நீதுசந்திராவுக்காக காலையிலேயே வந்து காத்திருந்த இயக்குனர்! -புதுப்பிக்கப்பட்ட ஓல்டு கிசுகிசு

உண்மை தெரிஞ்சுருச்சேன்னு ஊர் வாயை மூடுவது ஒரு வகை. தெரியாத உண்மையை கூட வாயை திறந்தாவது திணிப்பது இன்னொரு வகை. இதில் அமீர் செய்தது எந்த வகை என்பது அவருக்கே வெளிச்சம். ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, ‘அமீருக்கும் நீதுவுக்கும் ஒரு இதுவாமே?’ என்று ஊடகங்கள் உப்புக்கண்டம் போட்டுக் கொண்டிருந்தன. ‘நேற்றோடு நீ சொன்ன பேச்சு காற்றோடு போயாச்சு’ என்று அந்த கிசுகிசுவே அணைந்து ஆறியும் போச்சு. அதைதான் மீண்டும் ‘கிளப்பிவிட்டார்’ அமீர். இடம்- சத்யம் காம்ப்ளக்ஸ். நிகழ்ச்சி- திலகர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

இந்த நிகழ்ச்சிக்கு நீது சந்திராவும் வந்திருந்தார். அமீர் பேசும்போது, ‘இந்த படத்தின் ஹீரோவும் எனக்கு பழக்கமில்லை. டைரக்டரும் எனக்கு பழக்கமில்ல. படத்தை தயாரிப்பாளர் தாணு வாங்கியிருக்கார் என்பது கூட இங்க வந்த பிறகுதான் தெரியும். அப்புறம் நான் ஏன் இங்கு வந்தேன். அதுக்கு காரணம் என்னோட ரெண்டு வருஷமா பழகிட்டு வர்ற நீது சந்திராதான். நான் இந்த நிகழ்ச்சிக்கு காலையிலேயே ஒரு மணி நேரம் முன்னாடி வந்துட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடியிலேர்ந்து போன் மேல போன் பண்ணிகிட்டு இருந்திச்சு நீது. நான் இந்த நிகழ்ச்சிக்கு வர்றேன். நீங்க வந்துருங்கன்னு சொல்லிகிட்டேயிருந்திச்சு. நான் இங்கு வந்து சேர்றதுக்குள்ள அவ்வளவு போன். அதனால்தான் முன்னாடியே வந்து கார் பார்க்கிங்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். மற்றவங்க நான் அந்த பொண்ணுக்காகதான் வந்தேன்னு சொல்லிட கூடாதேன்னுதான் கரு.பழனியப்பன் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு உள்ள வந்தேன்’ என்றார். (ஆஹா… உங்களுக்கு நீங்களே பத்த வச்சுகிட்டீங்களே அமீர் சார்)

அப்புறம் வழக்கம் போல அமீரின் பேச்சில் அநியாயத்துக்கு சூடு. இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார் கட்டை பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர். தலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும் போது அதைக்காப்பற்ற வேண்டும். தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது: எனவே தலைவர்கள் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்’ என்றார் அமீர்.

இயக்குனர் கரு.பழனியப்பன் எந்த விழாவுக்கு வந்தாலும், நிருபர்களுக்கு தீனி போடாமல் செல்வதேயில்லை. இந்த நிகழ்ச்சியிலும் அவர்தான் விஷய ஞானத்தோடு பேசினார். வரும்போது பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்காக எடுத்துச் செல்வதை பார்த்தேன். முதன் முதலாக 1895 ல் இந்த பிள்ளையார் ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்ததே திலகர்தான். அதற்கு காரணம் இருந்தது. இதுபோன்ற இடங்களில்தான் எல்லாரும் கூடி பேச முடியும் என்பதற்காக உருவாக்கினார் அவர். சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் பலர் இருந்தாலும், வெள்ளையனின் மீது வெடிகுண்டு வீசியதை ஆதரித்து பேசியவர் அவர்தான். சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் அவர். அதனால்தான் அவருடன் இருந்த தலைவர்களின் பெயர்களையெல்லாம் தமது பிள்ளைகளுக்கு வைக்காமல் திலகர் என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்கள் தமிழ்நாட்டில். அந்த திலகர் பெயரில் வருகிற படம் இது. வெற்றி பெறட்டும் என்று வாழ்த்தினார்.

பின்குறிப்பு- பாடல்கள் மற்றும் ஹீரோ எப்படி? தமிழ்சினிமாவுக்கு அடுத்த ஆக்ஷன் ஹீரோ ரெடி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ தொலைச்சுருவேன்.. ‘ ஐ ட்ரெய்லரை கசியவிட்டவர்களை காய்ச்சி எடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன்

கோடம்பாக்கத்தில் திரும்புகிற இடத்திலெல்லாம் ஒரே ஆச்சர்யம்! ‘நேற்று ஐ பட ட்ரெய்லர் பார்த்தேன். பிரமாதம்ப்பா...’ இந்த வார்த்தைகளை யாராவது நிருபர்களோ, அல்லது மீடியேட்டர்களோ, அல்லது விநியோகஸ்தர்களோ சொல்லிக்...

Close