ஜெ.வை விடுவிக்கக் கோரி… அக்டோபர் 7ம் தேதி தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி வரும் 7ம் தேதி தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. இதனால், தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவிற்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டாங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், வரும் 7ம் தேதி ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அதன்படி, அன்று தமிழகத்தில் 4,500 பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது தனியார் பள்ளி நிர்வாகங்களும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
துச்சாதன்களே…. உங்கள் வேட்டிகள் பத்திரம்!

அம்மாவின் பக்தர்களை மட்டுமல்ல... அதிமுகவின் தொண்டர்களை மட்டுமல்ல... ஆயிரக்கணக்கான நடுநிலையாளர்களை மட்டுமல்ல... அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களையும் அதிர வைத்திருக்கிறது அந்த தீர்ப்பு. உணவு போட்ட அன்னலட்சுமியாக அவரை...

Close