ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீது தெலுங்கு பட இயக்குனர் கடுப்பு
தமிழ் சினிமாவில் மலைப்பு தருகிற விஷயங்களில் ஒன்று தலைப்பு. ஒருவர் வைக்கும் தலைப்பை மற்றவர் களவாடுவதும், அதற்குப்பின் அதை வைத்துக் கொண்டு கள்ளக் கணக்கு போடுவதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள்தான். ஆனால் முன்னணி இயக்குனர் ஒருவர் இன்னொரு முன்னணி இயக்குனரிடம் தலைப்பை பறி கொடுத்துவிட்டு அப்பாவியாய் முழிப்பதுதான் பெரும் கொடுமை.
தலைப்பை தவற விட்டவர் தெலுங்கில் பிரபல இயக்குனரான குணசேகர். இவர் தெலுங்கில் ஒக்கடு என்ற தாறுமாறான ஹிட் படத்தை தந்தவர். தற்போது அனுஷ்காவை வைத்து அதே தெலுங்கில் பிரமாண்டமான படம் ஒன்றை இயக்கி வருகிறார். இவருக்கு தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. விஷால் ஹீரோவாக நடிக்க சம்மதித்த நிலையில் அந்த படத்திற்கு கத்தி என்று பெயரும் வைத்து அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவும் செய்துவிட்டார். தெலுங்கு படத்தில் பிசியாகவே இருந்த குணசேகர் தனது தலைப்பை மீண்டும் புதுப்பிக்க தவறிவிட்டாராம்.
இந்த தலைப்பு காலாவதியாகிவிட்ட தகவலறிந்த ஏ.ஆர்.முருகதாஸ் லபக்கென்று தலைப்பை அமுக்கிவிட்டார். பத்திரிகைகளில் செய்தி வரும்போதுதான் தனது தலைப்பு பறி போன தகவலையே அறிந்தாராம் குணசேகர். முருகதாசிடம் அவர் பேச, நீங்க மறந்திட்டீங்கன்னா நான் ஒண்ணும் செய்ய முடியாதே என்ற பதில்தான் வந்ததாம். ஆந்திராவில் இப்படியில்ல… ஒரு முன்னணி இயக்குனரோ, முன்னணி நடிகரோ, அல்லது முன்னணி நிறுவனங்களோ பதிவு பண்ணி வச்சிருக்கிற தலைப்பு காலம் முடிவடையுற நேரத்தில் சம்பந்தப்பட்டவங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் நினைவூட்டுகிற வழக்கம் இருக்கு. ஆனால் இங்கதான் இப்படி எந்த முறையும் இல்ல என்று புலம்புகிறாராம் ஒக்கடு இயக்குனர்.
இது தொடர்பாக அவர் விஜய்யிடம் பேச, ‘டைரக்டர்ட பேசிக்குங்க’ என்று கூறிவிட்டாராம் அவர். ‘கில்லி என்கிற சூப்பர் டூப்பர் ஹிட்டே ஒக்கடுவால் வந்தது. அவர் போய் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவதா?’ என்று ஆந்திராவில் அனலடிக்கிறதாம்.
ஒக்கடு இயக்குனரை ஏமாற்றியது ரொம்ப ரொம்ப தப்புடு!