ’ ஆகியிருக்கும்.
பொசுக்கென்று ஒருவனை காதலித்துவிட அதிகக் காரணங்கள் தேவையில்லை. துல்கர் சல்மானை கண்டதும் காதலிக்கிறார் நித்யா மேனன். ஆனால், கல்யாணம் என்கிற அமைப்பின் மீதே வெறுப்பு வருகிற அளவுக்கு அவருக்கு ஒரு முன் கதை இருக்கிறது. இந்தப்பக்கம் துல்கர். அவ்வளவு சீரியசான ஆள் இல்லை. நேரம் போவதற்காக பழகுகிறார்கள். காதல் தீர தீர சார்ஜ் ஏற்றிக் கொள்கிறார்கள். ‘என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா உன்னோடு வந்து தங்கிக்கிறேன். லிவிங் டுகெதர் வாழ்க்கையை அனுபவிக்கலாம்’ என்கிறார் நித்யா. அதுவும் அவர் லண்டனுக்கு படிக்க போகிற வரைக்கும்தான் இந்த லிவிங் டு கெதர். சரி என்று ஒப்புக் கொள்கிறார் அவரும். இருவரும் ஒரே வீட்டில் கும்மாளமடிக்க, ஒருவரை பிரிந்து இன்னொருவர் வாழ முடியுமா என்கிற அளவுக்கு திக் ஆகிறது காதல். திருமணம் என்கிற ஒப்பந்தம் குறித்தான அவர்களின் முடிவு மாறியதா, இல்லையா? க்ளைமாக்ஸ்!
அலைபாயுதேவில் ‘நான் உன்னை காதலிக்கல…’ ‘நீ அழகா இல்ல…’ என்பது போல வசனங்கள் இன்னும் நூறு வருஷங்கள் ஆனாலும் புதுசாக இருக்கும்தானே? அதற்கு ஒப்பான வசனங்களை இங்கு படம் முழுக்க தூவிக் கொண்டேயிருக்கிறார் மணிரத்னம். காதல் என்று வந்துவிட்ட பிறகு, காட்சிகளை வண்ண மயமாக்குவதில் அவருக்கு சிக்கல் வருவதேயில்லை. அந்த அதிசயத்தை இந்த படத்தில் பல இடங்களில் நிகழ்த்துகிறார் அவர். திடீர்னு காதலி கர்ப்பமாயிட்டாளோ? என்கிற சந்தேகத்தை துல்கருக்கு ஏற்படுத்தினால் கூட பரவாயில்லை. நமக்கு ஏற்படுத்துகிறாரல்லவா…? அங்கு நுனி சீட்டுக்கு தள்ளப்படுகிறோம் நாம். அடுத்த காட்சியிலேயே நித்யா விழுந்து விழுந்து சிரிக்க, மொத்த தியேட்டரும் கலீர். இரண்டு நாட்கள் முழுசாக காணாமல் போகும் துல்கர், அதற்கப்புறம் அலட்டிக் கொள்ளாமல் ‘நான் மாமியார் வீட்ல இருந்தேன்’ என்கிறபோது, இளசுகளின் எதற்கும் கவலைப்படாத இறகு வாழ்க்கை அப்பட்டமாகிறது.
இதற்கு முந்தைய மணிரத்னத்தின் அறிமுகங்களையெல்லாம் தூக்கி சாப்பிடுகிறார் துல்கர். மலையாள வாடை அடிக்காமல் அவர் தமிழ் பேசியிருப்பதற்காகவே மெச்சலாம். திடீரென அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு ஊரிலிருந்து அண்ணன் வர, தன்னுடன் தங்கியிருக்கும் காதலியை மறைக்க அவர் படும் பாடு… செம விறுவிறுப்பு.
‘எவ்வளவு வேணுமோ? என்னை இஷ்டத்துக்கு எடுத்துக்கோ…’ என்று சுதந்திரமாக இருக்கிறார் நித்யாமேனன். அந்த கால ரேவதி மாதிரி ஒரு நடிகை கிடைத்திருக்கிறார் என்பதற்காகவே துள்ள விட்டிருக்கிறார் மணிரத்னம். வீடு இல்லை என்று விரட்டும் பிரகாஷ்ராஜ் எப்படி சம்மதிக்க போகிறாரோ என்று நினைக்கையில், சங்கீத பிரியை லீலா சாம்சனை பாடியே மயக்குகிற நித்யாவும் அழகு, அந்த பாடலும் அழகு. கதைக்கு துல்கர், நித்யா, பிரகாஷ்ராஜ், லீலாசாம்சன் என்ற நால்வர் போதும் என்பதால், தேவையில்லாமல் மற்றவர்களை அதிகம் சேமிக்கவில்லை படம். அதுவே பெரிய நிம்மதி. இல்லையென்றால் ஐடி கம்பெனிகளில் கொண்டாட்டத்தை ரசிக்கிற அளவுக்கு அதில் நளினம் எங்கேயிருக்கிறது? கூச்சல் கூச்சல் கூச்சல் மட்டும்தானே?
பிரகாஷ்ராஜுக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் அவருக்கும் சேர்த்து நடித்துவிட்டார் லீலாசாம்சன். கொஞ்சம் கொஞ்சமாக மறதி வியாதியால் அவதிப்படும் அவர், எதற்காகவோ வீட்டை விட்டு வெளியேறி தொலைந்து போய்விட்டார் என்று நினைத்தால், அவர் தேடிப்போனதே பிரகாஷ்ராஜை என்கிற போது, கணவன் மனைவி உறவின் அடர்த்தி புரிகிறது.
படத்தில் மாயாஜாலம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். அதிலும் அவ்வப்போது வந்து போகும் அந்த பெருமழையை அனுபவித்து தியேட்டருக்குள் கடத்துகிறார் மனிதர். அந்த ஆமதாபாத் கட்டிடத்தில் நித்யாவும் துல்கரும் நின்று கொண்டே பேசுகிற ஆங்கிள் அற்புதமான ஷாட். இப்படி ஒன்றல்ல. இரண்டல்ல. படம் முழுக்க பி.சி. பிஸியோ பிஸி!
சர்ச்சில் ரம்யாவின் திருமண ஒப்பந்தத்தையும், அதே சர்ச்சில் துல்கர் நித்யாவின் வசனங்களையும் மாற்றி மாற்றி கோர்க்கிற தந்திரத்தில் கைதட்டல் பெறுகிறார் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்.
பாடல்கள் பலவும் விண்ணைதாண்டி வருவாயா பட ஸ்டைலிலேயே அமைந்தது எதார்த்தமா, வேண்டுமென்றா தெரியவில்லை. பட்… அழகு. அதிலும் ரஹ்மானின் பின்னணி இசை காதலுக்கு இன்னும் வர்ணமடிக்கிறது.
‘ஒரு லைசன்ஸ் கொடுத்துட்டா செய்யறதெல்லாம் சரின்னு ஆயிருமா?’ என்று கல்யாணம் பற்றி ஒரு வசனம் எழுதியிருக்கிறார் மணிரத்னம். அந்த கருத்திலேயே அசையாமல் நின்று அடித்திருந்தால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவர் பக்கம் திரும்பியிருக்கும். கண்மணிகள் பிழைத்துப் போகட்டும். காதல் படத்தால் எதற்கு ஒரு ஆக்ஷன் களேபரம் என்று நினைத்திருக்கலாம்.
‘அலைபாயுதே’ மாதவன் ஸ்டைலில் சொல்வதென்றால், இந்த படம் நல்லாயில்ல… ரசனையா இல்ல…. பொழுதுபோக்கா இல்ல… !
-ஆர்.எஸ்.அந்தணன்
அதுவும் அவர் லண்டனுக்கு படிக்க ///பாரிஸ்க்கு படிக்க போவார்
இதற்கு முந்தைய மணிரத்னத்தின் அறிமுகங்களையெல்லாம் தூக்கி சாப்பிடுகிறார் துல்கர்./// இவர் மணியின் அறிமுகம் இல்லை இதற்கு முன் வாயை மூடி பேசவும் படத்தில் நடித்துவிட்டார்